அரசு அமைக்கும் எந்த குழுவிற்கும் பிரச்சினை குறித்து பரிந்துரை மட்டுமே செய்திட முடியும் என்றும் அதனை அரசு ஏற்கவோ, நிராகரிக்கவோ அல்லது மாற்றி அமைத்துக் கொள்ளவோ உரிமை உண்டு என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் பரிந்துரைகள் மக்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் உகந்ததாக இருந்தால், அது நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும். இவையெல்லாம் தெரிந்தே ஒரு வழக்கு.
ஒவ்வொரு குழு அமைக்கும் போதும் அது குறித்து ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பு இருந்தால், அவர்கள் ஒப்புதல் பெற்றுத்தான் குழு அமைக்க வேண்டுமா? என்ன.
இதே உச்ச நீதிமன்றம் மார்ச் 2021இல் அளித்த தீர்ப்பில், குடியுரிமை திருத்த மசோதா குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் ஒன்றிய அரசுக்கு எதிராக கேரளா, மேற்கு வங்க சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிட உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது.
இத்தகைய தீர்ப்பு இருக்கையில், ஒரு குழு அமைக்க எதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை?
அரசமைப்புச் சட்டத்தில் கல்வி குறித்து மாநிலங் களுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? அதுவும் பல்கலைக்கழகம் குறித்தும், மாணவர்கள் சேர்க்கை குறித்தும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கையில், ஒன்றிய அரசின் ஒரு துறை எங்ஙனம் அதிலே நுழைந்து, இல்லாத அதிகாரத்தை உருவாக்கி செயல்படுத்த முடிகிறது?
தமிழ்நாட்டில் ஏற்கெனவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் 2007இல் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற Tamil Nadu Admission in Professional Educational Institutions Act, 2007 சட்டத்திற்கு என்ன மரியாதை? அச்சட்டத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதே.
ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து சட்டம் இயற்றவே அதிகாரம் இல்லை என்ற நிலையில், அதனை நாம் விரிவாக பேச வேண்டிய தேவை உள்ளது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில உரிமை பேசும் அனைத்து கட்சி களையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம், அவசரம் உள்ளது.
-கோ.கருணாநிதி
No comments:
Post a Comment