இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் அதிகம் வாழும் மாநிலம் உத்தரப்பிரதேசமே! பிரதமர்களை அதிகம் தந்த மாநிலமும் அதுதான்!
அங்கு 20 கோடி மக்களில் பிற்படுத்தப்பட்டோர் 40%, பார்ப்பனர்கள் 11.26%, தாக்கூர்கள் - 9%, யாதவர்கள் - 8.7%, பிற்படுத்தப்பட்டவர்களுள் 5013 ஜாதிப் பிரிவுகள் உள்ளன.
நில உடைமை என்பதும் பெரும்பாலும் உயர் ஜாதியினரின் கைவசம்தான்!
எனவே, பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள்மீது இரட்டைத் தாக்குதல் என்ற அடிப்படையில் அவர்கள் அடிமைத் தன்மையில்தான் உழலும் நிலை!
இடஒதுக்கீடு அடிப்படையில் ஊராட்சித் தேர்தல்கள் நடைபெற்று வெற்றி பெற்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்தப் பணித் தகுதிக்கான முறையில் செயல்பட முடியாது. தலைவர் என்ற முறையில் கடிதங்களுக்குக் கைரேகை வைத்துவிட்டுக் கூலி வேலைக்குச் செல்லுவதோடு அவர்களின் ஊராட்சித் தலைவர் அந்தஸ்து அஸ்தமனமாகி விடும்.
கான்சிராம் அவர்கள் ஒரு புதிய வழிகாட்டுதலை அரசியலில் கொடுத்தார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர்தான் இந்நாட்டின் பெரும்பான்மையினர். அவர்கள்தாம் வெகு மக்கள் - ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருக்க வேண்டியதே ஜனநாயகம்; எனவே "பகுஜன் சமாஜ்" கட்சி என்ற ஓர் அமைப்பினை நிறுவினார். நியாயமாக இந்த அணுகுமுறை இந்திய ஒன்றியம் முழுவதுமே வளர்ந்து வந்திருந்திருக்கக் கூடிய ஆழமான கருப்பொருளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.
இதற்குப் பரிசோதனைக் கூடமாக உ.பி. அமைந்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த மாயாவதி முதல் அமைச்சராக்கப் பட்டார்.
உ.பி. தலைநகரான லக்னோவில் "பெரியார் மேளா" (1995) நடத்தி - இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யப்பட்டது.
இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கில் திரண்டனர். அந்தச் சிந்தனையை மேலால் கொண்டு செல்லும் வாய்ப்பு இருந்த நேரத்தில் நிறுவனர் கான்சிராம் நோய்ப் படுக்கையில் விழுந்தார். அவரது இறுதிக்காலம் இருட்டறையில் வீழ்ந்தது.
கான்சிராம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அரசிய லுக்குக் கொண்டு வரப்பட்ட மாயாவதி கான்சிராமின் அடிப்படை கோட்பாட்டையே தலைகீழாகப் புரட்டி எறிந்தார்.
"பார்ப்பனர்களை செருப்பால் அடிப்போம்!" என்கிற அளவுக்கு 'உச்சத்தில்' போயிருந்த மாயாவதி 'பகுஜன்' சமாஜ் கட்சியின் பெயரையே 'சர்வஜன்' என்று மாற்றி, பார்ப்பனர்களை தம் கட்சியில் இணைத்துக் கொண்டு கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு பார்ப்பனரையே கொண்டு வந்தார். இதன் மூலம் தன் தனித் தன்மையை இழந்து, உ.பி. அரசியலில் அவருக்கு இருந்த முக்கியத்துவமும், முதன்மை இடமும் தலைகீழாகக் குடைசாய்ந்து போனது- கான்சிராமின் நோக்கமும் உருக்குலைந்தது.
இந்த நிலையில் உ.பி.யில், 2022 சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் கால கட்டத்தில் பா.ஜ.க. தலைமை சாமியார் ஆதித்யநாத்தை ஓரங்கட்டி (அவர் தாக்கூர் பிரிவைச் சேர்ந்தவர்) பார்ப்பனர் ஒருவரை முதல் அமைச்சராகக் கொண்டு வரலாம் என்ற யூகத்தை வகுத்து இருப்பதாகத் தெரிகிறது.
காங்கிரசின் அகில இந்திய பொதுச் செயலாளராக விருந்த ஜிதின் பிரசாத் என்ற பார்ப்பனரை பா.ஜ.க. தன் கட்சிக்கு இழுத்துள்ளது. "பிராமண சேத்னா பரிஷத்" என்ற அமைப்பை உ.பி.யில் இவர் நடத்தி வருகிறார்.
இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு, சாமியார் ஆதித்யநாத்தை மீண்டும் அவரது மடத்துக்கு அனுப்பி வைத்து பார்ப்பனரான ஜிதின் பிரசாத்தை முதல்அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் காய்கள் நகர்த்தப் படுகின்றன என்பதை 'தினமணி' (10.6.2021) ஏடே செய்தி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
முதல் அமைச்சர் ஆதித்யநாத் - இதற்கு மேல் இனியும் கெட்ட பெயர் வாங்க முடியாது என்கிற எல்லையைத் தொட்டு விட்டார்.
தனது பிறந்த நாளுக்குக்கூட பிரதமரும், உள்துறை அமைச்சரும் வாழ்த்துத் தெரிவிக்காதது - இதன் பின்னணியில்தான் என்பதை உணர்ந்த முதல் அமைச்சர் ஆதித்யநாத் அவசர அவசரமாகப் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு மரண அடி கிடைக்கும் நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடையாணிக்கே ஆபத்தாக முடியக் கூடும். அகில இந்திய பா.ஜ.க.வுக்குப் பேரிடியாக மாறும் என்பதே அரசியல் கணிப்பு!
No comments:
Post a Comment