‘தமிழ் கேள்வி' இணைய தளத்திற்குத் தமிழர் தலைவரின் பதில்கள்
சென்னை, ஜூன் 17 எதிர்க்கட்சிகளே வியக்கும் அள வுக்கு தி.மு.க.வின் ஒரு மாத கால ஆட்சி சிறப்பாகப் புயல் வேக்தில் செயல்படுகிறது என்பது உள்பட, பல்வேறு கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விரிவான பதில்களைக் கூறினார்.
விவரம் வருமாறு:
‘தமிழ் கேள்வி' இணையதள பகுதியில்...
கடந்த 12.6.2021 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘தமிழ் கேள்வி' இணைய தளத்திற்காகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு காணொலிமூலம் பதிலளித்தார்.
அவரது காணொலிப் பேட்டி வருமாறு:
‘தமிழ் கேள்வி' இணையதள நெறியாளர் செந்தில்வேல் அவர்களுடைய கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பதில்கள் வருமாறு:
நெறியாளர்: வணக்கம்
தமிழர் தலைவர்: வணக்கம்
உங்களுடைய பார்வையில் ஒரு மாத கால தி.மு.க. ஆட்சியின் மதிப்பீடு என்ன?
நெறியாளர்: மகிழ்ச்சி. ‘தமிழ் கேள்வி' சொந்தங் களுக்காக எங்களோடு இணைந்ததில்.
தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு இருந்தீர்கள். திராவிடர் கழகம் தார்மீக ஆதரவையும் தெரிவித்திருந்தது. தேர்தல் பணிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தீர்கள்.
தி.மு.க. ஆட்சி அமைந்து ஒரு மாத காலத்தை நிறைவு செய்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இது டிரைலர்தான். மெயின் பிக்சர் இனிமேல்தான் என்று அமைச்சர் சேகர்பாபு ஒன்றைச் சொன்னார்.
உங்களுடைய பார்வையில் திராவிடர் கழகத்தின் பார்வையில், அவர் குறிப்பிட்ட அந்த டிரைலர் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக, திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கிறதா? எப்படி இருக்கிறது இந்த ஒரு மாத கால ஆட்சியின் மதிப்பீடு?
குறைகாண முடியாத அளவிற்கும், குற்றங்கள் கூற முடியாத அளவிற்கும் அமைந்திருக்கிறது
தமிழர் தலைவர்: எனக்கு மட்டுமல்ல, அவரை எதிர்த்தவர்களுக்கும்கூட அது திருப்தி அளிக்கக் கூடிய அளவிற்கும், குறைகாண முடியாத அளவிற் கும், குற்றங்கள் கூற முடியாத அளவிற்கும் அமைந்தி ருக்கிறது. அது உலகளாவிய நல்ல எண்ணம் உள்ள அத்தனை பேருடைய மதிப்பீட்டையும் பெற்றிருக் கிறது.
இந்த ஒரு மாத காலத்தில், வெல்ல முடியாதவர் களுடைய உள்ளத்தை எல்லாம் வென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.
மற்றவர்கள் எதிர்பார்த்ததைவிட, அவருடைய செயல் வேகம் புயல் வேகத்தை மிஞ்சியிருக்கிறது. ஆகவே, எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றியி ருக்கிறார். எடுத்துக்காட்டாக, அவர் ஏதோ பெட்டி வைத்திருக்கிறார், வித்தை காட்டுகிறார், ஏதோ ‘மந்திர வாதி'போல அவரை வர்ணித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு இருக்கின்ற இடம் தெரியாத அளவிற்கு, ஒரு மாத காலத்திற்குள்ளாக, அவர் தேர்தல் சுற்றுப் பயணத்தின்போது வாங்கிய மனுக்களின் மீதான நட வடிக்கைகளுக்காக ஒரு தனித் துறையை உருவாக்கிய திலிருந்து,
கரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், மருந்து தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு என்பதையெல்லாம் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, அதற்காக எல்லா துறைகளிலும் நல்ல அளவிற்கு,
‘‘இதனை இவனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்''
என்பதற்கொப்ப ஒரு குழுவை அமைத்துக்கொண்டு, சிறப்பாக செய்ததினுடைய விளைவு - இன்றைக்கு ஒரு மாதத்திற்குள்ளாக கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். திமிறுகின்ற காளையை அடக்கு வதைப்போல, விஷக் கிருமிகளையெல்லாம் அடக்கிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவருடைய ஒரு பெரிய சாதனை என்னவென்றால், இதுவரை எதற்குமே பின்வாங்காத - ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறி வராதவர்களைக்கூட - டில்லி அரசைக்கூட தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து மாறி வரக்கூடிய அளவிற்கு கரோனாவிற்கு எதிரான ஒரு யுத்தத்திலே வலிமையான களம் அமைத்து, அவர் வெற்றியும் கண்டு வருகிறார்;
முதலமைச்சரின் செயல் வேகம், புயல் வேகத்தை மிஞ்சியதாக இருக்கிறது
எனவே, அவருடைய செயல் வேகம், புயல் வேகத்தை மிஞ்சியதாக இருக்கிறது. அவருடைய அமைச்சர்களும் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக் கிறார்கள்.
கரோனா மருத்துவக் கவச உடையை அணிந்து கொண்டு, உயிரையும் துச்சமெனக் கருதி, கரோனா நோயாளிப் பிரிவுக்குச் சென்று, அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நம்பிக்கையை ஊட்டுவதுதான் மிக முக்கியம் என்று செயலாற்றுகின்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இது திராவிட இயக்கத்தினுடைய தனிப்பெரும் சாதனை. பெரியாருடைய துணிவு - அண்ணாவினு டைய கனிவு - கலைஞருடைய வேகம் - இவை அத்தனையும் உள்ளடக்கியதாகும்.
ஈழப் போராட்டத்திற்கு எதிரானதா திராவிட சித்தாந்தம்?
நெறியாளர்: டிரைலர் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று உங்கள் கருத்தை சொல் லியிருக்கிறீர்கள்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடக்கக்கூடிய கருத்து மோதல்கள் - முன்பெல்லாம் பத்திரிகைகளில், மேடைகளில் அந்த மோதல்கள் நடக்கும். இன்றைய காலகட்டத்தில், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் நடை பெறுகின்றன.
திராவிட இயக்கத்தின்மீது அல்லது திராவிட சித்தாந்தத்தின்மீது விமர்சனம் வைக்கக்கூடிய தமிழ்த் தேசியவாதிகளுக்கு மறுப்பு சொல்லக்கூடியவர்கள் விடுதலைப் புலிகளினுடைய தலைவர் பிரபாகரனை நோக்கி, கேள்விகள் கேட்பது அல்லது அவரை விமர்சிப்பது என்பது பொருத்தமானதாக இருக்கிறதா?
திராவிட அமைப்பு, திராவிட சித்தாந்தம், திராவிடர் கழகம் இவை பிரபாகரனுக்கு அல்லது விடுதலைப் புலிகளுக்கு அல்லது ஈழப் போராட்டத்திற்கு எதிரானது என்ற ஒரு தோற்றத்தை அது குறிக்கிறதே - நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஈழ விடுதலையை விரும்பிய ஒன்றே!
தமிழர் தலைவர்: நிச்சயமாக - இதை செய்கிறவர்கள் - திராவிடக் கண்ணோட்டத்தை சரியாகப் புரியாத வர்கள் என்பது மட்டுமல்ல - அதைப்பற்றி கவலை யில்லாமல், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளக் கூடிய - விளம்பரம் தேடக் கூடிய வாய்ப்பாக இதைக் கொள்ளலாம் என்று நினைத்து அவர்கள் தேவையற்ற வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
திராவிட சித்தாந்தம் முழுக்க முழுக்க ஈழ விடு தலையை விரும்பிய ஒன்றாகும்.
கலைஞர் அவர்களே, மிகப்பெரிய அளவிற்கு ஈழ விடுதலைக்காக மாநாட்டையே நடத்தினார்கள் என்பதையெல்லாம் அவர்கள் ஏன் மறந்தார்கள் என்று தெரியவில்லை.
பழைய வரலாறுகளை அறியாதவர்கள் அவர்கள்!
அந்த ஈழ விடுதலை யாரால் சாத்தியமாகும் என்பது மட்டுமல்ல - அது பிரபாகரனால்தான் சாத்தியமாகும் என்பது மட்டுமல்ல - மிகப்பெரிய அளவிற்கு அவர்களுக்குத் தொல்லைகள் ஏற்பட்ட நேரத்தில், எல்லா இடங்களிலும் அதற் காக கண்டனப் போராட்டங்களை நடத்திய நேரத்தில், பிரபாகரனுடைய பிள்ளையான பாலச் சந்திரனைக் கொன்ற நேரத்தில்கூட, அதைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமையிலும், திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பிலும்தான் நடந்தன என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரி யாது. அவர்கள் பழைய வரலாறுகளை அறியாத வர்கள்.
ஏதோ தேவையில்லாத ஒரு வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு,அரைவேக்காட்டுத்தனமாக செய்யும் செயல்களை அவர்கள் நிறுத்தவேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், இது விளம்பரம் தேடுகின்ற ஒரு குறுக்குப் புத்தி என்றுதான் கருதவேண்டும். அவர்களைப் பெரிதாக நாங்கள் கருதவில்லை.
திராவிட நாடு கோரிக்கையை கையிலெடுக்கிறதா தி.மு.க.?
நெறியாளர்: எதிர் எதிர் தளமாக இன்றைக்கு இருக்கும் கருத்தியல் தளத்தில் முன்பு திராவிடம் -ஆரியம் என்ற கருத்தியல் தளத்தில், இன்றைக்கு திராவிடம் - தமிழ்த்தேசியமாக மாறி, அந்த சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலை மாறி, இன்றைக்கு வேறு மாதிரியான தளத்திற்கு நகர்ந்துவிட்டது. அது அரைவேக்காட்டுத்தனம் என்ற அளவிற்கு உங்களு டைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தி ருக்கிறீர்கள்.
ஒன்றியம் என்று அழைக்கக்கூடாது. ஒன்றியம் என்று அழைத்தால், ஆட்சியையே கலைத்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; கிட்டத்தட்ட திராவிட நாடு கோரிக்கையை கையிலெடுக்கிறதா தி.மு.க. என்கிற அளவிற்கு, டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களும்கூட அந்த விமர்சனத்தை வைக் கிறார்கள்.
நீங்கள் ஒரு வழக்குரைஞரும்கூட, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியதில் உங்களுடைய பங்களிப்பு பெரும் பங்களிப்பு. சட்ட ரீதியாக ஒன் றியம் என்ற வார்த்தை - மீண்டும் திராவிட நாடு கோரிக்கையை முன்வைப்பது போன்ற ஒன்றா? அதைப்பற்றிய உங்களுடைய பார்வை என்ன?
இப்பொழுது ஒன்றியம் என்று வலியுறுத்தவேண்டிய அவசியம் என்ன?
இன்னொன்று, இன்னொரு தரப்பு முற்றிலும் வேறுபட்ட ஒரு கருத்தை சொல்லுகிறார்கள்; ஒன்றியம் என்று கூட நாம் சொல்லக்கூடாது. ‘பெடரேசன் ஆஃப் ஸ்டேட்' என்பதுதான் நமது இலக்கு என்ற வாதமும் இருக்கிறது. இதுகுறித்து உங்களுடைய கருத்து?
அரசமைப்புச் சட்டத்தில் என்ன பெயர் இருக்கிறதோ அதைத்தான் நாம் பயன்படுத்தவேண்டும்!
தமிழர் தலைவர்: அரசமைப்புச் சட்டத்தை மதிக் கின்றவர்கள் யாராக இருந்தாலும், ஒரு பெயரை அழைக்கும்பொழுது, அரசமைப்புச் சட்டத்தில் என்ன பெயர் இருக்கிறதோ - அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய ‘பிதா'க்கள் என்ன சொன்னார்களோ, அதைத் தான் நாம் பயன்படுத்தவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவில் தெளிவாகவே India, that is Bharat, shall be a Union of States என்ற வார்த்தைதான் போடப்பட்டிருக்கிறது.
‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் - யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' என்பதுபோல, யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற அளவில் - யூனியன் என்று சொன்னால் ஒன்றியம்; சரியான தமிழ் வார்த்தை.
அரசமைப்புச் சட்டமும் தெரியவில்லை; தமிழும் புரியவில்லை
எனவே, இப்படி சொல்லுகிறவர்களுக்கு அரசமைப் புச் சட்டமும் தெரியவில்லை; தமிழும் புரியவில்லை என்றுதான் கொள்ளவேண்டும்.
ஆகவே, அவர்கள் இந்தப் பூச்சாண்டியையெல்லாம் காட்டி, இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று சொல்வது அவர்களுடைய ஆசையே அடிப்படைக் காரணம் - தோல்வியில் துவண்டவர்கள் இன்னமும் அதிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு இருக்கிறார்கள் என்பதை காட்டுமே தவிர - இந்த சலசலப்புகளுக்கெல்லாம் பயந்தவர்களோ, அஞ்சியவர்களோ நாங்கள் கிடையாது.
ஓர் ஆட்சியை எப்பொழுது கலைக்க முடியும்?
அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் கலைக்க முடியும். ஆனால், இந்த பிரகஸ்பதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், அரசமைப்புச் சட்டப்படி நீ நடந்துகொண்டாய் - ஆகவே, உன்னுடைய ஆட்சி யைக் கலைப்போம் என்று சொல்வதுபோன்று இருக் கிறது.
உதாரணமாக, தமிழ்நாடு என்றால், தமிழகம் என்று சொல்லவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
தமிழகம்தான் ‘தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டு விட்டதே!
அதேபோன்று,India, that is Bharat, shall be a Union of States என்கிற வார்த்தையை கவனிக்கவேண்டும். shall be a Union of States என்றால், அழுத்தமானது; என்னை வழக்குரைஞர் என்று சொன்னீர்கள்; வழக்குரைஞராக இருந்து நான் அதற்குப் பதில் சொல்கிறேன். shall be a Union of Statesஎன்றால், அழுத்தம்; ஆகவேதான், அரசமைப்புச் சட்டப்படி இருக்கவேண்டும் - இருந்தாகவேண்டும் - அழைத் தாகவேண்டும். ‘ஒன்றியம்' என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும்.
அரசமைப்புச் சட்டக் கடமையை நாங்கள் செய்கிறோம். தமிழ் ஏடுகள்கூட ‘ஒன்றியம்' என்ற வார்த்தையைப் போடுகிறார்கள்; அவர்கள் எல்லாம் பிரிவினைவாதிகளா? அவர்கள் எல்லம் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களா? இன்னுங் கேட்டால், திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பத்திரி கைகளை நடத்துகின்றவர்களின் ஏடுகளில்கூட ‘ஒன் றியம்' என்கிற வார்த்தை வருகிறதே, அதிலென்ன பிரச்சினை இருக்கிறது?
பஞ்சாயத்து யூனியன் என்பதற்கு என்ன பொருள்?
ஆகவேதான், எந்தக் குறையும் சொல்ல முடியாத வர்களுக்கு, ஏதாவது குறை சொல்ல முடியுமா? என்று பார்த்து, ஒரு துரும்புக் கிடைத்தால், துரும்பைத் தூணாக்கலாம் - இரும்பாக்கலாம் என்று நினைத்து ஏமாந்து போகக்கூடியவர்கள். ஆகவே, இதனால் ஒரு பயனும் இல்லை. இந்தப் பிரச்சினைக்காக அதிக நேரத்தை நாம் ஒதுக்கவேண்டியதில்லை.
பஞ்சாயத்து யூனியன் என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். அரசமைப்புச் சட்டத்திற்கே போக வேண்டாம் - பஞ்சாயத்து யூனியன் என்றால், ஊராட்சி ஒன்றியம் என்றுதானே சொல்லுகிறார்கள்.
ஆகா, ‘நீங்கள் மாநில அரசுக்கு விரோதமாக போய்விட்டீர்கள்' என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படி சொன்னால், அதைவிடக் கேலிக்கூத்து வேறு ஏதாவது இருக்க முடியுமா?
ஆகவே, இது கவைக்குதவாத பேச்சு.
திருமதி வி.கே.சசிகலா அவர்களுக்கு ஆதரவான குரல் கொடுக்கிறீர்களே?
நெறியாளர்: திரு.வீரமணி அவர்கள், இன்றைய அ.இ.அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார்; பா.ஜ.க.வோடு அது கூட்டணி வைத்திருக்கிறது; அதே சமயத்தில் ஊழலை கடுமையாக எதிர்க்கிறார். சில இடங்களில் திருமதி வி.கே.சசிகலா அவர்களுக்கு ஆதரவான குரலும் திரு.வீரமணி அவர்களிடமிருந்து வருகிறது. இதை எப்படி புரிந்துகொள்வது?
எந்த இடத்திலிருந்து என்ன ஒரு தேவை ஏற்படுகிறது - திரு.சீமான் அவர்கள், திருமதி வி.கே.சசிகலா அவர்களை சந்தித்துவிட்டு வந்த பிறகு, திராவிட சிந்தனையில் இருக்கக்கூடிய பலரும் அதை விமர்சிக்கிறார்கள்; நீங்கள் ஏன் போய்ப் பார்த்தீர்கள் என்கிற கேள்வியை திராவிட சித்தாந்தவாதியாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் பலரும் அதை விமர்சிக்கிறார்கள். திரு.வீரமணி அவர்களும் திருமதி வி.கே.சசிகலா அவர்களைப் பாராட்டுகிறாரே, தார்மீக ஆதரவு கொடுக்கிறாரே என்கிற ஒரு கேள்வி வருகிறதே, அதை எப்படி புரிந்துகொள்வது?
திராவிடர் கழகம் என்பது பொதுநல, இனநல பாதுகாப்பு அமைப்பு
தமிழர் தலைவர்: இதில் இரண்டு செய்தியை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். குழப்பம் அடையவேண்டிய அவசியமில்லை.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் பொதுநல, இனநல பாதுகாப்பு அமைப்பு. சமுதாயத்தில் அது ஓர் அரசியல் கட்சியல்ல. அது ஒரு இயக்கம்.
அந்த அடிப்படையில் பார்க்கின்றபொழுது, ஜெயலலிதா அவர்கள் மறைந்தவுடனே, அ.இ. அ.தி.மு.க. கட்சியை இரண்டாகப் பிரித்து, அதில் ஒரு பிரிவை தங்கள் வசமாக்கிக் கொள்ளவேண்டும் - தங்கள் வயப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று டில்லி அரசு நினைத்த நேரத்தில் - அப்பொழுது யார் இருந்தால், அதற்கு எதிராக இருப்பார்கள் என்று கருத்து சொல்லுகின்ற நேரத்தில், அந்த அளவிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருத்து அது - அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் கிடையாது.
ஆகவே, பா.ஜ.க.வினுடைய கரம் ஓங்காமல் இருப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் சொன்ன கருத்து என்பது தெளிவானது. ஆனால், இப் பொழுது அந்த சூழ்நிலை கிடையாது. அப்படிப் பட்ட விமர்சனங்கள் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.
ஏனென்றால், தேர்தலுக்கு முன்பாக, அந்த அம்மா அரசியலை விட்டு நான் விலகுகிறேன் என்று திடீரென்று அறிக்கை வெளியிட்டபொழுது, நான்தான் முதன்முதலாகச் சொன்னேன்; இதற் குப் பின்னணியில் பி.ஜே.பி.யினுடைய கரம் இருக்கிறது; பி.ஜே.பி. சொல்லித்தான் இப்படி நடந்திருக்கிறது என்று தெளிவான கருத்தைச் சொன்னது நான்தானே.
பிறகு அவர்கள் ஒப்புக்கொண்டார்களா இல்லையா?
No comments:
Post a Comment