‘நீட்' தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

‘நீட்' தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்

நீதிபதி .கே.ராஜன் குழு அறிவிப்பு

சென்னை, ஜூன் 18 ‘நீட்தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம் என்று நீதிபதி .கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத் துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத்தேர்வின் மதிப்பெண் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்து, இன்றளவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா? என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவற்றிற்கான சட்டவழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரை களை அளிக்க ஒரு ஆணையத்தை கடந்த 10 ஆம் தேதி அறிவித்தது.

அதன்படி, இந்த ஆணையத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில், 9 பேர் கொண்ட உயர் நிலைக்குழுவை அமைத்தும், இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக அதில் உள்ள மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குநர் இருப்பார் என்றும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவும் பிறப்பித்தார்.

இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் கடந்த 14 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. அதில் சில கருத்துகள் பேசப்பட்ட நிலையில், மருத்துவக்கல்வி இயக்ககத்திடமும் சில ஆவணங்களை கேட்டு பெற்று இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது இதுதொடர்பாக பொதுமக்களும் கருத்து தெரிவிக்க ஓர்அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அரசு அமைத்த ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின்மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி .கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, நீதிபதி .கே.ராஜன் உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3 ஆவது தளம்), கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியிலோ வருகிற 23 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment