காரைக்குடி, ஜூன் 30- தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் நெல்லை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மண்டலங்களின் திராவிடர் கழகமும் இணைந்து காணொலி வாயிலாக நடத்திய பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா 28-06-2021 அன்று மாலை காணொலி வழியாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு தலைமை வகித்தார். அமைப்புச் செய லாளர் வே.செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இணைப்புரை வழங்கிட தென்மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன் ராசா, தென்மாவட்ட பிரச்சாரக்குழுச் செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை, மாநில தொழிலாளர் பேரவைத் தலைவர் அ.மோகன், மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில மகளிரணி அமைப்பாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, சிவகங்கை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் நா.கணேசன், திண்டுக்கல் மண்டல தலைவர் மு.நாகராசன், மதுரை மண்டல தலைவர் கா.சிவகுருநாதன், சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்திர ராசன், நெல்லை மண்டல தலைவர் சு.காசிராஜன், திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராசன், மதுரை மண்டல செயலாளர் நா.முருகேசன், நெல்லை மண்டல செயலாளர் அய்.ராமச்சந்திரன், மாநில ப.க.துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, மாநில ப.க.துணைத்தலைவர் கா.நல்லதம்பி,
மாவட்ட தலைவர்கள் உ.சுப்பையா, ச.அரங்கசாமி, அ.முருகா னந்தம், ச.இரகுநாகநாதன், இல.திருப்பதி, பெரியார் இரணியன், எஸ்.தனபாலன், எம்.முருகேசன், இரா.காசி, மா.பால் இராசேந்திரம், எம்.எம்.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் பெரு.ராசாராம், த.ம.எரிமலை, தி.ஆதவன், பெ.கிருஷ்ணமூர்த்தி, பூ.மணிகண்டன், அண்ணா ரவி,மா.முருகன், ச.இராஜேந்திரன், மு.முனியசாமி, கோ.வெற்றி வேந்தன், வே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி வகுப்பு குறித்த அறிக்கையினை மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் மதுரை மாவட்ட செயலாளர் சுப.முரு கானந்தம், சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர்
கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தென்காசி மாவட்ட தலைவர் த.வீரன், திண்டுக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர், திண் டுக்கல் மாவட்ட இணைச் செயலாளர் இரா.காஞ்சித்துரை ஆகியோர் வழங்கினர்.
மண்டல தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் பேசினார்.
பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்கள் சார்பில் சட்டக் கல்லூரி மாணவர் முனீஸ்வரன் (தினையத்தூர், திருவா டானை), சுபா யாழினி (மதுரை),
திவ்யா (திண்டுக்கல்), உதயச் செல்வி (நெல்லை) ஆகியோர் தமது கருத்துகளை தெரிவித்தனர்.
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேரா.நம்.சீனிவாசன் அறிமுகவுரையாற்றினார்.
பெரியார் ஆயிரம் நூலினை படித்த உங்களுக்கு அடுத்ததாக அறிவோம் பெரியாரை எனும் புத்தகம் கிடைக்கப்போகிறது. அந்த புத்தகம் 23 ஆண்டுகளுக்கு முன்பு நமது கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் 12 தலைப்புகளில் 115 சொற்பொழிவுகளில் தொடர்ந்து பேசியதன் தொகுப்பு நூல். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை அடைய நாம் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்போம். நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்றினார். அவர் தனது உரையில்,
இந்த பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி இதை நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். புதுச்சேரி உள்ளிட்ட இருபது மண்டலங்களிலிருந்து மொத்தம் 1434 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 944 பேர் மாணவர்கள், 496 பேர் மாணவியர்கள். இதில் 1005 பேர் இயக்கத் தொடர்பு இல்லாதவர்கள் என்பது கூடுதல் தகவல். இப்போது நாம் நடத்தியுள்ள இந்த பயிற்சி வகுப்பானது தொடக்கப்பள்ளி போன்றதுதான். இனி அடுத்தடுத்து உயர்நிலை, மேல்நிலை என்ற அடிப்படையில் வகுப்புகள் நடக்கவுள்ளது. வயது வரம்பு காரணமாக 129 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர்களுக்கு தனியே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று உரியவர்களுக்கு கடிதம் மூலம் பதில் அனுப்பியுள்ளோம்.
மதுரை மண்டலம் 74, நெல்லை மண்டலம் 53, திண்டுக்கல் மண்டலம் 71, சிவகங்கை மண்டலம் 66 என மொத்தம் 264 பேர் கலந்து கொண்டனர். இதில் 78 பேர் கழக குடும்பத்தை சேர்ந்தவர்கள். 186 பேர் கழகத்திற்கு தொடர்பு இல்லாத புதியவர்கள். இவர்களில் 136 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் மொத்தம் 4 பேர். மதுரை மண்டலத்தை சேர்ந்த பிரதீப், கலையரசன்,வேல் அரவிந்த், மற்றும் சிவகங்கை மண்டலத்தை சேர்ந்த மாணவி பாலாமணி ஆகியோர். இவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். வரும் 2 ஆம் தேதி முழு முடிவுகளும் அறிவிக்கப்படும். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
கேட்டலும் கிளத்தலும்
பெரியாரியல் பயிற்சி வகுப்பில் - நிறைவாக மாணாக்கர் களின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:
சு.பெரியார் மணி, போடி
கேள்வி: பெரியார் எனும் அடைமொழி எப்போது வந்தது?
பதில்: 1938இல் நடந்த பெண்கள் மாநாட்டில் நீலாம்பிகை அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், தர்மாம்பாள் உள்ளிட்ட பெண் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் பெரியாரின் தொண்டுகளை பாராட்டி ஈ.வெ.ராமசாமி அவர்கள் இனிமேல் பெரியார் ஈ.வெ.ரா. என்று அழைக்கப்படுவார் என்று கூறி அந்த பட்டத்தை வழங்கினர். பின்பு காலப்போக்கில் மக்களாகவே ஒருமித்து தந்தை பெரியார் என்று அழைத்து வருகின்றனர்.
சுபா யாழினி, மதுரை
கேள்வி: கலைஞர் தாத்தா கூறியது போல நீங்கள் தான் தந்தை பெரியார் தாத்தாவோடு அதிக நாட்கள் இருந்திருக்கிறீர்கள். அப்படி இருந்த உங்களுக்கு ஏதேனும் குறையிருக்கிறதா?
பதில்: தந்தை பெரியார் அவர்கள் மரணத்திற்கு முன்பு(டிச-24) கடைசியாக டிச-7,8 ஆகிய நாட்களில் நடத்திய மாநாட்டில் பேசும்போது நான் சாகப்போகிறேனே என்று கூட கவலைப்படவில்லை, உங்களையெல்லாம் சூத்திர மக்களாக விட்டுவிட்டு போகப் போகிறேனே என்று தான் கவலைப்படுகிறேன் என்று பேசினார். அதாவது ஜாதி எனும் இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதித் தான் அவ்வாறு சொன்னார்.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி எனும் சொல் இருக்கிறது. அதை நீக்க வேண்டும்.அந்த குறையை போக்கத்தான் உங்களை போன்ற மாணவர்கள் வந்து வீட்டீர்களே! உங்கள் காலத்தில் அது வெற்றி பெறும். பெரியாரின் தத்துவத்திற்கு தோல்வி என்பதே கிடையாது. வெற்றி பெற்றே தீரும்.
புஷ்பா யாழினி, ஆறுமுகநேரி, நெல்லை மண்டலம்
கேள்வி: பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புக்காக நமது காலத்தில் என்ன திட்டம் இருக்கிறது அய்யா?
பதில்: இப்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு வரப் போகிறது இந்த ஆட்சியில். அதற்காக நாம் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியுள்ளோம். இன்னும் ஒரே சுடுகாடு இல்லை என்ற பிரச்சினைகளெல்லாம் இருக்கிறது! அவ்வப்போது சூழலுக்கு ஏற்றவாறு போராட்டக் களங்கள் இருக்கும்.
வேல் அரவிந்த், மதுரை
கேள்வி: கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கூட மூட நம்பிக்கைகள் பரவியுள்ளதே! அதை தடுக்க என்ன வழி?
பதில்: மாணவர்களுக்கு விஞ்ஞானத்தை போதித்தால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும். நமது கல்வி நிறுவனங்களில், பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகள் குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்று ஒரு மூட நம்பிக்கை உள்ளது! அதை முறி யடிக்கும் விதமாக மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்து அவர்களோடு நாங்களும் உணவருந்தினோம். பெரியார் திடலில் கூட கழகத் தோழர் குடும்பத்து கர்ப்பிணி பெண் (திருமகள் - இறையன் அவர்களின் பெயர்த்தி சீர்த்தி)ஒருவர் அதில் பங்கேற்றார். இன்றைக்கு அவருக்கு நல்லவிதமாக குழந்தையும் பிறந்து நலமுடன் உள்ளனர். இது போன்ற அறிவியல் நிகழ்வுகளை பெரிய அளவில் நடத்த வேண்டும்.
நீங்கள் பேராசிரியராக வந்த பின்பு மாணவர்களிடத்தில் இதையெல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
அருண்பாண்டி, நிலக்கோட்டை
கேள்வி: அய்யா இதுவரை இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பாடத்திட்டத்தில் இடம் பெறவில்லையே ஏன்?
பதில்: நல்ல கேள்வி. நீங்கள் சொன்னது போல அதை இடம் பெறச் செய்ய முயற்சிப்போம். இன்னும் வைக்கம் போராட்ட வரலாறே பாடங்களில் இடம் பெறவில்லை என்பது நமக்கு வருத்தம் தான். கண்டிப்பாக அதற்கான முயற்சிகள் நடக்கும். இப்போது தான் நமது பகுத்தறிவு ஆட்சி அமைந் துள்ளது. செய்வோம். தாங்கள் நினைவூட்டியதற்கு நன்றி.
செல்லப்பா, பகையனி
கேள்வி: அய்யா பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழ் வெகு மக்களிடம் சென்று சேரவில்லையே ஏன்?
பதில்: விடுதலை நாளிதழ் மற்ற ஏடுகளைப் போல சினிமா,ஜோதிடம் போன்ற செய்திகளை நிரப்பி வியாபாரம் செய்யும் நாளேடு அல்ல. முற்றிலும் செய்திகளை கருத் துகளை பரப்பும் நாளேடாகும். எனவே அதற்கு விளம்பரம் கிடைப்பதில்லை. இப்போது PDF வடிவில் வாட்ஸ்அப்பில் நமது தோழர்கள் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து உங்களை போன்ற மாணவர்கள் தொடர்பு கொண்டு பெற்று பரப்பும் பணியில் ஈடுபட வேண்டும்.
தமிழ் அரசு, கன்னிவாடி
கேள்வி: பகிரங்கமாக சட்டசபையில் தன்னை பாப்பாத்தி என்று அறிவித்த ஜெயலலிதாவை 69 சதவிகித இட ஒதுக் கீட்டு பிரச்னையில் எவ்வாறு வேலை வாங்கினீர்கள் அய்யா?
பதில்: 69 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினைக்கு ஆபத்து வந்தபோது, அதுவும் திராவிட இயக்க ஆட்சிக்கு ஆபத்து வரும்போது தான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளை கையிலெடுப்பார்கள். அது அவர்களுக்கும் ஒரு நல்ல பெயரை தரும்.ஆட்சிக்கும் பாதுகாப்பு என்ற நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நம்மை அணுகி சமூகநீதிக்கு பிரச்சினை என்றால் அதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி அவர்களை அழையுங்கள் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அறிவித்து நம்மையும் அழைத்தார்கள்.
நாமும் அதில் பங்கேற்று '31 சி' என்ற தனிச் சட்டத்தை உருவாக்கி அதை 9 ஆவது அட்டவணையில் இணைக்கச் செய்து அதற்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்( இவர் ஆந்திர பார்ப்பனர்), மற்றும் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ( இவர் உ.பி.பார்ப்பனர்) ஆகியோரிடம் ஒப்புதல் பெற வைத்தோம்.
ஒப்புதல் கையெழுத்து போட்ட பிறகு எங்களின் இடங்களை வேண்டுமானால் நீங்கள் பெற்று விடலாம். ஆனால் எங்களின் மூளையை நீங்கள் பெற முடியாது என்று சங்கர் தயாள் சர்மா பேசியிருந்தார். அந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பங்கேற்ற மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் பேசும் போது உங்கள் மூளை எங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் உங்கள் மூளை கெட்டுப்போன, விஷம் நிறைந்த மூளை என்று பதிலளித்து பேசினார். இவையெல்லாம் கடந்த கால வரலாறு. பார்ப்பனர்கள் நம்மை பயன்படுத்திய காலம் போய் பார்ப்பனர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார் தந்த புத்தியில் பாப்பாத்தி என்று சொன்ன அம்மையார் ஜெயலலிதா அவர்களை வேலை வாங்கினோம். நம்மை பொறுத்த வரையில் யார் நன்மை செய்தாலும் அவர்களை பாராட்ட தயங்கியதில்லை. அப்போது கூட என்னை இழிவு படுத்தி பலரும் பேசினார்கள்.இவர் பெட்டியை வாங்கி விட்டார் என்றெல்லாம் கேவலப்படுத்தி பேசினார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
அதற்கு முன்பு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு " மகளிர் உரிமை காத்த மாண்பாளர்' என்ற பட்டத்தை வழங்கினோம். அதே அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு நிலைநாட்டிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு" சமூகநீதி காத்த வீராங்கனை" என்ற பட்டத்தை வழங்கினோம்.
நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விழா நிறைவுப் பேருரையாற்றினார்.
அவர் தனது உரையில், நடந்து முடிந்த பயிற்சி வகுப்புகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நமது திராவிட நாற்றுகள் இங்கே பேசினார்கள். கரோனா கால முடக்கத்தில் அனைவரும் முடங்கிப் போய் வீட்டில் இருந் தாலும் நமக்கு ஆறுதலாக அய்யா பெரியார் கிடைத்திருக் கிறார். 1972இல் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியார் அவர்களை பாராட்டி நான்கு வரிகளில் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தொலை நோக்காளர், மூடநம்பிக்கை களின் கடும் எதிரி, சமூக சீர்திருத்தவாதி என்று பாராட்டியது.அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான் அதை வழங்கினார்.
இன்றைக்கு கூட பார்ப்பனர்கள் அதில் விஷமப் பிரச்சாரம் செய்தனர். அதை முறியடித்தோம். அது நிலைக்காது. 13 லிருந்து 25 வயது வரை பாலின வேறுபாடு இல்லாமல் பிறவிபேதமில்லா வாழ்க்கையை வாழ பெரியார் இயக்கம் உங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
தான் பெற்ற அனுபவங்களை இங்கே நான்கு மாணவர்கள் சிறப்பாகவும், சுருக்கமாகவும் பேசினார்கள்.அவர்களுக்கு நமது பாராட்டுகள்.வாழ்த்துகள். அதிகநேரம் பேசுபவர்களை விட சுருக்கமாக பேசுபவர்களுக்குத்தான் குறிப்பு தேவை. இந்த பட்டறையில் நீங்கள் இன்று தெரிந்து கொண்டு, நாளை புரிந்து கொண்டு, பிறகு அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நம்மை பொறுத்தவரையில் பொதுநலம் என்பது அவரவர் சுயநலமாகும். இந்த பயிற்சி பட்டறை அறிவாயு தங்களை உருவாக்கும் பட்டறை. அதிலும் பெரியார் எனும் பேராயுதம், அது அறிவுப் போராயுதம் உங்களுக்கு கிடைத் துள்ளது. நீர் இறைப்பது, நாற்று நடுவது என உழைத்து பயிர்களை உருவாக்கியுள்ளோம்.
மிகச் சிறப்பான முறையில் இந்த பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்த அத்தனை தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் காரைக்குடி மாவட்ட செயலாளர் கு.வைகறை நன்றி கூறினார். மதுரை பீபீ குளம் சுரேசு காணொலி நிறைவு விழாவை ஒருங்கிணைப்பு செய்தார். விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குனர் மருத்துவர் சோம.இளங்கோவன், புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, பெரியார் மருத்துவ குழுமத்தின் தலைவர் மரு.இரா.கவுதமன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன், மும்பை மாநகர செயலாளர் பெ.கணேசன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.செயராமன், சூம் செயலியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருவெறும்பூர் வி.சி.வில்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் காஞ்சித்துரை அவர்களின் தந்தையார் தேர்வு நடந்த அன்று இயற்கை எய்தினார். அந்த சூழலிலும் பயிற்சி வகுப்பு தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அவரை 'கடமை வீரர்' காஞ்சித்துரை என்று அழைத்து பெருமைப் படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அவர் தந்தை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். அதற்கு காஞ்சித்துரை அழுத கண்களோடு நன்றி தெரிவித்தார் அனைவரையும் நெகிழச் செய்தது.
தொகுப்பு: தி.என்னாரெசு பிராட்லா
No comments:
Post a Comment