பெரியாருடைய இயக்கம் ‘ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!'
பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-3: தமிழர் தலைவர் விளக்கவுரை
சென்னை, ஜூலை 1 இந்த இயக்கம் பல்வேறு வெற்றிகளைக் கண்டிருக்கிறது; எதிர்ப்புகளைக் கண்டிருக்கிறது; எதிர்நீச்சல் அடித்திருக்கிறது. பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அதனை வெளிப்படையாக சொல்லியுமிருக்கிறது. பெரியார் அவர்கள் எதையும் மறைத்து சொன்னதே கிடை யாது; பெரியாருடைய இயக்கம் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் போன்றது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-3
கடந்த 27.5.2021 மாலை 7 மணியளவில் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் மூன்றாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.
ஆய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
200 ஆண்டுகள் ஆனாலும், அந்தத் தரவுகள் என்றைக்குமே பயன்படும்!
அய்யாவைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால், அவருடைய உரைகள் நமக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன; கட்டுரைகள் பாதுகாப்பாக இருக்கின்றன; குடிஅரசு, விடுதலைக் கருவூலங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன. இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும், அந்தத் தரவுகள் என்றைக்குமே பயன்படும்.
இதுபோன்று மற்ற புரட்சியாளர்களுக்கு, மற்ற தலைவர்களுக்கு, பெரிய கருத்தாளர்களுக்கு எல் லாம் இல்லை.
புத்தருடைய தம்ம பதம் போன்ற கருத்துகள் எல்லாம்கூட, பின்னாளில் வந்தது - ஏனென்றால், அந்தக் காலத்தில் எழுத்து வடிவம் போன்றவை யெல்லாம் கிடையாது.
ஆனால், தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில், அப்படியில்லை.
மாறாக, சிறிது காலத்திற்கு முன்பாக ஒரு கருத்து - கடவுள் மறுப்புபற்றி ஒரு பிரச்சினை; பெரியார் அப்படி நடந்துகொண்டாரா? என்கிற ஒரு வாதப் பிரதிவாதம் கிளம்பியது.
அப்பொழுது உடனடியாக நாம், பெரியாருடைய உரையை அப்படியே ஒலிப்பதிவு நாடாவில் இருந்து எடுத்துப் போட்டு, அதற்கு மறுப்பு சொன்னவுடன், அந்தப் பிரச்சினை தீர்ந்துவிட்டது.
கடவுள் மறுப்பு வாசகம்பற்றிய வழக்கு!
அதுமட்டுமல்ல, அண்மையில் உயர்நீதி மன்ற அமர்வு முன் ஒரு வழக்கு வந்தது.
தந்தை பெரியார் அவர்களின் சிலைக்குக் கீழே பீடத்தில் இருக்கின்ற கடவுள் மறுப்பு வாசகங்களைப்பற்றி திடீரென்று புதிதாக ஒருவர் வியாக்கியானம் செய்தார். அவர் யாருடைய தூண்டுதலில் செய்தார் என்பது நமக்குத் தெரியும். பா.ஜ.க., மற்றவர்கள் எல்லாம் தூண்டிவிட்டு, என்மீது வழக்குத் தொடுத்திருந்தார்.
என்ன வழக்கு என்றால், அந்த வாசகங்களைப் பெரியார் சொல்லவே இல்லை; வீரமணிதான் சொன்னார் என்று, எனக்குத் ‘தேவையில்லாத பெருமையை' உண்டாக்கவேண்டும் என்று நினைத்தார் போலும்!
அப்பொழுது, "இல்லை, அந்த வாசகங் களை அய்யா அவர்களே சொன்னார்" என்பதற்கு ஆதாரத்தோடு, அவர்களுடைய கையெழுத்தில் எழுதப்பட்ட தகவல்கள், தரவு களையெல்லாம் எடுத்து வைத்து, தலைமை நீதிபதியாகஇப்பொழுதுகேரளாவில்இருக்கக் கூடியஜஸ்டீஸ் மணிக்குமார் அவர்களு டைய தலைமையில், இப்போது டில்லி உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய திரு.சுப்பிர மணியமூர்த்தி ஆகியோருடைய அமர்வில், அந்தக் கருத்துகள் மறுக்கப்பட்டன.
எனவே, நமக்கு இப்பொழுது ஒரு பெரிய வாய்ப்பு. இன்னும் நம்முடைய அறிஞர் பெருமக்கள், திராவிடச் சிந்தனையாளர்கள் - மின்னணு துறையில், இவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கருதக்கூடியவர்கள் - டிஜிட்டல் லைப்ரரி மூலமாக பாதுகாக்கவேண்டும் என்று சொல்கிறவர்களையெல்லாம் - அந்த பாது காப்பு முயற்சிகளில் எல்லாம் நாம் ஏராளம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதை நாளும் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம். இதுபோன்று எதிர்காலத்தில் வந்தாலும்கூட,அவற்றிற்குஉடனடியாகப்பதில் சொல்லக் கூடிய அளவிற்கும், மறுப்புகள் சொல்லக்கூடிய அளவிற்கும், திரிபுவாதச் சூழல், புகைகள் இங்கே மூடாமல் இருப்பதற்கும், ஏற்பாடுகள் இருக்கின்றன.
ஆகவே, இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், இது மிகவும் முக்கியமானது.
பொது உரிமையை வலியுறுத்திய தந்தை பெரியார்!
அடுத்து நம்முடைய பொதுவுடைமை இயக்கம் என்று சொல்லுகின்ற நேரத்தில்,
அய்யா அவர்கள் பொது உரிமையை வலியுறுத் தினார்கள்.
பொது உரிமை, சமத்துவம், படிப்பதற்கு உரிமை, நடப்பதற்கு உரிமை, சொத்துரிமை, அதேபோல, எல்லா துறைகளிலும் உரிமை, தொடக்கூடிய உரிமை - மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நேரத்தில், முதலில் நமக்கு அந்த மனித உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்று சொல்லக் கூடிய வகையில்தான், பொது உரிமையா? பொதுவுடைமையா? என்று சொல்லும்பொழுது, பொது உரிமை முன்னாலே வைக்கப்படவேண்டும் என்றார்கள்.
ஏனென்றால், மனுதர்ம காலத்தில், மனுதர்மம் பாய்ந்திருக்கக்கூடிய ஒரு குலதர்ம சமுதாயத்தில், இது மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினார்கள்.
இயல்பாக, பொதுவுடைமை இயக்கம் வேறு - திராவிடர் கழகம் வேறு அல்ல.
மதம் பிடிக்காதவர்கள் நாங்கள்!
ஆனால், அந்தப் பிரிவினை எந்த இடத்தில் வருகிறது என்றால், இந்த இடத்தில்தான் வருகிறது.
புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதுபோன்று, இந்த நாட்டில் எண்ணிலா மதங்கள் எப்படிப்பட்டன என்று சொன்னால், ‘‘கந்தகக் கிடங்கில் கனலின் கொள்ளிகள்'' என்பதுதான்.
கந்தகக் கிடங்கில் நெருப்பு வைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்றுதான் இந்த நாட்டில் இருக் கிறது.
ஆகவே, அதனை எதிர்த்துச் சொல்லுகின்ற நேரத்தில், மனித உரிமைகளை முன் வைத்தார்கள்.
சுயமரியாதை இயக்கம் அதற்காகத்தான் பிறந்தது. சுயமரியாதை இயக்கத்தினுடைய வெற்றிகள் எப் படிப்பட்ட சூழலில் அமைந்திருக்கின்றன என்பதை சொல்லுகின்ற நேரத்தில் நண்பர்களே, அய்யா அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்நீச்சல் போட்டுத்தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
1925 என்று அய்யா அவர்களே
உறுதிப்படுத்துகிறார்!
1925 இல் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிக் கிறார்கள். 1925, 1926 என்று ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு குழப்பம் இருக்கிறது. 1925 என்று அய்யா அவர்களே
உறுதிப்படுத்துகிறார்.
ஏனென்றால், ‘குடிஅரசு' இதழை எப் பொழுது தொடங்கிவிட்டாரோ, அப்போதே சுயமரியாதை இயக்கம் தொடங்கிவிட்டதாகக் கொள்ளலாம். சுயமரியாதை இயக்கம் என்பது கட்சியல்ல - அது ஒரு இயக்கம்! இந்தத் தேதியன்று காலையில் தொடங்குகிறோம் என்று அழைப்பிதழ் கொடுத்து தொடங்கப்பட்டதல்ல.
சுயமரியாதை இயக்கத் தத்துவங்களும், கொள்கைகளும், கருத்துகளும்தான் முக்கியம்.
அவருடைய சுயமரியாதை என்பது இருக் கிறதே, அது சேரன்மாதேவி குருகுலத்திலி ருந்தே தொடங்கிவிட்டது. வைக்கம் போராட்டத் திலேயே அது ஆழமாக வேரூன்றி விட்டது.
அதற்குமுன்பு,திருப்பூரில்ஜாதிஒழிப்பைப் பற்றிபேசுகின்ற நேரத்தில், ஜாதிக்கு ஆதார மாகஇருக்கின்ற,‘சம்பூகன்கழுத்தைசீவினான் இராமன்' என்று சொல்லக் கூடிய இராமா யணத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று கேள்வி கேட்ட பொழுதே, சுயமரியாதை இயக்கத்தின் கரு தொடங்கிவிட்டது என்றுதான் பொருள். கருக்கொள்ள ஆரம்பித்துவிட்டது என்பதுதான் அதன் பொருள்.
Hair Splitting Arguments
ஆகவே, பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது 1925 ஆ? 1926 ஆ? என்று ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு குழப்பம் தேவையில்லை. இவையெல்லாம் தேவையில்லாத hair splitting arguments என்று ஆங்கிலத்தில் சொல் வார்கள். அதுபோன்று அதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
அய்யா அவர்களே 1931 இல் இதைச் சொல்லும் பொழுது, ஆறாண்டுகளுக்கு முன்பு என்று எழுது கிறார். அப்படியானால் 1925இல்தான் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் என்று அர்த்தம்.
ஆகவே, அய்யா அவர்கள் நிறுவனர் என்ற முறையில், அவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அதை ஏற்பதுதான் முறை.
கழக மேடைப் பேச்சாளர்கள் உள்பட...
அது எவ்வளவு உறுதியாக இருந்து, இந்தக் கொள்கைகள் நீதிக்கட்சியைத் தாங்கி, இன்னொரு பக்கத்தில் சமதர்மத்திற்குப் பொதுவுடைமை கருத்து களுக்கு வேண்டிய வாய்ப்புகளையெல்லாம் தெளிவாக வைத்துக் கொண்டிருக்கின்ற அந்தக் காலகட்டத்தில், எவ்வளவு அழகாகக் கொண்டு வந்திருக்கிறார் என்பதைப் பாருங்கள், படியுங்கள்!
‘‘என்னையே நம்பி இப்பெரும் பழி ஏற்றேன்!''
ஒரே ஒரு பெரியார்- ‘‘என்னையே நம்பி இப்பெரும் பழி ஏற்றேன்'' என்று இராவணன் சொன்ன அந்த உவமையை எடுத்துக்கொண்டு, வரிகளை அப்படியே மாற்றி, ‘‘என்னையே நம்பி இப்பெரும் பணியை ஏற்றேன்'' என்று இலக்கிய ரீதியாகப் பயன்படுத்தினார் அல்லவா? எனக்கு அதுபற்றி கவலையில்லை. அந்தத் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது. அதுதான் அவரை வாழ வைத்தது. இதை இன்றைய இளைஞர்களாக இருக்கக்கூடிய, மாணவர்களாக இருக்கக்கூடிய, நடுத்தர வயதுடையவர்களாக இருக்கக்கூடிய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - வயதான எங்களைப் போன்றவர்களைவிட! நாங்கள் உணர்வால் இளைஞர்கள் என்பது வேறு செய்தி. இந்தப் பாடத்தைத்தான் உங்கள் முன்னால் வைத்து, இந்த உரையை நிறைவு செய்யவிருக்கிறேன்.
பெரியார் அவர்கள் எதையுமே மறைத்து சொன்னதே கிடையாது!
இந்த இயக்கம் பல்வேறு வெற்றிகளைக் கண்டிருக்கிறது; எதிர்ப்புகளைக் கண்டிருக்கிறது; எதிர்நீச்சல் அடித்திருக்கிறது. பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அதனை வெளிப்படையாக சொல்லியுமிருக்கிறது. பெரியார் அவர்கள் எதையும் மறைத்து சொன்னதே கிடையாது.
1931 சென்னையில், மவுண்ட் ரோடில் அய்யா அவர்கள் பேசியது ‘குடிஅரசு' இதழில் பதிவாகியிருக்கிறது.
20.3.1931 இல் வெளிவந்த அந்த சொற்பொழிவில், இந்த இயக்கம், இயக்கத்தினுடைய செயல்பாடுகள், இயக்கம் சந்தித்த விளைவுகள் - இவை அத்தனை யையும்பற்றி, இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்?
இன்றைக்கு நாம் 90 ஆம் ஆண்டில் இருக்கிறோம்; அதை நாம் பார்க்கின்றபொழுது, வியப்பாக இருக் கிறது.
ஆனால், அன்றைக்கு இயக்கத்தைத் தொடங்கி யவர்கள் எப்படி தொடங்கினார்கள் என்பதை யெல்லாம் இங்கே வரவேற்புரையாற்றிய கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் எடுத்துச் சொன்னார்.
அய்யா அவர்கள் சொல்கிறார், பல நேரங்களில் ரொம்ப இயல்பாக, மிகச் சாதாரணமாக சொல்வார். ஆனால், அந்தக் கருத்து எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதற்கு உதாரணத்தைப் பாருங்கள்,
உண்மை விளக்க அச்சகம்
பச்சை உண்மையானது; "உண்மை விளக்க அச்சகம்" என்றுதான் ‘குடிஅரசு' அச்சகத்திற்குப் பெயர்!
எஸ்.ஆர்.கண்ணம்மாள் மற்றவர்கள்மீது அரசாங் கம் நடவடிக்கை எடுத்தபொழுது, இந்த அச்சகத் திற்குத்தான் (உண்மை விளக்க அச்சகத்திற்கு) நோட்டீஸ் வந்தது.
உண்மை நாடுவோர் சங்கம் - (Truth Speakers Association) என்றே அவர்கள் உருவாக்கி வைத் திருந்தார்கள்.
அய்யா பேசுகிறார், கேளுங்கள்!
"பச்சை உண்மையானது; மக்களுக்கு எப்பொ ழுதும் கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப் தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்."
பச்சையாக உண்மையைப் பேசினால் யாரும் விரும்பமாட்டார்கள். ஏனென்றால், அது ஸ்கேன் செய்து காட்டுவது போன்றதாகும். ஸ்கேன் இயந் திரத்தில் உடம்பைக் காட்டியவுடன், எந்த இடத்தில் புற்றுநோய்க் கிருமிகள் உள்ளே புகுந்திருக்கிறது என்று தெரியும். அதைத் தெளிவாகக் காட்டும்.
பெரியாருடைய இயக்கம் ‘ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்'
உடலில் எந்த இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை ‘ஸ்கேன்' தெளி வாகக் காட்டும். அதுவரையில் எல்லாம் நன்றாக இருக்கிறது; எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும்.
பிறகுதான் சிகிச்சையை மேற்கொள்ள முடி யும்.
ஓவியக்காரரா? மேலெழுந்தவாரியாகப் பேச லாம்;
புகைப்படக்காரரா? அதில் கொஞ்சம் டச் செய்து, முகத்தை அழகாகக் காட்டலாம்; முடி இல்லாதவர்களுக்குக்கூட முடி இருப்பது போன்று காட்டலாம்.
இவையெல்லாம் ஸ்கேன் ரிப்போர்ட்டில் கை வைக்க முடியாது. பெரியாருடைய இயக்கம் ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் போன்றது.
"பச்சை உண்மையானது; மக்களுக்கு எப்பொழுதும் கலப்பு உண்மையைவிட அதிக மான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.
உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்பொழுதும் பேசுகின்றவனுக்கும், பேச்சைக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.
திருப்தி உண்டாக்கும்படி செய்துகொள்ள லாம்; ஆனால், உண்மையைப் பேசுவதின்மூலம் அப்படி செய்ய முடியாது."
தொடர்ந்து பேசிக் கொண்டே வந்த தந்தை பெரியார் அவர்கள், இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தும்பொழுது எதிர்ப்புகளால் யாரையெல்லாம் தாக்கினேன் என்ற உண்மையைச் சொல்கிறார். அதற்கு விளக்கம் சொல்கிறார் பாருங்கள், அந்த விளக்கத்தைத்தான் இயக்கத் தோழர்களும் சரி, இயக்கச் செயற்பட்டாளர்களும் சரி, இயக்கப் பேச்சாளர்களும் சரி, இளைஞர்களும் சரி, பொதுவாக உள்ளவர்கள், பெரியாரைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்ற ஆய்வா ளர்களும் சரி புரிந்துகொள்ளவேண்டிய கட்டம் இது.
பெரியார் மேலும் பேசுகிறார்,
"நாமும் இதுவரை என்ன செய்துவிட்டோம் என்று கவலைப்படவில்லை. ஏனெனில், நமது லட்சியம் மிகப்பெரியது. இதற்காக நாம் செய்யும் முயற்சி மிகச் சிறிது."
பெரிதாக உழைத்துவிட்டேன் என்று அய்யா அவர்கள் சொல்லவில்லை. நான் இவ்வளவு தியாகம் செய்துவிட்டேன், அவ்வளவு தியாகம் செய்துவிட்டேன் என்று அவர் சொல்லவில்லை. ஆனால், எவ்வளவோ தியாகம் செய்துவிட்டார்; சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்; சொந்தப் பொருள்களை இழந்திருக்கிறார்; வசதி வாய்ப்புகளைத் தியாகம் செய்திருக்கிறார்.
மற்றவர்கள் எல்லாம் காலணாவிற்குச் செய்தால், அதற்காக நாலணா விளம்பரம் செய்து, நான்கு ரூபாய்க்கு லாபம் அடையவேண்டும் என்று நினைப் பார்கள்.
அடக்கம் அமரருள் உய்க்கும்...
ஆனால், பெரியாருடைய தன்னடக்கம், தத்துவ ரீதியாக இருக்கக்கூடிய எதையும் மிகைப்படுத்தாமல் சிந்திப்பது; அதேநேரத்தில் மிகுந்த அடக்கத்தோடு, மேலே செல்லச் செல்ல அடக்கம் அமரருள் உய்க்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு,
‘மலையினும் மாணப் பெரிது‘ என்பதுதான் மிகவும் முக்கியம்.
நிலையில் உயர்ந்தாருடைய நிலை மலையினும் மாணப் பெரிது என்பதை இதில் பார்க்கலாம்.
நாம் செய்யும் முயற்சி மிகச் சிறிது. இதனுடைய கஷ்டம், இதனுடைய நஷ்டம் நமக்குப் பெரிதல்ல.
தன்னுடைய சொந்தப் பணத்தில் கழகப் பேச்சாளர்களுக்குப் பயணச் சீட்டுகளை வாங்கி...
உதாரணமாகப் பார்த்தீர்களேயானால், தன்னுடைய சொந்தப் பணத்தில் கழகப் பேச்சாளர்களுக்குப் பயணச் சீட்டுகளை வாங்கி, பிரச்சாரத்திற்கு அனுப்பு வார். ஏற்கெனவே இந்தத் தகவலை நான் பல உரைகளில் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
சாப்பாட்டு டிக்கெட் போன்று பயணச் சீட்டு டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்துப் பேச்சாளர்களை ரயிலில் பயணம் செய்ய வைத்திருக்கிறார்.
அழகிரியாக இருந்தாலும், பொன்னம்பலனார் அவர்களானாலும், நாகை காளியப்பன் அவர் களானாலும் இன்னும் பலருக்கும் பயணச் சீட்டு எடுத்துக் கொடுத்து அனுப்புவார்.
(தொடரும்)
No comments:
Post a Comment