தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் உறுதி: டில்லியில் அமைச்சர் துரைமுருகன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் உறுதி: டில்லியில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை,ஜூலை17- தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் கருநாடக அரசுஅணை கட்ட அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதி அளித்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கருநாடக அரசு இறங்கியுள்ளது. இதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் முறையிடுவது என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சிகள் சார்பில் ஆர்.எஸ்.பாரதி (திமுக), டி.ஜெயக்குமார் (அதிமுக), கோபண்ணா (காங்கிரஸ்), பால்கனகராஜ் (பாஜக), வைகோ (மதிமுக), ஜி.கே.மணி (பாமக), தொல்.திருமாவளவன் (விசிக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), தி.வேல்முருகன் (தவாக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சின்னராஜ் (கொமதேக), பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்) ஆகியோர் கடந்த 15ஆம் தேதி டில்லி புறப்பட்டுச் சென்றனர்.

துரைமுருகன் தலைமையில்...

டில்லியில் முதல்கட்டமாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் ஆலோசனைகூட்டம் நேற்று (16.7.2021) காலை நடந்தது. இதில் தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன்,தமிழ்நாடு பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரிதொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது, மேகதாது  அணை கட்ட கருநாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று துரைமுருகன் வலியுறுத்தினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேததாது திட்டம் செயல்படுத்தப்படாது என்று அவர்களிடம் ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

மேகதாதுவில் கருநாடகா அணை கட்ட ஒன்றிய அரசு எந்த வகையிலும் துணைபோகக் கூடாது என்று ஒன்றிய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சரிடம் தெரிவித்தோம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கருநாடகாவுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையும் சுட்டிக்காட்டினோம். அப்போது ஒன்றிய அமைச்சர், ‘‘எந்த வகையிலும் மேகேதாட்டு அணையை அவர்கள் கட்டமுடியாது. நாங்கள் விதித்த கட்டுப்பாடுகளில் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கவேண்டுமானால், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் ஒத்துழைப்பை பெற்றுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். நிபந்தனைகளை அவர்கள்பூர்த்தி செய்யாததால், கருநாடகாதந்துள்ள திட்ட அறிக்கையை ஏற்கமுடியாது. எனவே அணை கட்டுவதற்கான கேள்வியே எழவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

நாங்கள் வந்த காரியம் வெற்றி. மேலும், கருநாடகா அனுமதி கேட்டால் தரமாட்டோம். எனவே, ஒன்றியஅரசின் நிபந்தனை நிறைவேறாது.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

தலைவர்கள் கருத்து வைகோ (மதிமுக): ‘

காவிரியில் கீழமை பகுதிகளுக்கு முன்னுரிமை உண்டு. மேகதாது அணைகட்ட முடியாதுஎன்கின்றனர். ஆனால், அணை கட்டுவதற்கான பொருட்களை அங்கு குவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. ஒன்றிய அரசு இதில் இரட்டை வேடம் போடுகிறதா என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.

கோபண்ணா (காங்கிரஸ்):

கருநாடகாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை, தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல் நடைமுறைக்கு வராது என்றஉறுதியை நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் வழங்கினார். ஒருவேளை, கருநாடகாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மூலம் தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்படும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத்தான் அனுமதி கொடுத் துள்ளீர்கள். இவ்வாறு அனுமதி கொடுக்கவே உங்களுக்கு அதிகாரம் இல்லை’’என்று சுட்டிக்காட்டினோம். ஒன்றியஅரசு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இதன்மூலம் கருநாடகாவில் அரசியல் ஆதாயம் தேடலாம் என்பதாலுமே கருநாடக அரசு இந்த முயற்சியில்ஈடுபட்டுள்ளது.

தொல்.திருமாவளவன் (விசிக):

ஒன்றியஅமைச்சருடனான சந்திப்பின்மூலம், மேகதாது அணை கட்ட கருநாடக அரசுக்கு அனுமதி கிடைக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், ‘பில்லிகுண்டு - கபினி இடையிலான பகுதியை தமிழ்நாடு உரிமை கொண்டாட முடியாது. தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கானதுஎன்று கூறிய அவர், தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் கருநாடகா மேகதாது அணை கட்ட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒன்றிய அரசின் நிலைப்பாடு தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment