என்மீது தந்தை பெரியார் வைத்த நம்பிக்கைகளை என் இறுதி மூச்சு இருக்கும் வரை காப்பாற்றுவேன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

என்மீது தந்தை பெரியார் வைத்த நம்பிக்கைகளை என் இறுதி மூச்சு இருக்கும் வரை காப்பாற்றுவேன்!

 எனக்குப் பின்னும்விடுதலை'யின் பணி தொடர்ந்து கொண்டுதானிருக்கும்!இன எதிரிகளுக்கு எச்சரிக்கை! வினையை விதைத்து விளைவை அறுக்க ஆசைப்படாதீர்!

87ஆம் ஆண்டுவிடுதலை' விழாவில்விடுதலை' ஆசிரியர் நெகிழ்ச்சியுரை

சென்னை, ஜூன் 3- தந்தை பெரியார் என்மீது வைத்த நம்பிக் கையை, என் இறுதி மூச்சு இருக்கும்வரை காப்பாற்றுவேன்; ‘விடுதலை'யின் பணி எனக்குப் பின்பும் சிறப்பாக செயல்படும் - ‘விடுதலை' வாசகர்களுக்கும், பணியினருக்கும் எம் நன்றி! என்று கூறியவிடுதலை' ஆசிரியர் அவர்கள் இன எதிரிகளே வினையை விதைத்து அதன் விளைவை அறுக்க ஆசைப்பட வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

விடுதலை' 87 ஆம் ஆண்டு விழா

1.6.2021 அன்று மாலை 7:00 மணியளவில் ‘‘விடுதலை 87ஆம் ஆண்டு விழா'' என்ற  தலைப்பில் நடைபெற்ற காணொலி சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய விடுதலையினுடைய 87 ஆம் ஆண்டு தொடங்குகின்ற இந்த நாளினை யொட்டி, அதனுடைய சிறப்புகளையும், பெருமைகளையும் சிறப்பாக எடுத்துச் சொல்வதற்காக இங்கே நம்முடைய அன் பான வேண்டுகோளை ஏற்று, வருகை புரிந்து, விடுதலையினுடைய பணி என்பது எப்படி இந்த இனத்தினுடைய எழுச்சிக்கும், இன்றைய காலகட்டத்திலே ஒரு புதிய ஆட்சி அமைந்திருக்கின்ற நேரத்தில்கூட, ஆரியம் தன்னுடைய வீரியத்தைக் காட்டலாம்  என்று விளையாடிக் கொண்டிருக் கின்ற இந்த சூழலையும், தெளிவாக எடுத்துச் சொல்லி, ஓர் உணர்ச்சி உரையை இங்கே நிகழ்த்தியுள்ள அருமைத் தோழர்களே,

தொடக்க உரையாற்றிய விடுதலையினுடைய பொறுப் பாசிரியர் ஆற்றல்மிகு, கருத்துமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும், ‘ஜனசக்தி' ஏட்டின் வெளியீட்டாளருமான அன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

தீக்கதிர்' ஏட்டின் பொறுப்பாசிரியர் அருமைத் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களே,

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி'யின் ஆசிரியர் சிறப்புமிகு அருமைத் தோழர் கொள்கைமிகு .திருமாவேலன் அவர்களே,

நக்கீரன்' இதழின் பொறுப்பாசிரியரும், சிறந்த சுயமரி யாதை வீரருமான திராவிட இயக்கத்தினுடைய முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர், அருமைத் தோழர் கோவி.லெனின் அவர்களே,

இறுதியில் நன்றியுரை கூறவிருக்கின்றவிடுதலை' நாளித ழின் மூத்த செய்தியாளர் அருமைத் தோழர் சிறீதர் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற உலகம் முழுவதும் இருக்கக்கூடிய விடுதலையினுடைய வாசகர் பெருமக்களே,

திராவிடப் பேரியக்கம் பெருங்குடும்பத்தினுடைய கொள்கை உறவுகளே, அருமைத் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலையினுடைய வாசகப் பெருமக்களுக்கும் என்னு டைய பணிவன்பான நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை' அதனுடைய பணியை தலைதாழாமல் செய்து கொண்டிருக்கிறது

87 ஆம் ஆண்டில்விடுதலை' அடியெடுத்து வைக்கிறது என்று நினைக்கின்ற நேரத்தில், அதுவும் கரோனா தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில்கூட  விடுதலை' அதனுடைய பணியை தலைதாழாமல் செய்து கொண்டிருக்கிறது என்பது - சமூகப் பணி தொடர்ந்து நடக்க வேண்டும்; உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய் வெடுத்துக் கொள்ளலாம்; ஆனால் இதயம் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடாது; அதுபோல, மூளைக்குக் காய்ச்சல் வரக் கூடாது.

எதிரிகள் தங்களுடைய விஷமத்தை கொஞ்சம் தலைதூக்கிக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள்

இந்த  விடுதலை' திராவிட சமுதாயத்தின் இதயம் இயங்கு வதுபோன்று, அதனுடைய நலனைப் பாதுகாப்பதற்காக இயங்குகின்ற ஓர் அற்புதமான, சிறப்பான கருவியாகும்.

இன்னும் உருவகப்படுத்திச் சொல்லவேண்டுமானால்,  விடுதலை'யை தந்தை பெரியார் அவர்கள் நமக்குப் பேராயு தமாக, போராயுதமாக, வாளும், கேடயமுமாக வடித்துத் தந் திருக்கிறார்கள். அதனுடைய முனைகளை அவ்வப்பொழுது கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால், களங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எதிரிகள் தங் களுடைய விஷமத்தை கொஞ்சம் தலைதூக்கிக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள் - பாடங்களை அவ்வப்பொழுது அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டே வரவேண்டும்.

மரங்கள் சும்மா இருந்தாலும், காற்று விடுவதில்லை என்று சொல்லுவதைப்போல, நாம் அமைதியாக இருந்தாலும்கூட, ஆரியம் அதனுடைய இயல்பை மாற்றிக் கொள்வதாக இல்லை. ஆகவேதான், அது விஷமத்திலே இறங்குகிறபொழு தெல்லாம்,  விடுதலை'க்கு வேலை இருக்கிறது என்று வீறு கொண்டு எழுதவேண்டிய பணி நமக்கு இருக்கிறது.  விடு தலை' என்று சொல்லும்பொழுது அதிலே தீக்கதிர், ஜனசக்தி, முரசொலி, நக்கீரன் உள்ளிட்ட இன உணர்வுள்ள ஏடுகள் அடங்கும். இப்படி நியாயங்களுக்காகப் போராடுகின்ற அத்த னைப் பேரும், உண்மைக்காகப் போராடுகின்ற அத்தனை பேரும் இணைந்து செய்யவேண்டிய ஒரு மாபெரும் கூட்டுப் பணிதான்.

ஏனென்றால், இன்னும் ஜாதி ஒழியவில்லை இந்த நாட்டில். ஜாதி எங்கே இருக்கிறது? யார் அதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இன்னமும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் - குல தர்மம், மனுதர்மம்தான் தங்களுடைய ஆட்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள், அதிலே தோல்வியுற்ற நிலையிலும்கூட, உடனடியாக வேறு விஷயங்கள், வாய்ப் புகள் ஏதாவது கிடைக்குமா என்று சீண்டிப் பார்க்கிறார்கள்.

தந்தை பெரியாரால் உருவாக்கப் பெற்ற சமரசமற்ற ஏடு - கருத்து ஏடு  விடுதலை' என்ற அறிவாயுதம்

இந்த நேரத்தில்,  விடுதலை'க்கு வேலை அதிகமாக இருக் கிறது.  விடுதலை' போன்ற ஏடுகள் அதனுடைய வீச்சை குறைத்துக் கொள்வதாக இல்லை. ஏனென்றால், என்றைக்குமே கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத - தந்தை பெரியா ரால் உருவாக்கப் பெற்ற சமரசமற்ற ஏடு - கருத்து ஏடு  விடுதலை' என்னும் அறிவாயுதம்.

நாம் ஒரு கூட்டுக் குழு மனப்பான்மையோடு...

அந்த வகையிலே நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் நன்றி செலுத்துவதுதான் என்னுடைய வேலை. நான் நீண்ட நேரம் உரையாற்றப் போவதில்லை. மற்றவர்கள் எல்லோரும் துணையாக இருக்கிறார்கள். நாம் ஒரு கூட்டுக் குழு மனப் பான்மையோடு களத்தில் நிற்க ஆயத்தமாகி இருக்கிறோம்.

ஊடகங்கள் இன்னமும் செல்வாக்கு மிகுந்தவை அவர் களிடத்தில் இருக்கின்றன. இதையெல்லாம் அவர்கள் மிக வேகமாக தங்கள் வசமாக இருப்பதைக் கொண்டு, அதிகார பலம் கொண்டு அத்தனையும் செய்வார்கள்.

ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்வார்கள்- Muscle Power, Money Power, Media Power என்று.

தங்களிடம் இருக்கின்ற அதிகார பலம் - பண பலம் - பத்திரிகை பலம் - இவற்றையெல்லாம் இன்றைக்கு அவர்கள் கையிலே வைத்திருக்கிறார்கள் என்றால், அதைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. அதையும் சந்தித்து நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம்.

உயிரையும் துச்சமென மதித்து...

24 நாள்களுக்கு முன்பு அமைந்த ஓர் ஆட்சி - இன்றைக்கு அதனுடைய வீச்சு எவ்வளவு வேகமாக இருக்கிறது. உயி ரையும் துச்சமென மதித்து, ஒரு முதலமைச்சர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவ மனைக்கே நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்; மருத்துவர்களே, உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்று சொல்கிறார்கள், முதலமைச்சரைப் பார்த்து.

உற்றார் உறவினர்கள்கூட கரோனா தொற்றினால் பாதிக் கப்பட்டவரின் அருகே செல்வதற்கு அஞ்சக்கூடிய நிலையிலும்கூட, மருத்துவர்களுடைய தியாகத்தை நான் மதிக்கி றேன் என்று காட்டக் கூடிய அளவிற்கு, நம்பிக்கையூட்ட வேண்டும் என்று, தன்னுடைய உயிரைப்பற்றியும், ஆரோக் கியத்தைப்பற்றியும் கவலைப்படாமல் முதலமைச்சர் இறங்கியிருக்கிறார்.

பருவம் பாராது, மானம் பாராது தொண்டாற்றவேண்டும்!

இது எந்த அளவிற்கு நியாயப்படுத்த முடியும் என்பது வேறு செய்தி. ஆனால், அதேநேரத்தில், அப்படி பருவம் பாராது, மானம் பாராது தொண்டாற்றவேண்டும் என்று சொன்னார்கள்; பருவம் பாராது தொண்டாற்றவேண்டும்; அதுதான் பொதுத் தொண்டு.

தந்தை பெரியாருக்குப் பிடித்த குறளே அதுதானே!

எனவேதான், மானம் பாராது தொண்டற்றக்கூடிய பணி என்பது பருவம் பாராதது. கொளுத்தும் வெயிலா? கொட்டும் மழையா? அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் பணி யாற்றவேண்டும் - அதுதான் பொதுத் தொண்டு.

அந்தப் பணியை எவ்வளவு பெரிய விழுப்புண் ஏற்றாலும், அதனைவிடுதலை' செய்திருக்கிறது - செய்துகொண்டே இருக்கிறது.

மிசா' காலத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள்; அந்த நேரத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தபோது, ‘விடுதலை'யை அடக்கி, ஒடுக்கிவிடவேண்டும் என்று சொன்னவர்கள் - வருமான வரித் துறை அதிகாரிகளே, ‘விடுதலை'யை நிறுத்திவிடுங்கள் உங்களுக்கு விலக்குக் கிடைக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.

அவர்களுடைய குறி எங்கே இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

அதுமட்டுமல்ல, ‘விடுதலை'யினுடைய வரலாற்றிலேயே மிகப்பெரிய பெருமையாகக் கருதுவதும், அதனுடைய தனித்தன்மை அப்படியே இருக்கிறது என்று காட்டுவதற்கு அடையாளங்கள் சில இருக்கின்றன. அந்த அடையாளங்கள் அருமைத் தோழர்களே, அதில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால்,

‘‘பெரியாரும், ‘விடுதலை'யும் என்னுடைய அன்பார்ந்த எதிரிகள்!''

ஒருமுறை இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம், நான் ஆசிரியர் பணிக்கு வந்தவுடன், பெரியார் பிறந்த நாள் மலருக்காக வாழ்த்து அனுப்புங்கள் என்று கேட்டேன்.

தந்தை பெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும் இரு துருவங்கள்; கொள்கை எதிரிகள்; சமரசமற்றவர்கள்.

விழா மலருக்காக ஒரு போஸ்ட் கார்டில் நான்கு வார்த்தைகள் எழுதிக் கொடுத்தார் -

‘‘பெரியாரும், ‘விடுதலை'யும் என்னுடைய அன்பார்ந்த எதிரிகள்!'' என்று.

அந்த வாக்கியம் மிக முக்கியமானது.

எனவே, அது எதைக் காட்டுகிறது?

தனிப்பட்ட முறையில் அவர்களுக்கென்ன வழக்கா? வம்பா? எதுவும் கிடையாது.

லட்சிய அடிப்படையில், இரு வேறு நிலைப்பாடுகள். அது அன்றும் - இன்றும் - என்றும் நிலைத்திருக்கிறது என்பதுதான் மிக முக்கியமானது தோழர்களே,

அதைக் கொண்டு செலுத்துவதே - இவையெல்லாம் வழிமுறைகள்.

விஞ்ஞானத்தைத் தோற்கடிக்க முடியாது!

விடுதலை' நட்டத்தைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தந்தை பெரியார், தான் சேர்த்து வைத்த சொந்தப் பொருள் - மக்கள் அவரிடம் கொடுத்த பொருள் - இவற்றையெல்லாம் அறக்கட்டளையாக்கி, அதனுடைய அடிப்படையில்விடுதலை'யை நாட்டு மக்களின் கெடுதலையைப் போக்கு வதற்கு - திருமாவேலன் அவர்கள் அழகாகச் சொன்னதைப் போல, கெடுதலையை நீக்குவதற்கும், போக்குவதற்குமாக - அதேபோல, முத்தரசன் சொன்னதைப்போல, விஞ்ஞானத் தைத் தோற்கடிக்க முடியாது - விஞ்ஞானத்திற்கு நடுவிலே தொல்லை கொடுக்கலாம்; விஞ்ஞானிகளை சிறையில் தள்ளலாம்; விஞ்ஞானிகளை தூக்கு மேடைக்கு அழைக்கலாம் - விஞ்ஞானிகளுக்கு விஷம் கொடுக்கலாம்; ஆனால், விஞ்ஞானம் வாழும்; விஞ்ஞானத்தை வெற்றி கொள்ள முடியாது.

அதுபோல, ‘விடுதலை' போன்ற கொள்கை ஏடுகள் அவற்றின் கொள்கைப் பயணத்தை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது.

அது மிசா காலமாக இருந்தாலும் சரி; அது கரோனா தொற்று காலமாக இருந்தாலும் சரி.

மிசா'  கொடுமைகளையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறோம்

ஆனால், ‘விடுதலை'யின் 87 ஆம் ஆண்டிலே, 59 ஆண்டுகளைப்பற்றி சொன்னார்கள். மிசா காலத்தில் நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் இருந்து வெளியே வரமாட்டோம் என்று அச்சுறுத்தப்பட்ட காலத்திலும், ‘விடுதலை' நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது.

மிசா காலத்தில், எப்படிப்பட்ட தணிக்கை என்பதைப்பற்றி யெல்லாம் கவிஞர் அவர்கள் இங்கே சொன்னார். அந்தக் கொடுமைகளையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கிறோம்.

தோழர்களே, ஒரு நூலைத் தயாரிக்கவேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன். ‘‘திராவிட இயக்கத்து ஏடுகள் பெற்ற விழுப்புண்கள்'' - திராவிட வீரர்களும், தலை வர்களுமே விழுப்புண் பெற்றிருக்கிறார்கள், சிறைச்சாலைக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் பொதுவாக அரசி யல் தலைவர்கள், அடக்குமுறைக்கு ஆளானவர்களே!

திராவிட இயக்கத்தின் நூறாண்டு காலத்தைப்பற்றி சிலர் கொக்கரிக்கிறார்கள்; உளறுகிறார்கள்; சில பேர் சீண்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்; குரைக்கிறார்கள்; அவர் களை அடையாளப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் அடையாளம் தெரியாதவர்கள்; இதன்மூலமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கு நாம் நேரிடையாகப் பதில் சொல் வோம் என்று நினைக்கிறார்கள்; அதன்மூலமாக பெரிய ஆள் ஆகலாம்; உயிரோடு இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ள லாம் என்று நினைக்கிறார்கள்.

நிச்சயமாக உங்களுக்கு அந்த மரியாதையை நாங்கள் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. எங்களுக்குத் தெரியும், யாரை, எப்படி சந்திப்பது என்று.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களே, ‘விடுதலை' யினுடைய பணி என்பது சாதாரணமானதல்ல. மிகப்பெரிய அளவிற்கு நெருப்புப் போன்றது.

அனைவருக்கும் அனைத்தும் என்பது திராவிடம்

இந்த இயக்கம் -  பெரியார் பணி, ‘விடுதலை'யினுடைய பணி. ‘விடுதலை'யும் - பெரியாரும் அன்பார்ந்த எதிரிகள் என்று ஆச்சாரியார் போன்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னால் - அதுதான் இரு வேறு தத்துவங்கள்.

திராவிடம் - ஆரியம்

திராவிடம் என்றால் சமத்துவம்;

ஆரியம் என்றால் பேதம்.

திராவிடம் என்றால் விஞ்ஞானம்;

ஆரியம் என்றால் அஞ்ஞானம்.

அனைவருக்கும் அனைத்தும் என்பது திராவிடம்;

எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிடம்;

இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம்.

என்ற அந்த நிலை இருக்கின்ற வரையில், ‘விடுதலை'யின் தேவை உண்டு. ‘விடுதலை'யினுடைய பணிக்கு அவசியம் உண்டு.

எனவே, அது தொடர்ந்து நடந்தாகவேண்டும்; களத்திலே வாளும், கேடயமும் என்றைக்கும் உறங்காது.

களத்தில் இருக்கின்றபொழுதெல்லாம் சுழன்றுகொண்டே இருக்கவேண்டும். அதனுடைய கூர்மையை முனை மழுங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

அந்தப் பணியைச் செய்வதற்காகத்தான் இதுபோன்ற நிகழ்வுகள். இதற்கு ஒத்துழைக்கக்கூடிய, பாடுபடக்கூடிய தோழர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு தீமையில் நன்மை கிடைத்திருக்கிறது

நெருக்கடி காலத்தையெல்லாம் தாண்டி, இந்த கரோனா காலத்தில் ஒரு தீமையில் நன்மை கிடைத்திருக்கிறது. எப் போதுமே பகுத்தறிவாளர்களைப் பொறுத்தவரையில், அதுதான் சிறப்பு.

நெருக்கடி காலம் என்று சொன்னால், அதில் ஒரு  கண்டுபிடிப்புகள் வரும் -  வித்தியாசமாக. அது சமூக நன்மைக்குப் பயன்படும்.

அதுபோல நண்பர்களே, இந்தக் கரோனா காலகட்டத்தில், காணொலிகள்மூலமாக கூட்டங்களை நாம் நடத்துவது மட்டுமல்லாமல், இணையத்தின் வழியாக வாசகர்களை சென்றடையக் கூடிய அளவிற்கு, ‘விடுதலை'யை அதன்மூலம் அனுப்பத் தொடங்கினோம், ஓராண்டிற்கு முன்பாக.

அதிலே ஒரு சிறப்பான ஒரு திருப்பம் எப்படி ஏற்பட்டது என்று சொன்னால் நண்பர்களே, இணையத்தின் மூலமாக பிடிஎஃப் வடிவத்தில்விடுதலை'யை எண்ணற்ற வாசகர்க ளிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்படுகிறது.

இதுதான் இன்றைய சிறப்பு - ‘விடுதலை'யின் 87 ஆம் ஆண்டில்.

ஒரு காலத்தில் அச்சகம் பழைய அச்சகம்; அது புதுப் பிக்கப்பட்டது. வண்ணங்கள் கிடையாது. பிறகு, எண்ணங் களும், வண்ணங்களும் இணைந்தன.

பிறகுவிடுதலை'யினுடைய வளர்ச்சி என்று வருகின்ற பொழுது, இது லட்சியத்தைப் பொறுத்ததுதான்; லட்சியக் கணக்குதான் முக்கியம் என்று நாங்கள் சொன்னோம். அதைத் தாண்டி, இப்பொழுது எந்த அளவிற்கு நாம் வளர்ந்திருக்கி றோம் என்று சொன்னால், கரோனா காலத்தில், நம்முடைய தோழர்களுக்கு எப்படி நான் நன்றி செலுத்துவது என்றே தெரியவில்லை.

மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வாசகர்கள் தினமும்விடுதலை'யைப் படிக்கிறார்கள்

முயற்சி திருவினையாக்கும் என்ற ஒரு ஏற்பாட்டின் மூலமாக, நம்முடைய பொறுப்பாளர்கள், கழக உறவுகள் - ‘விடுதலை'யை பிடிஎஃப் வடிவத்தில் உலகம் முழுவதும், நாடு முழுவதும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அனுப் புவதன்மூலமாக, இதுவரை மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட வாசகர்கள் தினமும்விடுதலை'யைப் படிக்கிறார்கள்.

எனவே, லட்சியப் பயணமும் நடந்திருக்கிறது; லட்சங் களிலும் அது நடக்கிறது.

அதனால் வருமானம் கிடையாது; அது வேறு. ஆனால், தன்மானமும், இனமானமும் காப்பாற்றப்படுகிறது. இதுதான்விடுதலை'யின் தனித்தன்மை. ஆகவே, அதற்கு ஒத்து ழைக்கின்ற தோழர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி.

விடுதலை'க்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்!

என்னைப் பொறுத்தவரையில், ‘விடுதலை'க்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான்.

அய்யா அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார்கள்; ‘‘அவரிடம் ஏகபோகமாக விட்டுவிடுகிறேன்'' என்று.

பெரிய வார்த்தை அது. ஒரு சாதாரண இளைஞனைப் பார்த்து இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்கிற பொழுது, அந்த நம்பிக்கையை நியாயப்படுத்தவேண்டும் என்பதற்காக - இறுதி மூச்சு இருக்கின்ற வரையில், நாணய மாய், நேர்மையாய், தங்கு தடையில்லாமல், ஆயிரம் ஆயிரம் இன்னல்கள் வரினும் ஏற்பேன்; ஆனால், இலக்கை நோக்கியே நடந்து கொண்டிருப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதை சிறப்பாக நடத்தக் கூடிய அளவிற்கு, தோழர்களுடைய அந்தக் கூட்டு முயற்சி இதில் சிறப்பானது.

தியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

எண்ணற்ற தோழர்கள்விடுதலை'க்காக அலுவலகத்தில் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்; தியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கவிஞர், மற்ற தோழர்கள் எல்லோரும் கொடுத்திருக்கின்ற ஒத்துழைப்புப் பெரிது. மறைந்தவர்கள் பலர் உண்டு; வாழ்கிறவர்கள், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவர்கள் பலர் உண்டு. எல்லோருக்கும் நன்றி செலுத்துவதுதான் இந்த நேரத்தில், என்னுடைய வேலை.

தொடர்ந்து அந்தப் பணியை நாம் தூக்கிச் செய்ய வேண்டும். லட்சக்கணக்கிலே - வருகின்ற செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று - எத்தனை லட்சம் என்று அந்தக் கணக் கைத் தெளிவாகச் சொல்வோம்.

உலக நாடுகளிலிருந்து தொலைப்பேசிமூலம் தொடர்புகொள்வார்கள்!

இன்றைக்கு உலகம் முழுவதும்விடுதலை' செல்கிறது. மாலை நேரத்தில் எனக்கு, அமெரிக்காவிலிருந்து, சிங்கப்பூரி லிருந்து, துபாயிலிருந்து, அய்ரோப்பிய நாடுகளிலிருந்து - ‘விடுதலை'யில் வெளிவரும் அறிக்கை, வாழ்வியல் சிந்தனை, தலையங்கம் போன்ற பகுதிகளைப் படித்துவிட்டு, சந்தேகங் களையும், விளக்கங்களையும் கேட்பார்கள்; உற்சாகப்படுத்து வார்கள். பல தொலைப்பேசிகள் வரும்பொழுது நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இன்றைக்குவிடுதலை' எளிமையான முறையில், அடக்கத்தோடு அந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கிறது.

அருமைத் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் ஒன்றைச் சொன்னார்கள், என்னைப் பற்றி; அவர் பெரியார் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்தியவர். நம்பிக்கை வைத்தார் - அதை அவர் நிரூபிக்கிறார் என்றா£ர்.

எது எனக்குத் துணிச்சல் தந்தது?

ஆம்!  எனக்கு அதைத் தவிர வேறொன்றும் கிடையாது. காரணம் என்னவென்றால், நான் அடிக்கடி சொல்வதுதான் - இங்கும் சொல்கிறேன், எழுதத் தெரியாத எனக்கு, எப்படி ஆசிரியர் பொறுப்பை பெரியார் அவர்கள் நம்பிக் கொடுத்தார் என்று நினைக்கின்றபொழுது - ஒரே ஒரு வார்த்தைதான் - எது எனக்குத் துணிச்சல் தந்தது?

பெரியார் தந்த புத்தி போதும் - நான் சொந்தப் புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை.

பெரியார் தந்த புத்திக்கு சுயநலம் கிடையாது

பெரியார் தந்த புத்திக்கு இனநலம், பொதுநலம் மட்டுமே தெரியும்.

மானுடப்பற்றுக்கு எல்லையில்லாத ஓர் எல்லை உண்டு. எனவே, அதைப் பற்றிக் கொண்டால் போதும் என்று சொல்லி,

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு" (குறள் 350)

என்று சொல்வதைப்போல,

என் கையில்விடுதலை' இருக்கிறதுபோர் வாளாக இருக்கிறது!

எனக்கு எந்தப் பற்றும் கிடையாது; அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்று, மானுடப் பற்று என்று சொன்னாரே, அந்தப் பற்றுடையவரை, பற்றிக் கொண்டதினுடைய விளைவுதான், இன்றைக்கும் பாதை மாறாமல், சோர்வு தட்டாமல், வயதைப் பற்றி சிந்தனை வராமல் - தோழர்களுடைய தோள்மீது நாம் நிற்கிறோம் - தோழர்கள் யாருடைய தோள்மீது நிற்கிறார்கள்? பெரியார் தோள்மீது நிற்கிறார்கள். என் கையில்விடுதலை' இருக்கிறது; போர் வாளாக இருக்கிறது.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன், ‘விடுதலை' தன்னு டைய பணியைத் தொடரும்.

சிலர் விளையாடிப் பார்க்கிறார்கள்; ஆரியம் விளையாடிப்  பார்க்கிறது - அதற்கு அடக்கத்தோடு சொல்கிறோம் - மீதி இந்த ஆட்சியைப்பற்றி எல்லாம் அவ்வளவு சுலபமாக கணக் குப் போடாதீர்கள். அமைதியாக இருக்கிறவர்கள் ஆழமாக இருப்பார்கள்.

எரிமலையாக வெடிக்கவேண்டிய நேரத்தில், எரிமலையாக வெடிக்கும்!

எங்களைப் போன்றவர்கள் வெறுப்பை விதைக்கிறவர்கள் அல்ல; நெருப்பைப் போன்றவர்கள். நெருப்பிடம் விளையா டாதீர்கள். நெருப்பு, சமைக்கவேண்டிய நேரத்தில், சமைய லுக்குப் பயன்படும்; சுடராக இருக்கவேண்டிய நேரத்தில், சுடராகத் தெரியும். தீப்பிழம்பாக இருக்கவேண்டிய நேரத்தில், தீப்பிழம்பாக இருக்கும். எரிமலையாக வெடிக்கவேண்டிய நேரத்தில், எரிமலையாக வெடிக்கும்.

இன்னொன்றையும் சொல்வார்கள் நண்பர்களே, காற்றுக் குக்கூட மாசு உண்டு; நெருப்புக்கு அழுக்கு  கிடையாது. தீக்கு இருக்கின்ற தனித்தன்மை அதுதான்.

விடுதலை'யினுடைய பணி நெருப்புப் போன்றது

அதைத் தவறாகக்கூட ஆரியம் பயன்படுத்தும்; ஆனால், ஆரியம் அதைப் பயன்படுத்தாது. ஏனென்றால், திராவிடத் திற்கும், யாகத்திற்கும் எப்போதும் சம்பந்தம் கிடையாது. திரா விடம் வேள்வியை விரும்பியதில்லை; யாகத்தை விரும்பிய தில்லை. திராவிடத்திற்குத் தியாகம் தெரியுமே தவிர, யாகம் தெரியாது - அது ஆரியர்க்கு உரியது.

ஆகவே நண்பர்களே, ‘விடுதலை'யினுடைய பணி என்பது இருக்கிறதே, நெருப்புப் போன்றதாகும்.

இதில் சிலர் விளையாடிப் பார்க்கலாம் என்று சொன்னால், எங்களுடைய பதில் இதுதான்.

எங்களுக்குப் பெரியார் தந்த பேராயுதம் - போராயுதம்

எங்களோடு மோதிப் பார்க்கலாம் என்று நினைக்காதீர்கள். எங்களுடைய வாளும், கேடயமுமாக இருக்கின்றவிடுதலை' என்றைக்கும் எங்களுக்குப் பெரியார் தந்த பேராயுதம் - போராயுதம். அதனுடைய கூர்முனைகள் மழுங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்ற பணியைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

இறுதிப் போரிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்

அந்த ஆயுதத்தைச் சுழற்றுகின்ற கரங்கள், ஆயிரமாயிரம் என்ற நிலை மாறி, இன்றைக்கு லட்சக்கணக்கில் சேர்ந்திருக் கின்றன. அதிலும் இளைஞர்கள் இந்தப் பக்கத்தில் வந்திருக் கிறார்கள் என்று நினைக்கின்றபொழுது, எங்கள் பயணங்கள் தடைபடாது. எங்கள் பயணங்களில், களங்களில் நாங்கள் வெற்றி பெறுவது மட்டுமல்ல - இறுதிப் போரிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்!

அதற்கு, ‘விடுதலை' தன்னுடைய பணியை, அடக்கமாக, ஆழமாக, தொய்வின்றிச் சிறப்பாகச் செய்யும்.

காரணம், ‘விடுதலை' என்பது வெறும் தொழிலுக்கான ஓர் ஏடல்ல - தொண்டுக்கான ஓர் ஆயுதம் - ஒரு சிறப்பு ஆயுதம் - ஒரு போராயுதம்.

"நன்றி செலுத்துகிறேன் - பணியைத் தொடருகிறேன் அடக்கத்தோடு!"

அதனைத் தாங்கிப் பிடிக்கின்ற அளவிற்கு, ஆயிரமல்ல - லட்சக்கணக்கான கரங்கள் இன்றைக்கு வந்திருக்கின்றன - அந்தக் கரங்களுக்கு நான் முத்தமிடுகிறேன்; நன்றி செலுத்து கிறேன் - பணியைத் தொடருகிறேன் அடக்கத்தோடு.

இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் எங்களைப் போன்ற வர்கள் இருப்போம் என்பதைவிட, இன்னும் பலர் உருவா வார்கள்.

எனவேதான், இது ஆயிரங்காலத்துப் பயிர் - இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.

திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!! திராவிடம் இன்றைக்கும் வரலாறு படைக்கும். முட்டிப் பார்க்காதீர்கள் - நெருப்போடு விளையாடாதீர்!

நெருப்பு மட்டுமல்ல - பொறுப்பும் எங்களுக்குத் தெரியும். பொறுப்போடும், நெருப்போடும் நாங்கள் பழகியிருக்கிறோம்.

வெறுப்பை விதைத்து வினையை அறுக்காதீர்கள்!

ஆகவே, நெருப்பாக வேண்டிய நேரத்தில், நெருப்பாக இருப்போம். பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டிய நேரத் தில், பொறுப்பாக இருப்போம். வெறுப்பை விதைத்து வினையை அறுக்காதீர்!

வாழ்க விடுதலை! கலந்துகொண்ட அத்தனைத் தோழர் களுக்கும், எண்ணற்ற தோழர்கள் இதற்காக உழைக்கிறார்களே, அவர்களுக்கும் - ஆசிரியர் என்கிற முறையில், நேயர் களுக்கும், லட்சக்கணக்கான எண்ணிக்கையில்விடுதலை' யைப் பரப்பியவர்களுக்கும் தலைதாழ்ந்த நன்றியை நான் அடக்கத்தோடு தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்கவிடுதலை'!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment