பார்ப்பனியத்திற்கு எதிரான கன்னட நடிகரின் கருத்துகளுக்கு புகார்- வழக்கு- கருநாடகத்தில் அதிர்வலைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

பார்ப்பனியத்திற்கு எதிரான கன்னட நடிகரின் கருத்துகளுக்கு புகார்- வழக்கு- கருநாடகத்தில் அதிர்வலைகள்!

பெங்களூரு, ஜூன் 16 பார்ப்பனியத்திற்கு எதிரான  பெரியார், அம்பேத்கர் கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார்மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கருநாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நடவடிக்கை சமூகநீதி  உணர்வாளர்களிடையே கொந் தளிப்பை உருவாக்கி உள்ளது.

கன்னட நடிகர் சேத்தன் குமார், ரணம், அதிரதா உள்ளிட்ட பல கன்னட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். டுவிட்டரில் தொடர்ந்து சமூகப் பிரச்சி னைகள் குறித்து, முற்போக்குச் சிந்தனை யுடன் பதிவிடக் கூடியவர்.

இந் நிலையில் பார்ப்பன ஆதிக்கம் குறித்தும், வருண ஜாதிக் கொடுமைகள் குறித்தும் சேத்தன் குமார் தொடர்ந்து தெரி வித்துவரும் கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த ஜூன் ஒன்றாம் தேதியன்று அவர் வெளியிட்டுள்ள காணொலியில், 2019 செப்டம்பரில் ஷிவமோகா தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் பார்ப்பனர்களின் வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜூன் 4 அன்று, தந்தை பெரியாரின் படத்தைப் போட்டு, ''இந்திய விடுதலைக்கு முன்பு தமிழ்நாட்டில் 1938-ஆம் ஆண்டு இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கிய நாள். அரசுப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று காங்கிரஸ் அரசு வெளியிட்டஅரசாணையைநீதிக்கட்சியும், பெரியாரும் எதிர்த்தனர். திராவிட மொழி களின் விடுதலைக்காக நாம் பெரியாரின் போராட்டத்தைத் தொடரவேண்டும்என்று பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜூன் 6 அன்று, பார்ப்பனியத்திற்கு எதிரான டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்து களைப் பதிவிட்டிருந்தார். “பார்ப்பனியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் ஆகியவற்றை மறுக்கக் கூடியது. நாம் பார்ப்பனியத்தை வேரறுக்க வேண் டும்என்ற டாக்டர் அம்பேத்கரின் பொன் மொழியையும், ”மக்கள் யாவரும் ஒரே பிறப்பு. பார்ப்பான்பிராமணன்உயர்வு என்பதும், பறையன்பஞ்சமன்தாழ்வு என்பதும் மடமை - பித்தலாட்டம் - அயோக்கியத்தனம்என்னும் பெரியாரின் கருத்தையும் மேற்கோள் காட்டி சேத்தன் குமார் டுவிட் செய்து இருந்தார்.

இப்படி பெரியார், அம்பேத்கர் ஆகி யோரின் கொள்கைகளை முன்வைத்து, பார்ப்பனியத்தின் கோர முகத்தை எடுத்துக் காட்டிய இந்த டுவீட்டைத் தொடர்ந்து, அவர்மீது கருநாடக அரசின் பார்ப்பனர் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி என்பவர் பெங்களூரு காவல்துறை ஆணையரிடம், தங்கள் சமூகத்தின் நம்பிக்கைகளை சேத்தன் குமாரின் கருத்துகள் புண்படுத்துவதாகக் கூறி புகார் ஒன்றை அளித்தார்.

இது தொடர்பாக விரைவில் விசா ரிக்கப்படும் என்று சச்சிதானந்தமூர்த்தியிடம் காவல்துறையினர் உறுதி அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த சேத்தன் குமார், ''நான் சொன்ன கருத்துகள் உண்மையானவை. சமூக, பொருளாதார அல்லது பாலின ரீதியாகவும் எவ்வித அநீதி களும் சமுதாயத்தில் இருக்கக் கூடாது. சமத்துவத்திற்கு எதிரான அநீதி நீடிக்க கூடாது. கல்வி மூலம் மக்களை முன்னேற்ற வேண்டும். உலகை நல்வழிப்படுத்த வேண்டும். பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஜூன் 6 அன்று வெளியிட்டிருந்த காணொலியில், புத்தர், பசவண்ணா, அம் பேத்கர், பெரியார் சிந்தனைகளையும், கருத்துகளையும் மறைக்க பார்ப்பன சமூகம் முயல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தார். புத்தர் விஷ்ணுவின் அவதாரம் இல்லை யென்றும், அப்படி கூறப்படுவது பார்ப்பனர் களால் உருவாக்கப்பட்ட பொய் என்றும் கூறியிருந்ததோடு, பசவண்ணாவின் கொள் கைகளை, அறிவுரைகளை பார்ப்பனர்கள் திரித்தும், நீர்த்துப் போகச் செய்தும் உள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். வாக்குவங்கியை மனதில் வைத்து அம் பேத்கர் புகழை உதட்டளவில் மட்டுமே பார்ப்பன அரசியல் கட்சிகள் பேசுகின்றன என்றும் கூறியிருந்தார்.

புத்தர், பசவண்ணா, பெரியார், அம் பேத்கர் ஆகியோரை முன்வைத்து நடிகர் சேத்தன் குமார் பார்ப்பனியத்தை எதிர்த்து வருவது கன்னட பார்ப்பனர்களிடையேயும், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

''படிக்கட்டு முறையில் (graded hierarchy) பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு அமைப்பான பார்ப்ப னியம், தெற்காசியாவில் பல்வேறு சமூகங் களிடையே இன்னும் கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்தகைய கட்ட மைப்புள்ள சமத்துவமின்மைக்கு புத்தர், பசவண்ணா, பெரியார், அம்பேத்கர் மற்றும் வெகு மக்களின் தலைவர்களின் கொள் கைகளே ஒரே மருந்தாகும்'' என்று கடந்த ஜூன் 11 அன்றும் டுவிட் செய்து தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், பார்ப்பனர் வளர்ச்சி வாரியத் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி அல்சூர் கேட் காவல் நிலையத்திலும், விப்ர யுவ வேதிகே அமைப்பு பசவனகுடி காவல் நிலையத்திலும் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் நடிகர் சேத்தன் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம்  153 பி மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜூன் 13 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்திற்கும், சமத்துவச் சிந்தனை களுக்கும் எதிரானது என்று எதிர்ப்புக் கிளம் பியுள்ளது.


No comments:

Post a Comment