கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஒரு காலத்தில் சமூகநீதிக்கே முன்னோடிகளில் ஒரு மாநிலமாக இருந்த அந்த மாநிலம் (மைசூர் மன்னராட்சியாக இருந்த காலத்திலேயே) சமூகநீதிக் கொடியை மில்லர் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் அமல்படுத்தி மன்னராட்சி படைத்த வரலாறு இன்னமும் 'பளிச்' சிட்டுக் கொண்டுள்ள நிலையில், அங்கு அமைந்துள்ள பா.ஜ.க. அரசின் கீழ் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை மனுதர்ம ராஜ்யமாகவே ஆக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது மகா வெட்கக் கேடானதல்லவா!
பெங்களூருவில் ஏற்பட்ட கணினி வேலை வாய்ப்புகள் அதையும், சுற்று வட்டாரங்களையும் 'இந்தியாவின் 'சிலிகான்வேலி' (Silicon Valley) என்ற பெருமைக்குரியதாக இருக்கும் நிலையில், அங்கேதான் சில மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களை - குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்களைத் தனிமைப்படுத்தியும்,தாக்குதல்கள் அவர்கள்மீது ஏவுவதுமான நிகழ்வுகள் சர்வ சாதாரணமான நடைமுறைகளாக இருப்பது மிகப் பெரிய இழுக்கு அல்லவா!
ஜாதிபேதத்தை எதிர்த்த கன்னபசவர் அறிவுரைகள் எல்லாம் நீர் மேல் எழுத்துகள்தானா?
கரோனா கொடுந் தொற்றுக்கான தடுப்பூசி போடும் மய்யங்களில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பொதுவாகத்தான் அனைவரும் ஜாதி, மத, பேதங்களுக்கு இடமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு திரும்புகிறார்கள்!
ஆனால் சமூகவலைதளங்களில் பரவியுள்ள ஒரு செய்தியில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியே இடம் அமைத்து ஊசி போடும் ஏற்பாடுகள் நடந்துள்ளன என்ற செய்தி - பா.ஜ.க. ஆட்சி அசல் மனுதர்ம கட்சியாக மாறி விட்டதோ என்ற அய்யத்தைத்தான் எவருக்கும் உருவாக்கும் நிலை ஏற்படுகிறது!
ஊசி போடுவதில்கூட இப்படி ஓர் உயர் ஜாதி மனப்பான்மை வெளிப்பாடு இருக்கலாமா?
ஊசி போடுவோர்கூட உயர் ஜாதியினராக இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரே மனநல மருத்துவமனை (எளிய மக்களிடையே அது பைத்தியக்காரர் ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும்.) அத்தகைய மனநலம் குன்றியவர்களைச் சேர்த்து சிகிச்சை தரும் மருத்துவமனையில் - 'பிராமணர்களுக்கென -Brahmin Wardஎன்ற ஒரு தனி அறை இருந்து, பிறகு அது ஒழிக்கப்பட்டது.
அந்த பழைய மனுதர்மக் காட்சி பா.ஜ.க. ஆட்சியில் வந்து விட்டதோ என்ற கேள்வியே எழுந்துள்ளது.
கோயிலில் தேவதாசி முறைகூட இன்னமும் கர்நாட கத்தில் சில பகுதிகளில் இருப்பது - அம்மாநிலத்திற்கு கறை அல்லவா!
அங்குள்ள சமூக நீதி இயக்கங்கள் இதுபற்றி தடுப்பு நடவடிக்கை எடுத்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நிலை நாட்டக் குரல் கொடுக்க வேண்டாமா?
காவிகள் கட்சிக்கு மறுபெயர் மனுதர்ம ஆட்சியா? என்றே கேட்கத் தோன்றுகிறது.
ராமராஜ்ஜியம் அமைப்போம் என்கிற கட்சியின் ஆட்சி தானே கருநாடகத்தில் நடக்கிறது.
No comments:
Post a Comment