சென்னை, ஜூன் 20 அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் கள் மத அமைப்பு நிர்வாகக்குழு தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தூத்துக்குடி - நாசரேத் சிஎஸ்அய் பேராயத்தின் கீழ் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அரசு தான் சம்பளம் கொடுக்கிறது.
இவர்களில் பலர் சிஎஸ்அய் பேராய நிர்வாகக்குழு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று நிர்வாகக் குழுவில் இடம் பெறுகின்றனர். அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பது சரியாக இருக்காது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக் கல்விதுறை சுற்றிக்கை அனுப்ப வேண்டும்.
தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்அய் பேராய நிர்வாகக்குழு தேர்தலில், அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.
5 லட்சம் இலவச பாடப்புத்தகங்கள் வருகை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
தூத்துக்குடி, ஜூன் 20 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்குவதற்காக சுமார் 5 லட்சம் புத்தகங்கள் வரப்பெற்று, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2021-2022ஆம் கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக சுமார் 5 லட்சம் புத்தகங்கள் வரப்பெற்றுள்ளன.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் அந்தந்த வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு புத்தகங்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் வந்துள்ளன.
இந்த புத்தகங்களை பள்ளி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment