தகடூர் தமிழ்ச்செல்வி
ஒற்றை விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையினால் தங்களை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு ஒரு ஜனநாயக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் அதிகாரம்.
பார்! தீய ஜனதா கட்சி என்று சுட்டிக்காட்டும் வகையில் என்றைக்குமே மக்கள் விரோத அமைப்பாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டில் மதவெறியை முன்னிறுத்தி, பொய்யையும் புரட்டையுமே தேர்தல் பிரச்சாரத்தில் மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது.
இந்திய நாட்டின் பேரழிவின் ஆரம்பம் இந்த 2014 ஆம் ஆண்டு என்று சொல்கின்ற அளவிற்கு ஒரு மோசமான மக்கள் விரோத ஆட்சியை கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி..
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து அதிகார மய்யங்களையும் கையில் போட்டுக்கொண்டு 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது.
சைனாவின் பெருந்துயரம் மஞ்சளாறு என்று சொல்லப்படுவதை போல இந்தியாவின் பெருந் துயரம் ,மத்திய பாஜக ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு ஒரு மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி எனும் பேரழிவு இந்தியாவை மீண்டும் தாக்கத் தொடங்கியது.
2014ஆம் ஆண்டின் பெருந்துயரம் 2019லும் தொடர்ந்தது.இந்திய அரசியல் வரலாற்றில் பாஜக ஆட்சி என்பது ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் கேடு. தமிழர் தலைவர் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் மிகப்பெரும் ஒரு அரசியல் பிழை.
வரலாற்று கேடான அந்த மத்திய பாஜக ஆட்சிக்கு அடங்கி நடுங்கும் ஆமையாய், ஒடுங்கி நடுங்கும் ஊமையாய், ஒரு கொத்தடிமை அரசாக விளங்கியது தான் முந்தைய அடிமை அதிமுக ஆட்சி.
ஊழல் குற்றவாளியாக மண்ணில் புதைக்கப்பட்ட முதல் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா ..
அவர் உயிரோடு இருந்து அரசியல் செய்த காலகட்டங்களில் “தான் எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்” என்று சபதம் ஏற்றவர்.
ஆனால் அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று மூச்சுக்கு மூச்சு சொல்லுகின்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஓ பன்னீர்செல்வம் அவர்களும் பாஜகவுடன் கூட்டணி வைத்து தன்னுடைய கட்சியின் தலைவியாய் விளங்கிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கே துரோகம் செய்துள்ளனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், இப்பொழுது 2021 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஒட்டி உறவாடி அவர்கள் போடுகின்ற தாளத்திற்கு ஏற்றாற்போல் ஆட்டமாடி ,ஒரு அடிமையிலும் அடிமையாய் விளங்கிய அதிமுக அரசின் பதலிக்காலம் முடிந்த நிலையில் நடைபெற்றது தான் 2021 சட்டமன்ற தேர்தல்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகக் காரணமான மத்திய அரசை கேட்கத் துணியாத அடிமை அதிமுக அரசு.
GSTவரியில் தன்னுடைய பங்கை துணிச்சலாக கேட்டு வாங்க வக்கற்ற அடிமை அதிமுக அரசு .
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த வரையிலும் நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை.
அவர் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தபோது அதனை சற்றும் எதிர்க்காது தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அரசு தான் அடிமை அதிமுக அரசு.
.2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்குகின்ற பொழுது உபரி வருவாயாக 439 கோடியை வைத்து விட்டுச் சென்றது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.
நிர்வாக திறமையற்ற அடிமை அதிமுக அரசோ 41417 கோடி பற்றாக்குறை பட்ஜெட் ஆக வைத்து விட்டுச் சென்றிருக்கிறது.
அரசு போக்குவரத்து கழக துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2457 ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் ஆன 497.32 கோடியை நிலுவையாக வைத்துச் சென்ற அடிமை அதிமுக அரசு.
பெட்ரோல் டீசலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக ஒருபக்கம் சொல்லிக்கொண்டு, அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை பெட்ரோல் நிறுவனங்களே செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது மத்திய பாஜக அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து இரூந்த காலகட்டத்திலும் ,பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏற்றப்பட்டு சாமானிய மக்களின் முதுகில் ஒரு மிகப் பெரும் சுமையாக ஆக்கப்பட்ட நிலையிலும், மத்திய பாஜக அரசை எதிர்த்துக் கேட்க துணிவில்லாத அடிமை அதிமுக அரசு ..
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல பெட்ரோல் டீசலுக்கு செஸ் வரியையும் சர்சார்ஜையும் ஏற்றி விட்டது மத்திய அரசு .
எதனையும் தட்டிக் கேட்கத் துணியவில்லை அடிமை அதிமுக அரசு.
ஒரு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அளிக்க துணை போனார் என்றால் இன்னொரு பக்கத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிமையாக இருப்பதில் ஓபிஎஸ் அவர்களையும் மிஞ்சி மத்திய அரசின் உதய் மின் திட்டம் ,தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் ,விவசாயிகளுக்கு பெரும் கேடான 3 வேளாண் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட எதனையும் எதிர்த்துக் கேட்க துணிவில்லாத கோழையாக விளங்கினார். அவரை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு நடைபெற்ற ஆட்சி தான் அடிமை அதிமுக அரசு.
புயல் மழை சீற்றத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பொழுது, அதனை தேசிய பேரிடர் என்று அறிவிக்க மத்திய பாஜக அரசிடம் தீவிரமாக கோரிக்கை வைக்கவிலை அடிமை அதிமுக அரசு.
ரூ.15000 கோடி நிவாரண நிதியாக கோரப்பட்ட நிலையில் வெறும் 1680 கோடியை மட்டுமே மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியது . மத்திய பாஜக அரசிடம் உரிய தொகையை முறையாக போராடி வாங்காமல் அத்தொகையை கைகட்டி வாய் பொத்தி தலைகுனிந்து வாங்கிக்கொண்டது அடிமை அதிமுக அரசு.
TNPSC எனப்படும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வேறு மாநிலத்தவர்களும் விண்ணப்பித்து தமிழ்நாட்டில் வேலை பார்க்கலாம் என்று, தமிழ்நாட்டை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்து இங்குள்ள படித்த வேலை இல்லாத இளைஞர்களின் வயிற்றில் அடித்தது தான் அடிமை அதிமுக அரசு.
இப்படியே அனைத்து மாநில உரிமைகளையும் மத்திய பாஜகவிடம் விட்டுக்கொடுத்து, தங்கள் பதவிகளையும் கோடி கோடியாக சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டையே மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துவிட்ட அரசுதான் அடிமை அதிமுக அரசு.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், எங்கள் அம்மா ஜெயலலிதா என புகழ் பாடிய அதிமுக தலைவர்களை “மோடி தான் எங்கள் டாடி “என்று கூறும் அளவிற்கு அதிமுக கட்சியும் பாஜகவிடம் சரணடைந்தது.
மத்திய பாஜக அரசிடம் முழுமையாக சரணடைந்து இருந்த அடிமை அதிமுக ஆட்சியின் காலம் முடிவடைந்து சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அரசியல் என்று பார்க்கின்ற பொழுது திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத இயக்கம் ..அதன் உறுப்பினர்கள் வார்டு மெம்பராக கூட தேர்தலில் வேட்பாளராக நிற்க கூடாது என்பது திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கை .
ஆனால் அதே நேரத்தில் தேர்தலில் எந்த கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்; எந்த கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதை தீர்மானித்து, திராவிடர் கழகம் ஆதரிக்கின்ற கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வதும் திராவிடர் கழகத்தின் இயக்க கடமையாகும்.
கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் முன் மொழியப்பட்ட அரசியல் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொடுமைகளிலிருந்து தமிழகத்தையும் இங்கே இருக்கின்ற திராவிட கட்சிகளையும் மீட்டெடுக்க வேண்டியது ஒரு வரலாற்று கட்டாயம் என்ற கடமை உணர்வோடு காலமறிந்து கூறிய சேவலாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது.
தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று ஒரு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்.
“மாநில சுயாட்சி ,இருமொழிக் கொள்கை, தமிழுணர்வு ,பண்பாடு ,சமூக நீதி, மதச்சார்பின்மை ,சமத்துவம், பெண்ணுரிமை, மனிதநேயம் ஆகியவற்றில் அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான லட்சிய நிலைபாடுகளை எல்லாம் தூர எறிந்துவிட்டு, ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்! ஒரே கலாச்சாரம்! என்ற கோட்பாடு உடைய ஆர்எஸ்எஸ்ஸை தாய் நிறுவனமாக கொண்ட பாஜக வுடன் கூட்டணி என்பதையும் கடந்து பாஜகவுக்கு அடிமை முறிசீட்டு எழுதிக் கொடுக்காத குறை என்கின்ற அளவிற்கு அதிமுக ஆட்சி எல்லா வகைகளிலும் தோல்வியில் விழுந்து கிடப்பதை இப் பொதுக்குழு தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறது.
அந்த அணியை தோற்கடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை தந்தை பெரியார் மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்றும் அதே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய கட்சிகள், தமிழர் வாழ்வுரிமை கட்சி, மதிமுக, கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம், மற்றும் பல்வேறு முற்போக்கு கட்சிகள் ,அமைப்புகள், மதச்சார்பின்மை கொள்கையிலும் சமூக நீதியிலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியிலும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட ஜனநாயக முற்போக்கு சக்திகள் என்பதால் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வதற்கு தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் பேராதரவை தருமாறு திராவிடர் கழக பொதுக்குழு பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
மதவாத ஜாதியவாத அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது. மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் திமுக தலைமையிலான கொள்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்பதுதான் அந்த தீர்மானம். அடிமை அதிமுக அரசிடம் இன்னும் ஆட்சியை விட்டு வைத்தால் தமிழகத்தையே ஏலம் கூறி மத்திய அரசிடம் விற்றுவிடுவார்கள்.
அடிமை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது தமிழகத்திற்கு பேராபத்தாக முடியும் என்பதை உணர்ந்த தமிழக மக்கள் அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு வாக்களித்து தங்கள் வரலாற்றுக் கடமையை சரியாக ஆற்றி இருக்கிறார்கள்..
எந்த அண்ணா அவர்கள், தன்னுடைய ஆட்சியை தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று அர்ப்பணித்தாரோ, அந்த அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அந்த அண்ணா எதிர்த்து நின்ற ஆர்எஸ்எஸ் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் பாஜக கட்சியுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வைத்து அண்ணாவிற்கு கொள்கை துரோகம் செய்த அடிமை அதிமுக அரசை மக்கள் புறக்கணித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் ஆதரவை மக்கள் அளித்துள்ளார்கள் ; வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.
திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு தமிழர் தலைவர் அவர்கள் இந்த வெற்றியை பற்றி 6-5-2021 தேதியிட்ட விடுதலை இதழில் தன்னுடைய அறிக்கையில்,
“இந்த வெற்றி சாதாரணமாக கிடைத்தது அல்ல. கடுமையான உழைப்பு, திட்டவட்டமான நடவடிக்கைகள், இவற்றிற்கிடையே ஏச்சுகள் ,பேச்சுகள், திரிபு வாதங்கள் ,பணபலம் பத்திரிகை பலம் ,ஆட்சி அதிகாரம் இவற்றையெல்லாம் எதிர்த்து நின்று அவற்றை கடந்து பெற்ற வெற்றிமாலை இந்த கூட்டணிக்கு வந்து சேர்ந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் கொள்கை வாரிசு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்பதற்கு முன்னதாகவே அரசு பணிகளை தொடங்கி விட்டார் .அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
காலியான கஜானாவையும், கட்டுப்படுத்த இயலாத நிலையில் கரோனாவையும் பரிசாக விட்டுச் சென்றது முந்தைய அதிமுக அரசு.
அந்த நெருக்கடியான காலகட்டத்திலே ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே அய்ந்து முக்கிய அரசாணைகளை வெளியிட்டிருக்கிறார்.
கரோனா உதவித் தொகையாக ரூபாய் 4000 இரண்டு தவணைகளில் அளிக்கப்படும்.
ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து விற்கப்படும்.
அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பயணம்.
இதில் ஒரு கூடுதல் அறிவிப்பாக திருநங்கைகளும் இந்த பட்டியலில் இடம் பெற்று பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது.
“ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான் தந்தேன் !” என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை அடையாளப்படுத்துவது போல உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டான ஆட்சிமுறை
“உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற ஒரு துறை உருவாக்கப்பட்டு அது மக்களின் குறைகளை தீர்க்க என்று தனியாக செயல்படும் என்று அறிவித்து படிப்படியாக அந்த குறைகளெல்லாம் தீர்க்கப்பட்டு வருகின்றன என்பது ஒரு ஆச்சரியப்படத்தக்க ஆட்சி முறை.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அந்த மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்.
ஊடகத் துறையை சார்ந்த பத்திரிக்கையாளர்களும் ,முன்கள பணியாளர்காளாக கருதப்படுவர் என்று திமுக அரசு அறிவித்துள்ளது.
முன்கள பணியாளர்களாக உயிரையே பணயம் வைத்து மருத்துவதுறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறது.
இரண்டாவது அலையில் கடுமையாக தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு அவசரகால போர்க்கால நடவடிக்கையை போல அனைத்தையும் எதிர்கொண்டு இன்றைக்கு அந்த கரோனோ பெருந்தொற்றை கணிசமான அளவில் குறைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு .
முந்தைய அதிமுக அரசு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர்களின் 497.32 கோடி ஓய்வுகால பண பலன்களை உடனடியாக பட்டுவாடா செய்ய உத்தரவிட்டிருக்கிறது திமுக அரசு..
முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு வாய்ப்புள்ளவர்களிடமிருந்து நிதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், தமிழ் வாழ்க எனும் முகப்பு பலகை மீண்டும் அங்கே நிறுவப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று மேலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிர்வாக செயலாற்றல் மிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது திட்டம் செயல்படுத்தப்பட்டு உரியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.
இன்னும் ஏராளமான திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துக் கொண்டே இருக்கின்றார்.
அடிமை அதிமுக ஆட்சி ஒழிந்து, உரிமை திமுக ஆட்சி மலர்ந்ததன் பயனை மக்களாகிய நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இறுதியாக 5-6-1948 அன்று தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே எடுத்து வைத்து கட்டுரையை முடிக்கின்றேன் .
பெரியார் பேசுகிறார்
“நான் இறந்தாலும் ஏனைய திராவிட தோழர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்! எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது.
நமது கொள்கைகள் ஓரளவுக்கு பொது மக்களின் செல்வாக்கை பெற்றுவிட்டன. இன்னும் கொஞ்ச காலத்தில் நம் இஷ்டம் போல நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது. நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடம் கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டு விடும். இந்நிலை வெகு சீக்கிரம் ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்கள் ஆக மாற வேண்டும்.”
No comments:
Post a Comment