‘நீட்' தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

‘நீட்' தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்க!

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை

சென்னை, ஜூலை 17- பிரதமர் மோடி தலைமையில் முதல மைச்சர்களுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் நீட் தேர்வை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினார். மேலும், கூடுதல் தடுப்பூசிகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டுமெனவும் கோரினார்.

பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (16.7.2021) காணொலி மூலமாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆற்றியஉரை வருமாறு,,

பிரதமர் அவர்களே,

பிற ஒன்றிய அமைச்சர் பெருமக்களே,

மாநில முதலமைச்சர்களே,

ஒன்றிய, மாநில அரசுகளின் மூத்த அலுவலர்களே,

வணக்கம்!

கரோனா தடுப்புப் பணிகளில் இருந்து தாங்கள் பெற்ற மேலான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பெருந்தொற்றைச் சமாளிக்கும் கடினமானபணியைப், புதிதாகப் பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளைக் குறைத்து, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நெருக்கடியைச் சமாளிக்க

மாண்புமிகு பிரதமர் அவர்களே, தங்களது நேரடித் தலையீட்டைக் கோரும் சில முக்கியமான விவகாரங்களை உங்கள் கனிவான கவனத்திற்குக் கொண்டு வர விரும்பு கிறேன். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, எமது அரசு 6 விழுக்காட்டில் இருந்து முழுமையாகத் தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசிபற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றி கரமாக ஏற்படுத்தியுள்ளது.  இதனால், தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்கக் கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்சி னையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன். 

ஒன்றிய அரசு விரிவுபடுத்தவேண்டும்

இரண்டு கோடி குடும்பங்களுக்கு, இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாயை கரோனா நிவாரணத் தொகையாக கொடுத்துள்ளோம். மேலும், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பையும் இந்தக் குடும்பங்களுக்கு வழங்கி யுள்ளோம். ஒன்றிய அரசு முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கும் கூடுதல் அரிசியை அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் தமிழ்நாடு அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதைப் போன்று, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர் களுக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்

அடுத்ததாக, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கரோனா தொடர்பான அனைத்துப் பொருள் களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதனைக் கனிவுடன் பரிசீலிக்கவும். மூன்றாம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அத னைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள் வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப் பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, மாண்புமிகு பிரதமர் அவர்கள் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இப்பெருந்தொற்றைக் கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, உங்களோடும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் காணொலியில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment