அரசுப் பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமும், குறள்பாக்களும் ஓட்டுநர் இடத்திற்குமேலே முன்பு - தி.மு.க. அரசில் கலைஞர் போக்குவரத்துத் துறை அமைச்சராக அண்ணா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த போதே 1967 இல் செய்த ஏற்பாடு சில ஆண்டு களாக அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்காத நிலையைச் சுட்டிக்காட்டிய உடனே, காலந் தாழ்த்தாமல் எல்லா போக்குவரத்துக் கழகங் களுக்கும் அமைச்சகத்திலிருந்து, முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து மாற்றி செயல்படுத்த அறிவுறுத்தியதன் விளைவாக எங்கும் நல்ல (பழைய) ஏற்பாடுகள் - திரும்பி, அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட திருவள்ளுவர் படம், குறள் மொழிகள் இடம்பெறுவது மகிழ்ச்சி! நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்!
அதுபோலவே, கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவருடைய படம் காவி உடையுடன் இருந்ததை அகற்றி, புதிய அரசு ஒப்புதல் பெற்ற திருவள்ளுவர் படம் அவ் விடத்தில் இடம்பெற்றுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்ற செய்தியும் மகிழத்தக்க செய்தியாகும். அவருக்கும் நமது நன்றி!
பண்பாட்டு படையெடுப்பிலிருந்து தமிழ் நாட்டைப் பாதுகாப்பதில் கண்ணை இமை காப்பதுபோல் கடமையாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் தி.மு.க. அரசு அமைந்துள்ளது என்பது பெருமையாக உள்ளது.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.6.2021
No comments:
Post a Comment