அரசு என்பது மத, ஜாதி, நிற, இன அடையாளங்கள் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும். அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு இதை நோக்கிய பயணம் தெளிவானதாக இருந்தது.
தமிழ்நாட்டின் நிறத்தை மாற்றிய செல்வி ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் இது மாறியது. அவர் தேர்தல் பரப்புரைக்குப் புறப்படும்போது பார்ப்பனப் புரோகிதர்களை வைத்து பூஜை செய்வதை வெளிப்படையாகவே செய்தார். ஒரு முறை வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தவர் ராகுகாலம் முடிவுக்காக ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே 15 நிமிடங்கள் காத்திருந்தார். அவர் நினைத்திருந்தால் நேரத்தைக் கணக்கிட்டு இன்னும் தாமதமாக வீட்டிலிருந்து புறப்பட்டு இருக்க முடியும். தன்னுடைய மத நம்பிக்கை வெளிப்பட வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுச் சாலையில் காத்திருந்து செய்தி ஆக்கினார்.
அறிஞர் அண்ணா காலத்தில் அடிக்கல் நாட்டு விழாவாக இருந்த மதச்சார்பற்ற நிகழ்வுகளை பூமிபூஜையாக மாற்றியது அதிமுக அரசு. எல்லா அடிக்கல் நாட்டு விழாக்களும் பார்ப்பனப் புரோகிதர்கள் பூஜை செய்ய நடத்தப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த பிறகு இந்நிலை மாறும் என்று நினைக்கிறோம். தருமபுரி மாவட்டம் ஏரியூரில் நடந்த அரசு விழாவில் (16.7.2021) பார்ப்பனப் புரோகி தரைக் கொண்டு பூமி பூஜை நடத்தப் பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு இதனை உடனே கவனிக்க வேண்டும். அரசு நிகழ்வுகள் மதச் சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
மருத்துவர் ஆர்.செந்தில்
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்
No comments:
Post a Comment