கழகத் தலைவரின் அறிக்கைக்குக் கைமேல் பலன்! அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

கழகத் தலைவரின் அறிக்கைக்குக் கைமேல் பலன்! அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படம்!

 முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு


சென்னை, ஜூன் 17 அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மீண்டும் திருவள்ளுவர் படம் வைக்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, தனி மனித ஒழுக்கத்தையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் 2 அடிகளில் தெளிவாக விளக்கும் உலகப் பொதுமறை நூலான திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இடம் பெற வேண்டும், திருவள்ளுவரின் படமும் வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து மாநகர, தொலைதூர அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்கள் இடம் பெற்றன. ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் பயணிகள் கண்ணில் சட்டென்று தெரியும் வகையில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் வைக்கப்பட்டன.

மேலும் பயணிகள் அமரும் ஜன்னல் இருக்கை ஓரம் திருக்குறள் எழுத்து வடிவிலும், ஸ்டிக்கர் வடிவிலும் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படம் இல்லாமல் செய்தும், சில பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தை பராமரிக்காததால் அலங்கோலமாகவும், மங்கலாகவும் இருப்பதும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனத்துக்கு வந்தது.

இதுகுறித்து அவர் உடனடியாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனை அழைத்து மு..ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதலமைச்சர் மு..ஸ்டாலின், ‘‘அனைத்து போக்குவரத்து கழகப் பேருந்துகளிலும் திருவள்ளுவர் படம், திருக்குறள், அந்த குறளுக்கான விளக்கவுரையும் பயணிகள் பார்வையில் எளிதில் தென்படும் வகையில் இடம்பெற வேண்டும்.

திருவள்ளுவரின் எந்த மாதிரியான புகைப்படம் வைக்க வேண்டும், எந்த குறள் இடம் பெற வேண்டும் என்பதை நான் தேர்வு செய்து தருகிறேன்'' என்று அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பேருந்துகளை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கடந்த 9.6.2021 அன்று அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படம், திருக்குறள் கடந்த ஆட்சியில் அகற்றப்பட்டது குறித்தும், மீண்டும் அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படம், திருக்குறள் இடம்பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment