ஏதோ பார்ப்பனர்கள் ஏதுமிலிகளாக - சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக - உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக- உதாசினம் செய்யப்பட்டவர்களாக - பரிதாபத்துக்கு உரியவர்களாக மூலையில் ஒதுக்கப்பட்டது போல் மூக்கால் அழும் போக்கு முதலைக்கண்ணீர்தான் என்பது நாட்டு மக்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.
"அய்யோ பாவம்" என்று இரக்கம் காட்டும் நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்களா?
'தினமலர்' எனும் பார்ப்பன சங்கத்தின் அதிகாரப்பூர்வமற்ற ஏடு இந்த வகையில் எழுதுவதை நினைத்தால் இவர்களின் பாசாங்குத் தனத்தைப் பச்சையாக -பட்ட வர்த்தமாக பகலில் சூரியனைப் போல தெரிந்து கொள்ளலாம்.
15.6.2021 நாளிட்ட 'தினமலர்' ஏட்டின் எட்டாம் பக்கத்தில் ஒரு கடிதம் - அந்தக் கடிதம் இதோ:
பிராமணர் காரணமா?
"இந்த தேசத்தில் நடக்கும் அத்தனை அநீதி, அக்கிரமங்கள், போராட்டங்கள், குண்டு வெடிப்புகள், பயங்கரவாத செயல் அனைத்திற்கும் பிராமணர்கள் காரணமா?அவர்களால் இந்த தேசத்துக்கும், சமுதாயத்திற்கும், கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல் துறைகளுக்கும் எந்தவித பயனும் இல்லையா? அப்படியென்றால், இந்நாட்டில் வாழ்வதற்கு தகுதியற்றோராக, அவர்களை அறிவித்து விடுங்கள். ஆனால்... 50 ஆண்டுகளாக, சமூக நீதி கொள்கையுடைய திராவிட கழகங்கள் தானே, மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. அப்புறம் ஏன் சமூக மாற்றம் ஏற்படவில்லை?பிராமண சமுதாயத்திற்கு எந்த சலுகையும் தரப்படுவதில்லை; எந்த பதவியிலும் இட ஒதுக்கீடு இல்லை; எங்கும் முன்னுரிமையில்லை.கடந்த 50 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட ஓர் ஜாதி எப்படி, திரும்ப திரும்ப நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு காரணமாய் இருக்க முடியும்? தமிழகத்தில் பிராமணரை தவிர, வேறு எந்த ஜாதியை பற்றியும் இழிவாக பேசினால், கலவரம் வெடிக்கும்; சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகும். பிராமணரை மட்டும், எவ்வளவு வேண்டு மானாலும் கேலி செய்யலாம்; அரசு அதை வேடிக்கை பார்க்கும்.
ஒரு மனிதனின் பிறப்பை பார்க்காதீர்; அவனால், இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை என பார்ப்பது தான் நியாயமானது."
- இதுதான் அந்தக் கடிதம்.
ஆசிரியர் கடிதங்கள் என்பவை பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே ஒரு குருசேத்திரம்தான். சன்னமாக விஷ விதைகளை விதைக்கும் இடம் அது.
இந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பவைகளில் ஏதாவது மருந்துக்கும் - ஓர் எள் மூக்கு அளவுக்காவது உண்மை இருக்கிறதா?
கல்வி நிலையில் இவர்கள் உச்சத்தில் இல்லையா? வேலை வாய்ப்பில் இவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரமான மூன்று விழுக்காட்டுக்கு மேல் பல மடங்கு இல்லையா?
வேலை வாய்ப்பு இல்லாமல் ரிக்ஷாக்களை இழுத்துக் கொண்டு இருக்கிறார்களா? கொளுத்தும் வெயிலில் சாலை போடும் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களா?
ஊடகங்கள் யார் கைகளில் இருக்கின்றன? டி.வி.எஸ். போன்ற தொழிற்சாலைகளில் கீழ்மட்ட வேலைகளைத் தவிர மற்ற வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பவர்கள் யார்?
சிம்சன், சேஷசாயி, டி.டி.கே. குரூப், இண்டியன் சிமெண்ட், ராம்கோ சிமெண்ட் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டே! இங்கெல் லாம் பணிபுரிவோரில் பார்ப்பனர்கள் ஆதிக்கம்தானே - மறுக்க முடியுமா? மத்திய அரசு நிறுவனங்களில் நிரம்பி வழிவோர் யார்?
"இந்து" ஏட்டின் அலுவலகத்திற்குள் நுழைந்தால் அங்கு முக்கிய இடங்களில், குளு குளு அறைகளில் அமர்ந்திருப்பவர்கள் யார்?
சங்கரமடத்திற்குள் ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் அல்லது பிற்படுத்தப்பட்டவர் ஒரு குமாஸ்தா வேலையில் அமர முடியுமா?
ஒரு சுப்பிரமணியசாமி சங்கரமடத்துக்குச் சென்றால் சங்கராச்சாரியாருடன் சரியாசனத்தில் அமர முடியும். மத்திய அமைச்சராக இருந்தும் ஒரு பொன்.ராதாகிருஷ்ணன் தரையில் தான் அமர முடியும் என்ற திமிர்தனத்துக்கு என்ன பெயர்?
"மனுதர்மத்தைத் தடை செய்வதாக இருந்தால் திருக்குறளையும் தடை செய்ய வேண்டி வரும்" - என்று 'தினமணி' எழுதுவது எந்த உணர்ச்சியோடு?
பூஜை வேளையில் இன்றைக்கும் கூட சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டார் - காரணம், தமிழ் நீஷபாஷை என்ற நிலை எதைக் காட்டுகிறது?
'ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்' என்று தாழ்த்தப்பட்டவர் களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும், ஆள் பலத்துக்காகக் கூவிக் கூவி ஒரு பக்கத்தில் அழைத்துக் கொண்டு, அந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக் கும், அர்ச்சகர் உரிமைக்காக - தந்தை பெரியார் அவர்களின் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் திமுக ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு 13 பார்ப்பனர்கள் சென்றனரே - அதன் பின்னணியில் சங்கராச்சாரியாரும், ஜீயரும், ஆச்சாரியாரும் (ராஜாஜியும்) இருந்தனரே - இது எதைக் காட்டுகிறது?
கேரள மாநிலம், கொச்சியில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் - தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்றுப் பேசுவது சட்டப்படி சரியானதா?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சமஸ்கிருதப் பேராசிரியராகிய வெங்கட கிருஷ்ணன்; 'நாய்களில் பொம்மரேனியன், லேப்ரேடர் போல மனிதர்களில் ஏன் ஜாதி இருக்கக்கூடாது?' என்று பேசியுள்ளதைக் கேட்டும் பொறுமையாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கோழைத்தனம் என்று 'தினமலர்' நினைக்கிறதா?
மத்தியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகப் பார்ப்பனர்களே ரொம்பவும் துள்ளாதீர்கள். இது பெரியார் மண் - திராவிடப் பூமி! நினைவிருக்கட்டும்!!
No comments:
Post a Comment