பார்ப்பனர்கள் பசப்புவதைப் பார்த்து அவர்கள் அந்த ஜாதிப் பற்றோ, இனப்பற்றோ இல்லாதவர்கள் என்று நம்பினால் அவர்களை விட கடைந்தெடுத்த ஏமாளிகளை எங்குத் தேடினாலும் கண்டுபிடிக்கவே முடியாது.
‘துக்ளக்’கையும், ‘தினமலரை’யும், ‘தினமணி’யையும் படித்ததற்குப் பிறகும் கூட அப்படியொரு நம்பிக்கை எங்கே இருந்து குதிக்கும்?
ஒரு ‘குமுதம்‘ பார்ப்பனக் கைக்கு மாறியவுடன் ஒவ்வொரு வாரமும் செத்துப் போன - ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று சொன்ன - மனிதப் பண்பே அற்றொழிந்த காஞ்சி சங்கராச் சாரியாரின் அற்புதங்கள் என்று கூறி வாராவாரம் பொய்ம் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிய பிறகும் கூட, பார்ப்பனர்கள் பற்றிக் கண்டிப்பாக ஒரு கணிப்பு ஏற்படத்தான் செய்யும்.
எடுத்துக்காட்டுக்காகத் ‘துக்ளக்‘கை எடுத்துக் கொள்ளலாமா?
திருவாளர் சோ ராமசாமி தனக்குப் பின்னாலே அந்த இதழை நடத்துவதற்கு ஒரு குருமூர்த்தி அய்யரைத்தானே தேடிப்பிடித்து சாவிக் கொத்தைக் கொடுத்துக் கண் மூடி இருக்கிறார்.
அவரும் அக்கிரகாரத்து அடிபிறழாமல், அட்சரம் பிசகாமல் (பூ) நூல் பிடித்து எழுதிக் கொண்டும் இருக்கிறார்.
சில எடுத்துக் காட்டுகளைக் காணலாம்.
கேள்வி: இந்திய மக்கள் குசேலர்கள் ஆகி விட்டது போல் தெரிகிறதே?
பதில்: மக்கள் குசேலர்கள் ஆகி விட்டார்கள். கிருஷ்ணன் எங்கே என்றுதான் தெரியவில்லை. (‘துக்ளக்‘ 9.6.2021, பக்கம் 10)
யார் இந்தக் குசேலர்?
தந்தை பெரியார் கூறுவதைக் கவனியுங்கள்:
“குசேலோபாக்கியானம் என்னும் குசேலர் கதையில் - குசேலருக்கு 27 பிள்ளைகள் என்றும், 27 பிள்ளைகள் பெற்று குலேசர் தரித்திரத்தில் துன்பப்பட்டு - 24 குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் (கடவுள்) இடத்தில் சென்று பிச்சைக் கேட்டதாகவும், கடவுள் ஏராளமாகச் செல்வம் கொடுத்ததாகவும் கதை சித்தரித்த ஆசிரியர் சிறிது கூடப் பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லை. ஒருவருக்கு 27 குழந்தைகள் இருந்தால் அவன் வருஷத்துக்கு 1 குழந்தைப் பெற்று இருந்தால் 20 வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருந்திருக்கும். இந்தக் குழந்தைகளும் சோம்பேறித் தடியன்கள் போல் ஒரு வேலைக்கும் இலாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாகவா இருந்திருக்கக்கூடும்? இப்படி 20 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளை வீட்டிலே வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போய் இருந்தால் அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியன்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலமா?” என்று கேட்டார் தந்தை பெரியார்.
தண்ட சோம்பேறிகள் கதையையும், முட்டாள் கடவுள் கதையையும் ‘துக்ளக்‘ உயிரூட்டுவது எதற்கு? என்ன பலனை ஊட்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
குசேலன்தான் இந்த யோக்கியதை உடையவன் என்றால் இந்தக் கிருஷ்ணன் யார்?
அபிதான கோசம் என்ன சொல்லுகிறது?
“தேவர்களெல்லாம் போய் ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது. இராட்சதர்கள் தொல்லைப் பொறுக்கமுடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்னச் செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்த இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிர்களில் ஒன்று கருப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்; கருப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின” என்று கூறுவது அபிதான கோசம்.
இந்த அருவருப்பான ஆபாசக் கதைகளை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உயிரூட்டிக் கவுரவிக்கப் பார்க்கிறார் என்றால் இந்தப் பார்ப்பனர்களைவிட இந்தக் கதைகளை விட ஆபாச சைக்கோ யாராகத்தான் இருக்க முடியும்?
*********
கேள்வி: அம்மா உணவகம் அம்மா பெயராலேயே செயல்பாட்டில் இருக்கும் என்ற ஸ்டாலின் உத்தரவு பாராட்டுக்குரியதா?
பதில்: அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும், ஈ.வெ.ரா, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்ற மறைந்த தலைவர்களின் வரிசையில் ஜெயலலிதாவும் சேர்க்கப்படுகிறார் என்று தோன்றுகிறது. (‘துக்ளக்‘ 9.6.2021)
ஜெயலலிதாவைப் பெருமைப்படுத்த எண்ணும் போது மட்டும் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளும் தலைவர்களாக குருமூர்த்திகளின் கண்களுக்குத் தெரிகிறது. அதிலும் ஓர் இனப்பற்று வழிவதைக் காணமுடிகிறது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சி போய் தி.மு.க. ஆட்சி வந்தநிலையில் அம்மா பெயரிலேயே அம்மா உணவகம் செயல்பாட்டில் இருக்கும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவைப் பாராட்டும் மனம் இந்தப் பார்ப்பனர்களுக்கு இல்லை என்பதை கவனிக்கத் தவறக் கூடாது.
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இல்லையாம் - வெறும் ஸ்டாலின்தானாம்.
ஈ.வெ.ரா., அண்ணாதுரை என்று எழுதும் இந்தத் ‘துக்ளக்‘குகள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்று எழுதமாட்டார்கள். மாறாக இராஜாஜி என்றுதான் எழுதுவார்கள். சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று எழுதமாட்டார்கள். மஹா பெரியவாள் என்றுதான் சப்புக் கொட்டி எழுதுவார்கள்.
நம்புங்கள், பார்ப்பனர்களுக்குப் பார்ப்பனப்பற்றே கிடையாது - மனிதப்பற்றுதான்.
*********
கேள்வி: பிராமண தர்மத்தைக் கடைப்பிடிப்பது மிகக் கஷ்டமாக உள்ளதே - ஏன்?
பதில்: சோ-வின் “எங்கே பிராமணன்” புத்தகத்தைப் படித்தால் பிராமண தர்மத்தைக் கடைப்பிடிப்பது ஏன் கடினம் என்பது புரிந்து விடும். (‘துக்ளக்‘ 16.6.2021, பக்கம் 26)
அது என்ன பிராமண தர்மம்? நாங்கள் துவி ஜாதிகள் (இரு பிறப்பாளர்கள்), பிர்ம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என்று கூறும் பிறவித் திமிர் தர்மம்தானே!
இந்த 2021லும் பூணூலைத் தரிப்பதன் தாத்ப்பரியம் என்ன?
செட்டியாரும், ஆசாரியாரும், பூணூல் தரிக்கிறார்களே என்று திசை மாற்ற வேண்டாம். மனுதர்மத்தில் அதற்கு இடமில்லை.
சூத்திரன், பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனு, அத்தியாம் 9, சுலோகம் 224 ) என்பதுதானே மனுதர்மம்.
மனுதர்மத்தை நீங்கள்தான் நினைவூட்டுகிறீர்கள் என்று திசை திருப்ப வேண்டாம். எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மனுதர்மத்தைப் பற்றி உண்மை நிலையை எடுத்துக் கூறியதற்காக ‘தினமணி’யிலிருந்து ‘தினமலர்’ தொடங்கி, பார்ப்பனர்கள் வரிசை கட்டி நிற்கவில்யை£?
இதே ‘துக்ளக்‘கில் குருமூர்த்திகளின் குருநாதர் சோ ராமசாமி சுருட்டை ஊதித் ஊதித்தள்ளி எழுதிடவில்லையா?
ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தோடு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளை ஒப்பிடும், ‘போக்கிரித்தனம்’ சங்கரமடத்திலிருந்து வந்து கொண்டு இருக்கிறதே - நாகசாமியின் பேனாவும் இந்த வகையில் நர்த்தனமாடுகிறதே!
‘திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும். ஆம்.!’ என்று குறளுக்குப் பார்ப்பன பரிமேலழகர் உரை எழுதவில்லையா?
பார்ப்பனக் கழிச்சடை மனப்பான்மை மனு மந்தாதா காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. ஹிந்து தர்மத்தைப் பற்றி ‘ஆகா ஊகா’ என்று ஆகாயத்தைப் பிளந்து எழுதும் குருமூர்த்தி வகையறாக்களை பார்த்துக் கேட்கிறோம்!
சனாதன தர்மத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் கிராப்புத் தலை எங்கிருந்து வந்தது? பேண்ட், ஷர்ட், டை எங்கிருந்து குதித்தது? உங்கள் உச்சிக் குடுமி எங்கே, எங்கே?
கிருத்துவர்களை கீழிறக்கமாக ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டே அந்தக் கிருத்துவ வெள்ளைக்காரன் கொடுத்த ஹிந்து என்ற பெயரில் தானே ஓசிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்!
பிராம்மணன் என்று இன்றும் வீராப்புப் பேசுகிறீர்களே - பிராம்மண தர்மம் என்றால் என்ன? எதற்கெடுத்தாலும் மஹா பெரியவாள், என்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும் திருவாளர் குருமூர்த்தியைக் கேட்கிறோம். அந்த மஹா பெரியவாள் பிராமண தர்மம் பற்றி என்ன சொல்லுகிறார்?
“பழைய நாளில் பிராமணன் தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாக கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ‘பிச்சைக்கார பார்ப்பனன் தெரு’ என்று கும்பகோணத்தில் ஒரு தெரு கூட இருக்கிறது.
பிராம்மண சந்நியாசிகள் அன்னப்பிச்சை வாங்குவார்கள். பிராமணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள். மற்ற ஜாதிக்காரர்கள் பிச்சை வாங்குவதில்லை. ‘ஏதாவது வேலை செய்து விட்டு, அதைக் கூலியாகப் பெற்றுக் கொள்கிறேன்’ என்பார்கள்.
இப்பொழுது இவன் செய்கிற காரியம் நல்லதோ, கெட்டதோ அதை அப்படியே மற்றவர்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.” (காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார் உபந்யாசத்தின் முதற்பகுதி - ‘கலைமகள்’ - 1957-1958, பக்கம் 28)
குருமூர்த்தி வகையறாக்களே - குருநாதராக, மஹா மஹா பெரியவாளாக மண்டைக் குள்ளும், மண்டைக்கு வெளியிலும் வைத்து வெண்சாமரம் வீசுகிறீர்களே, அந்த மஹா பெரியவாள் கூறும் பிராம்மண தர்மப்படி பிச்சை எடுக்கத் தயார்தானா?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் மஹா பெரியவாள் என்று ஜெபிக்கும் அந்தக் காஞ்சி சங்கரமட சந்திரசேகரேந்திர சரஸ்வதியே, அவர் சொன்ன பிராம்மண தர்மத்தைத் தன் காலில் போட்டு மிதித்து “பிராம்மணர்களுக்காக ‘நான் கொஞ்சம் கம்யூனல் பேஸிஸில் (வகுப்பு அடிப்படையில்) பேசியாக வேண்டியிருக்கிறது” என்று ‘தெய்வத்தின் குரல்’ பேசுகிறதே - முற்றும் துறந்த முனிவராம் - ஆனால் பிராமணர் களுக்காக கம்யூனலாகப் பேசுவாராம். ஹி.... ஹி.... வெட்கமாவது - விவஸ்தையாவது இந்த வேதியக் கும்பலுக்கு!
No comments:
Post a Comment