ஆசிரியருக்குக் கடிதம் - 'நமது குறிக்கோள் மலையளவு' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

ஆசிரியருக்குக் கடிதம் - 'நமது குறிக்கோள் மலையளவு'

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.

பேராசிரியர் வெள்ளையன் அறக்கட்டளைச் சொற் பொழிவுத் தொடரில் 3ஆவது நிகழ்வில்.ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரை சிறப்பு வாய்ந்ததாகும்.

சமகால வரலாற்றையே திரித்திடும் போக்கின் ஒரு பகுதியே தந்தை பெரியாரின் உருசியப் பயணம் குறித்த செய்தியாகும். மாற்றார் அல்லாமல் உற்றாரே அந்தச் செயலுக்குக் காரணர் என்பதே வருத்தத்துக்குரிய செய்தி !

என்றோ சிங்காரவேலர் குறித்த நூலில் தவறாக வைக்கப் பட்ட ஒரு பொறி இன்று Front Line வரைக்கும் பற்றிக் கொண்டுள்ளது. உடனுக்குடன் அந்தச் செய்திக்கு மறுப்பு எழுதிய வீ.குமரேசன் அவர்களுக்கு நன்றி. ஆசிரியரின் அருமையான விளக்கம் பலருடைய கண்களைத் திறந்திருக்கும்.

தந்தை பெரியார் ஒரு சமூக  அறிவியலாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட என்பதை ஆசிரியர் அவர்கள் விளக்கிய பாங்கு மகிழ்வை அளிப்பதாக அமைந்தது.

அய்யா உருசிய/ அய்ரோப்பிய பயணத்தின் வழி அறிந்து கொண்டு வந்ததையும், கற்றுக்கொண்டு வந்ததையும் அவருடைய வரிகளாலேயே ஆசிரியர் வாயிலாக அறிந்த போது அய்யாவின் பெருமை உணரப்பட்டது.

'மானமும் அறிவும் மனிதர்க்கழகு' என்பதை நிலைநாட்ட தந்தை பெரியார் எடுத்துக்கொண்ட அரு முயற்சிகள் நமக்கெல்லாம் மலைப்பைத் தருவன; ஆனால் அய்யா அவர்கள் "நம் குறிக்கோள் மலையளவு; அதனை அடைய நாம் எடுத்துவரும் முயற்சிகள் முடியளவு" என்று கூறியது அவருடைய பெருந்தன்மையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

"இந்தப் பேரியக்கத்திற்கு, நம் மன உறுதியும். நிர்தாட்சண் யமுமே ஆஸ்தியும் மூலப்பொருளுமாகும்"  - அய்யாவின் செயற்பாடுகளின் வேரை உணர்த்தும் செய்தியாகும்.

"நல்லன சிலவற்றை ஆக்குவதற்கு முன்னால் சில அழிவுப்பணிகள் தவிர்க்க இயலாதனவே" - அய்யாவின் நுண்ணறிவுக்குச் சான்று பகன்று நிற்கின்றது.

ஆசிரியர் அவர்களுக்கு நன்றி!

- முத்து.செல்வன்,

பெங்களூரு

No comments:

Post a Comment