அமைச்சர் சேகர்பாபு கூறியது குற்றமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

அமைச்சர் சேகர்பாபு கூறியது குற்றமா?

 தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு அவர்கள் பேசிய கருத்தை மய்யப்படுத்தி பா...வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிற அளவுக்கு அரட்டையும் அடிக்கின்றனர் - 'தினமலர்' ஏடு அதனைப் பெரிதுபடுத்தி விளம்பரமும் செய்கிறது.

"வட மாநிலத்தவர்கள் இந்தப் பகுதியில் பொருளாதார ரீதியாக வளர்ந்ததற்கு, பா... காரணமல்ல; திராவிட கட்சிகளே காரணம். கடந்த தேர்தல்களில் எல்லாம் உங்கள் ஓட்டுகள் எங்களுக்கு விழவில்லை - எங்களுக்கு 50, பா...வுக்கு 300 ஓட்டுகள் அளித்துள்ளீர்கள் என்று பேசி விட்டாராம். அதற்காகத்தான் பா...வும், 'தினமலரும்' துள்ளிக் குதிக்கின்றன.

வடவர் ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளும், ஊர்வலங்களும் தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் நடந்ததுண்டு. அவை எல்லாம் மறந்து கலந்து வாழும் ஒரு கால கட்டத்தில், வடநாட்டுக்காரர்கள் என்று கருதப்படுபவர்கள் தங்களைத் தனித்துக் காட்டுவதும், தனிக் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வதும், அந்தக் குடியிருப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்க மறுப்பதும் சரியானதுதானா என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

இந்தியா ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டாலும் பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள், கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டமாகும்.

பல்வேறு மாநில அரசுகளும்கூட, தங்கள்தங்கள் மாநிலங்களில் அந்தந்த மண்ணுக்குரியவர்களுக்கு முதன்மையிடம் அளிக்கும் வகையில் சட்டங்களை இயற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேகலாயா மாநிலத்திலும்மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமைஎன்பதே நிலைப்பாடு. 85% அந்த மாநிலத்தவர்கள்தாம். கூடுதலாக, அங்கே வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கவும் நிரந்தரமாகத் தங்கவுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 70% வேலையை மேகாலயா மக்களுக்கு வழங்கினால்தான் அரசின் சலுகைகள், ஊக்கத் தொகைகள், மானியங்கள் எல்லாம் கிடைக்கும். அதுவும் அவ்வப்போது வந்து ஆய்வு செய்த பிறகுதான் வழங்கப்படும்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்ரகாண்ட், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, கேரளா, சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், டில்லி என்று எல்லா மாநிலங்களிலும் இதைத் தீவிரமாக  - தெளிவாகவே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இங்கே எல்லாம் அரசமைப்பு உறுப்பு 371-D, 371-A, 371-1, 371-E , ஆகியவற்றில் ஒன்றை வலுவாக வைத்துக் கொண்டுள்ளார்கள். அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை வேலை வாய்ப்பு.

ஆந்திராவின் கல்வி நிறுவனங்களில் 85% அந்த மாநிலத்தவர்களுக்குத்தான் முன்னுரிமை (Andhra Pradesh Educational Institution Order 1974). 

மண்ணின் மக்களுக்குத்தான் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று 1959இல்கட்டாய வேலை வாய்ப்பு அலுவலக, கட்டாய அறிவிப்புச் சட்டம்-1959’ ஒன்று உள்ளது. இன்றளவும் அரசு-தனியார் வேலைகளுக்கு அந்தந்த மாநில, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகத்தான் ஆள் எடுக்க வேண்டும் என்ற இந்தச் சட்டம் இன்றும் உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 371-C அரசமைப்பு உறுப்பின்படி, சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டு, கல்வி வேலைவாய்ப்பில் அந்த மாநிலத்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிக்கிம் மாநிலத்தில் அரசமைப்பு உறுப்பு 371-C  நடைமுறையில் உள்ளது. அங்கு 85 விழுக்காடு வேலைகள் சொந்த மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை. அதுவும் அந்த மாநில மொழி, பண்பாடு - பழக்க வழக்கங்கள் ஆகியவையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தனியார் துறைகளிலும் 90% வேலையை சிக்கிம் மாநிலத்தவர்களுக்கே வழங்க வேண்டும் என, ‘சிக்கிம் உள்ளூர் பணி மேம்பாட்டுச் சட்டம்வகுத்து அந்த மாநில சட்டப்பேரவையில் வைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இப்படி சட்டம் போட்ட மாநிலங்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

தேசிய நீரோட்டம் பற்றி அழுத்தமாகப் பேசும் பா... ஆளும் மாநிலங்களில் இந்த நிலை நீடிக்கத்தானே செய்கிறது?

'தாயும் பிள்ளையுமாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு வேறு தான்' என்பது நம் நாட்டுப் பழமொழி.

ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப் பாதையும் அல்ல. எந்த மாநிலத்தில் வாழ்கிறார்களோ, வணிகம் நடத்துகிறார்களோ, அந்த மாநிலத்து மக்களோடு கலந்து பகிர்ந்து வாழ்வதுதான் நல்லது - நேர்மையும் கூட! ஒற்றுமைக்கான வழியும் கூட!

தனித்துத் தனித்து, ஒதுங்கி ஒதுங்கி நகர்ந்தால் அவற்றை மண்ணின் மைந்தர்கள் சற்று வித்தியாசமாகத்தானே பார்ப்பார்கள்?

ஒரு நடைமுறை உண்மையை ஓர் அமைச்சர் சுட்டிக் காட்டினால், அதனை வேறு விதமாகச் சித்தரிப்பது தேவையற்ற வேலை - வீண் பிரச்சினையை விலைக்கு வாங்குவதும் ஆகும்.

பா... அளந்து பேசட்டும்! - 'தினமலர்கள்' அடக்கமாக இருக்க வேண்டிய காலம் இது!

No comments:

Post a Comment