பள்ளி மாணவர்களைப் பொது நுழைவுத் தேர்வுகளால் மூழ்கடிக்கப் போகிறோமா?
'இந்து தமிழ் திசை' தலையங்கம்
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்யும் முடிவு மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அவர்களது நலன்களுக்கு எதிராகவே முடியும் என்ற கல்வியாளர்களின் எச்சரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகக் கருத்தில் கொண்டு தனது முடிவை மறுபரிசீலிக்க வேண்டும். உயர் கல்விக்கான எந்தவொரு தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வும் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்படாத நிலையில், 12ஆம் வகுப்புக்கான தேர்வை மட்டும் ரத்துசெய்திருப்பதானது உள்நோக்கம் கொண்டதோ என்ற கல்வியாளர்களின் அய்யப்பாடும் புறக்கணித்துவிடக்கூடியதல்ல. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் தேர்வு குறித்து இரண்டொரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கும் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் திமுகவின் தலைமையிலான அரசு இவ்விஷயத்தில் தனது உறுதிப்பாட்டை மெய்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டுக்கும் உரியது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்துசெய்யப்படும் பட்சத்தில், தேசிய அளவிலான 'நீட்' உள்ளிட்ட தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை, திமுக அரசும் ஏற்றுக் கொண்டு விட்டதாகவே அர்த்தமாகும். புதிய கல்விக் கொள்கையிலிருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் சேர்க்கைக்கும்கூட தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில்,
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் முடிவானது அனைத்துக் கல்லூரிகளையும் பொது நுழைவுத் தேர்வு என்னும் வளையத்துக்குள் கொண்டுவரும் முயற்சியை எளிமைப்படுத்தவும் செய்யலாம். புதிய கல்விக் கொள்கையில் இன்றும் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டுவரும் இந்தக் கூறுகள் நடைமுறைக்குக் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பள்ளி பொதுத் தேர்வுகளை நடத்தி அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரிச் சேர்க்கை நடை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் பாடங்கள் என்று ஒவ்வொரு படிப்புக்கும் மாணவர்கள் தனித்தனியாக ஏகப்பட்ட தேர்வுகளை எழுத வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். எனவே, சிபிஎஸ்இ தேர்வு ரத்து அறிவிப்பைப் பின்பற்றி தமிழக அரசும் அதே முடிவை எடுத்துவிடக் கூடாது.
நோய்த் தொற்றின் வேகம் குறைந்ததும் இன்னும் சில மாதங்கள் கழித்து 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்ற கல்வியாளர்களின் ஆலோசனை களைத் தமிழக அரசு கருத்தில்கொள்ள வேண்டும். முன்கூட்டியே தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்ப் படுத்தலாம். அருகாமைத் தேர்வு மய்யங்களிலேயே தேர்வுகளை எழுதும் வாய்ப்புகளை அளிக்கலாம். முன்களப் பணியாளர்கள் என்ற வகையில் ஏற்கெனவே ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன. 12ஆம் வகுப்புத் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டு அவர்களையும் தொற்றுப் பாதிப்புகளிலிருந்து விடுவிக்கலாம். பாடங்களின் சுமையை மேலும் குறைக்கலாம். வினாத்தாள்களின் கடுமையையும் சற்றே குறைக்கலாம். இதற்காக இன்னும் சில மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். பள்ளிக் கல்வித் துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, பள்ளிப் பொதுத் தேர்வு விஷயத்திலும் தனது முதலடியை அழுத்தமாக எடுத்து வைக்கட்டும்.
நன்றி: 'இந்து தமிழ் திசை' 3.6.2021
No comments:
Post a Comment