வீதிக்கு வரும் தொழிலாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

வீதிக்கு வரும் தொழிலாளர்கள்

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று சொன்ன மோடி ஆட்சியில் நாளும் வேலை இழப்பு பட்டியல்தான் வந்து கொண்டிருக்கிறது.

கார் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து மட்டும் 10 லட்சம் பேர் வேலையிழந்தனர்.

அகில இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நேரடியாக ஆட்டோமொபைல் டீலர்கள் சார்ந்த துறையில் 15,000 டீலர்களால் இயக்கப்படும் சுமார் 26,000 ஆட்டோ மொபைல் ஷோரூம்களில் சுமார் 25 லட்சம் மக்கள் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மறைமுகமாக டீலர்கள் மூலம் மேலும் 25 லட்சம் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரி மற்றும் பல்வேறு நிதி சார்ந்த சிக்கல்களால் தொடர்ந்து இந்திய மோட்டார் வாகன சந்தை கடுமையான சரிவினை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சரிவு தொடரும் எனில் மேலும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்க நேரிடும் என கூறப்படுகின்றது. முதன்மையான மாருதி சுசுகி நிறுவனம், விற்பனைச் சரிவினால் நாடு முழுவதிலுமுள்ள தனது உற்பத்தி நிறுவனங்களில் இருந்து 25000 ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கியுள்ளது.

விவசாயம் மற்றும் பயன்பாட்டுத்தொழில் உற்பத்தித் துறைக்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறை உள்ளது. இந்த துறையில் 50 லட்சம் முதல் 1.3 கோடி பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சார்ந்த அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கும் 18% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, கார் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் அதிகரித்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு வர அரசு காட்டும் முனைப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என்றுகூறி நீண்ட ஆண்டுகள் கொண்டுவரும் மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவரும் நெருக்கடி எனப் பல முனை சிக்கல்களில் இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான விற்பனைச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இதனால், சுமார் 10 லட்சம் பேர், வேலையை இழப்பார்கள் என்று அகில இந்திய உதிரிப் பாகங்கள் தயாரிப்புச் சங்கம் தன் கவலையை, சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அந்த ஆட்டோமொபைல் சங்கம் சொன்ன வேலை இழப்பு தற்போது உண்மையில் நடக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியா முழுக்க மொத்தம் 286 ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள், போதுமான விற்பனை இல்லாததால் தங்கள் நிறுவனங்களை இழுத்து மூடி, இருக்கிறார்களாம். பெரும்பாலும் நகர்ப் புறங்களில் இருந்த ஆட்டோமொபைல் டீலர்கள்தான்  இந்த விற்பனைச் சரிவைத் தாங்க முடியாமல் இழுத்து மூடி இருக்கிறார்களாம் இந்திய ஆட்டோமொபைல் துறையின் டீலர்கள் சங்கம் சொல்லி இருக்கும் கணக்குப்படி, மகாராட்டிரத்தில் 84 டீலர்கள், தமிழகத்தில் 35 டீலர்கள், டில்லியில் 27 டீலர்கள், பிஹாரில் 26 டீலர்கள், ராஜஸ்தானில் 21 டீலர்கள் என தங்கள் நிறுவனத்தை மூடி இருக்கிறார்களாம்.

நாடு முழுக்க, இன்னும் பல டீலர்களும் தங்கள் நிறுவனத்தை மூடிவிட முடிவு செய்துள்ளனர்.  "இப்படி 286 ஆட்டோமொபைல் டீலர்கள் தங்கள் தங்கள் நிறுவனத்தை இழுத்து மூடுவதால் இன்றைய தேதிக்கு நேரடியாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இந்த நிறுவனங்களினால் மறைமுகமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம் வேலை இழந்தவர்களின் குடும்பத்தின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக் குறியாகி விட்டது.  இதோடு முடியாது.  தொடர்ந்து விற்பனை சரிந்து கொண்டிருப்பதால், உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் சுமார் 10 லட்சம் பேர் வரை தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

கடந்த ஆட்சியில் ஜி.எஸ்.டி. கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு தொழில்களையும் குடிசைத் தொழில்களையும் இழுத்து மூடிய 'கைங்கரியத்தை'ச் செய்தது மத்திய பா... ஆட்சி. இதன் காரணமாக திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் பல முதலாளிகள் தன்னுடைய நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தவர்களுடன் செக்யூரிட்டி வேலைக்குச் சென்றதை ஊடகங்களில் பார்த்தோம், மேலும் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று கூறியவர்கள் ஆட்சியில் 23 விழுக்காடு வேலையின்மை அதிகரித்தது,

 இந்த நிலையில் இரண்டாம் முறை ஆட்சியில் முக்கிய தொழில்துறையான ஆட்டோமொபைல் இழுத்து மூடப்பட்டுக் கொண்டு இருக்கிறது, இதன் மூலம் அயல்நாட்டு நிறுவனங்கள் கால்பதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, ஆட்டோமொபைல் துறையில் அயல்நாட்டு நிறுவனங்கள் கால்பதித்தால் ஒட்டு மொத்த உதிரிபாக உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, அதை நம்பி இருக்கும் 3 கோடிக்கும் மேற் பட்டவர்கள் கைபிசைந்து நடு வீதியில் நிற்கவேண்டி இருக்கும். ஜி.எஸ்.டி என்ற வரிவிதிப்பால் ஒரு அபாயம் மட்டுமே வெளிவந்துள்ளது வெளிவராதது இன்னும் அதிகம் உள்ளது! என்று தொலையும் இந்த ஆட்சி?


No comments:

Post a Comment