உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மரப்பெட்டியில் மிதந்து வந்த ஒரு பச்சிளம் பெண் குழந்தையை படகோட்டி ஒருவர் மீட்டுள்ளார்.
கங்கை நதியில் படகு போக்குவரத்து வழக்கமான ஒன்றாகும். அவ்வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபுர் பகுதியில் குல்லு சவுத்ரி என்பவர் படகோட்டியாக பணி புரிந்து வருகிறார். 15.6.2021 அன்று மாலை அவர் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது நதியில் ஒரு மரப்பெட்டி மிதந்து வருவதைக் கண்டு அதை மீட்டு எடுத்தார்.
அந்தப் பெட்டிக்குள் ஒரு பெண் குழந்தை இருந் தது. அத்துடன் துர்க்கை உள்ளிட்ட பல கடவுளர்களின் படங்களும், குழந்தையின் ஜாதகமும் இருந்துள்ளன. அந்த ஜாதகத்தின் படி குழந்தையின் பிறந்த தேதி மே மாதம் 25 என்பதும், குழந்தையின் பெயர் கங்கை மகள் என்பதும் தெரியவந்தது. அந்தக் குழந்தையை குல்லு சவுத்ரி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அக்கம்பக்கத்தினரிடம் அவர் குழந்தையை தமக்குக் கங்கை மாதா பரிசாக அளித்ததாகவும், அதைத் தாமே வளர்க்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிய வந்தது.
அரசு அதிகாரிகள் குல்லு சவுத்ரியிடம் இருந்து குழந்தையை மீட்டு ஆஷா ஜோதி மய்யத்தில் சேர்த் துள்ளனர். மய்யத்தினர் குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்த்து குழந்தை நலமாக இருப்பதை உறுதிப் படுத்தி உள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படகோட்டி குல்லு சவுத்ரிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் குழந்தையை அரசு செலவில் தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக அறிவித்துள்ளார். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
"கடந்த முழு அடைப்பு நேரத்திலும், இந்த ஆண்டும் இந்தியில் இராமாயணம், மகாபாரதம் தொடர் நடந்துகொண்டு இருக்கிறது. இதில் குந்தி என்பவர் தனது மகனை ஆற்றில் விடுவதும், அதே போல் ராமாயணத்திலும் ஒரு மன்னன் தனது மகளை பெட்டியில் போட்டு ஆற்றில் விடுவது போன்றும் கதைகளைக் கண்டு இப்படி தமது பிள்ளையையும் விடவேண்டும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தை களை ஆற்றில் விடும் நிகழ்வுகள் ஒன்றிரண்டு நடந்து வருகின்றன. இது தொடர்பாக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டாமா? அதை விட்டுவிட்டு இவ்வாறு ஆற்றில் விடும் நிகழ்விற்கு ஊக்கம் தருவது போல் அரசு நடந்து கொள்கிறது" என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் குறிப் பாக இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங் களை, புராணக் கதைகளை மிகுந்த தொழில்நுட்பத் தோடு தத்ரூபமாக, உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ஒளிபரப்புவது - எத்தனை ஆபத்தானது என்பதை இதுபோன்ற நடப்புகள் நிரூபிக்கவில் லையா?
அறிவியல் கருவிகள் ஆக்கப்பூர்வமாக மக்களைச் சிந்திக்கத்தூண்டுபவைகளாக இருக்க வேண்டுமே தவிர, மூடநம்பிக்கைகள் மீது உற்சாகம் ஊட்டுவதாக, பெற்ற பிள்ளையையே ஆற்றில் விடும் அளவுக்கு அதீதமான ‘ஆன்மிக‘ வெறியை ஊட்டுவதாக இருக்கக் கூடாது.
பகுத்தறிவாளர்கள், இவற்றைச் சுட்டிக் காட்டினால், மதநம்பிக்கையில் தலையிடுகிறார்கள் என்று கூக்குரல் போடுவதும், சில நீதிமன்றங்களும் துணை போவதும் மானுடத்துக்குச் செய்யும் மிகப்பெரிய தீங்குகளாகும்.
உருத்திராட்சக் கொட்டை மகிமை என்று ஒளிபரப் பப்பட்ட ஒரு விளம்பரக் காட்சி இலண்டன் தொலைக் காட்சியில் தடை செய்யப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
No comments:
Post a Comment