பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு
நினைவு நாள் சொற்பொழிவு-3இல் தமிழர் தலைவர் விளக்கவுரை
சென்னை, ஜூன் 30 சோவியத் ரஷ்யாவிற்கு தந்தை பெரியார் அவர்கள் பாஸ்போர்ட்டுடன்தான் சென்றார்கள்; ரகசியமாக செல்லவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
பேராசிரியர் வெள்ளையன் அவர்களின்
49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-3
கடந்த 27.5.2021 மாலை 7 மணியளவில் பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் மூன்றாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.
ஆய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சோவியத் ரஷ்யாவிற்கு பாஸ்போர்ட்டுடன் தான் சென்றார்; ரகசியமாக செல்லவில்லை!
அதற்குமேலே இன்னும் சொல்லவேண்டுமானா லும், சோவியத் ரஷ்யாவிற்கு தந்தை பெரியார் அவர் கள் பாஸ்போர்ட்டுடன்தான் சென்றார்கள்; ரகசியமாக செல்லவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.
இன்னொரு செய்தியையும் உங்களுக்குச் சொல்கி றேன். தந்தை பெரியார் அவர்களே காம்ரேட் சக்லத் வாலா அவர்களின் கடிதத்தைப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். எப்படி பாஸ்போர்ட் புத்தகம் பாதுகாக்கப்பட்டு இருந்ததோ, அதுபோலவே ஒரு கடிதம்....!
இந்தியாவில் இருந்து சென்று, இங்கிலாந்து நாடாளு மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர் கம்யூனிஸ்ட்டாக இருந்தவர் சக்லத்வாலா அவர்களாவார்கள். அவர் ஒரு பார்சி இனத்தைச் சேர்ந்தவர்.
அவர் 1932 இல் லண்டனில் இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவரை ஒரு பொது மேடையில் தந்தை பெரியார் சந்திக்கிறார். அவருடன் இணைந்து தொழிலாளர்களுக்காக போராட்டம் நடத்துகிறார்.
‘‘பிரிட்டனில் இனவெறி எதிர்ப்புப்
போராட்டத்தில் பெரியார்''
அதற்கடுத்து, ‘‘பிரிட்டனில் இனவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார்'' என்ற தலைப்பில், இந்து பத்திரிகையில், பேராசிரியரும், திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளரும், சிறந்த சிந்தனையாளரும், எம்.அய்.டி.எஸ். என்ற நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளராக இருக்கக்கூடிய பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் ‘இந்து' பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையிலும், சக்லத்வாலா அவர்க ளோடு போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் கலந்துகொண்டதைப்பற்றி மிகத் தெளிவாக எழுதி யுள்ளார்.
நானே உங்களுக்கு அறிமுகக் கடிதம் கொடுக்கிறேன் என்றார் சக்லத்வாலா!
அதை நாம் ‘விடுதலை'யிலும் தெளிவாக வெளியிட்டு இருக்கிறோம்.
‘‘500
பேர் கொண்ட கூட்டத்தில், தாடியுடன் கூடிய 53 வயது இராமசாமியும், சக்லத்வாலாவும் இருந்தார்கள்." குறிப்பாக சொல்லவேண்டுமானால், அவர், நானே உங்களுக்கு அறிமுகக் கடிதம் கொடுக்கிறேன் என்று அய்யாவிடம் சொன்னார்.
அய்யா அவர்கள் அவரிடம், "நான் சோவியத் ரஷ்யா செல்கிறேன்'' என்று சொன்னதும்,
‘‘மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் அங்கே போய் எல்லா இடங்களையும் பார்க்கவேண்டும்'' என்று சக்லத்வாலா சொன்னார்.
தந்தை பெரியார்பற்றி "சக்லத்வாலா அவர்கள் எழுதிய ஓர் அறிமுகக் கடிதமும் நம்மிடம் இருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் அதனைப் பாதுகாத்து, அன்னை மணியம்மையார் அதனை பாதுகாத்து, நாங்களும் பாதுகாத்த அந்தக் கடிதத்தை பெரியார் பிறந்த நாள் மலரில்கூட வெளியிட்டு இருக்கிறோம்.
முறைப்படி சோவியத் ரஷ்யாவிற்குத் தந்தை பெரியார் அவர்கள் சென்றார்கள்; பாஸ்போர்ட்டுடன் சென்றார்கள்; சிங்காரவேலர் தனக்குப் பதிலாக பெரியாரை அனுப்பினார் என்பதற்கும் துளியளவும் ஆதாரம் இல்லை. தங்கள் சொந்த முறையில்தான் மேலைநாடுகளுக்குச் சென்றோம் என்று அய்யாவே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சக்லத்வாலாவின் கடிதம்!
சக்லத்வாலா அவர்களின் கடிதத்தை நான் இங்கே படிக்கிறேன்.
2, ST ALBANS VILLAS TIGRIGATE ROAD
LONDON, NW5
Mountview 1444
‘‘To Comrades,
The bearers of this letter Comrades Ramaswamy and Ramanathan are my Indian friends. They are out on a hasty trip to Europe where they want to learn many sociological, political and working class problems in a short time. They have been visiting several countries of Europe, they have been here in Britain also, I shall thank comrades everywhere to give them help, advice, information and guidance. Also any friendly hospitality will be appreciated as they are not rich enough to live in expensive hotels.''
Yours fraternally,
SHAPURJI SAKLATVALA
கடிதத்தின் தமிழாக்கம்
5.7.1932
தோழர்களே,
இந்தக் கடிதம் கொண்டுவரும் நம் தோழர்களான ராமசாமி மற்றும் ராமநாதன் ஆகியோர் அய்ரோப்பாவில் நிலவிடும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, அரசியல் சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ள அய்ரோப்பாவில் குறுகிய காலச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அய்ரோப் பாவில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர்கள் பிரிட்டனில் தங்கியிருக்கிறார்கள், உங்களது பகுதிக்கு வருகை தந்திடும் வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உதவி, ஆலோசனை மற்றும் தகவல் விவரங்களை அளித்து, இந்தத் தோழர்களுக்கு வழி காட்டிட எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கி றேன். செலவினை அதிகப்படுத்தும் (ஆடம்பர விடுதி யில் தங்கிட - அவர்களுக்கு பண வசதி இல்லாத நிலை யில், அவர்களுக்கு அளிக்கப்படும் தோழமை விருந் தோம்பலைப் பாராட்டி மகிழ்வேன்!
தோழமையுடன்,
ஷாபூர்னி சக்லத்வாலா
இது பெரியாருடைய எளிமைக்கு இன்னொரு ஆதாரமான விஷயமாகும்.
நாங்கள் (கி.வீரமணி) அரசாங்க விருந்தினர்களாகப் போன காலகட்டத்தில், உலக சமாதான மாநாடு முடிந்து, ஏரோ பிளேட் மூலமாக சென்ற இந்திய டெலிகேட்சில் நானும் ஒருவன். எங்களைத் தங்க வைத்த ஓட்டல் பெயர் லெனின் கிராண்ட். அரசாங்க விருந்தாளியாக நாங்கள் தங்கியிருந்தோம். பல இடங்களை அப்பொழுது நாங்கள் சுற்றிப் பார்த்தோம்.
அய்யா அதுபோன்று அல்ல. பல குடும்பங்களோடு, பல நண்பர்களோடு இணைந்து - எப்படி உறவுக் காரர்களை சந்திப்பார்களோ அதுபோல, அய்யா அவர் கள் சென்றிருக்கிறார்கள். இங்கிலாந்தில் முற்போக்காளர் களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடியுள்ளார்.
எனவே, நாம் ஒரு கருத்தை மறுத்துச் சொல்லும் பொழுது, சரியான தரவுகளை முன்வைக்கிறோம். பாஸ்போர்ட்டையே ஆதாரமாகக் காட்டுகிறோம்.
அதேபோன்று, முறையாக கப்பலில் டிக்கெட் வாங்கித்தான் சென்றார், ரகசியமாக செல்லவில்லை.
இன்னொரு செய்தி என்னவென்றால், பேராசிரியர் அரசு போன்றவர்களோ, மற்றவர்களோ ஏதோ ஒன்றி லிருந்து இத்தகவலைப் பெற்றிருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில், பல புத்தகங்களைப் படிப்பார்; அல்லது செவி வழிச் செய்திகளை கேட்டிருப்பார்கள். இன்றைக்குத் மயிலாடுதுறையில் இருக்கக்கூடிய கழக மாவட்டச் செயலாளர் தளபதிராஜ் அவர்கள், ஒரு செய்தியை இன்றைக்குப் பயன்படும் என்பதற்காக எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதிலே ஒரு மிக முக்கியமான தகவல் - எப்படி இது கிளம்பியிருக்க முடியும்? பொய்யான ஒரு கருத்து - பொய்யுரையை யார் பரப்பியிருக்கக் கூடும்?
முத்துகுணசேகரன் எழுதிய சிங்காரவேலர் பற்றிய புத்தகத்தில் இருக்கக்கூடிய ஒரு செய்தி!
ரகசியமாகப் போனார் என்பதற்கு எதிலோ ஒரு மூலாதாரம் இருக்கிறது; ஏதோ பிரிண்ட்டில் இருந்தால் அது உண்மையாக இருக்கும் என்று கருதக்கூடிய அளவிற்கு வரும்பொழுது, தோழர் முத்துகுணசேகரன் எழுதிய, சிங்காரவேலர் பற்றிய புத்தகத்தில் இருக்கக் கூடிய ஒரு செய்தியை விளக்கிச் சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் தவறான தகவலாகும்.
பெரியார் புதுவையில் இருந்து ரகசியமாகக் கிளம் பினார் என்கிற தவறான தகவல் அந்நூலில் இடம்பெற்றி ருக்கிறது.
ஒருவேளை தோழர் வீ.அரசு போன்ற முக்கிய பேராசிரியப் பெருமக்கள், இதுபோன்ற ஒரு செய்தி நூல்களே இருக்கின்றன - ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என்று கருதியிருக்கலாம். நாம் யாரையும் குற்றம் சொல்லவில்லை. அந்தத் தவறான தகவல்களை மறுத்திருக்கின்றோம் என்பதுதான் மிக முக்கியமானது.
மயிலாடுதுறை கழக மாவட்டச் செயலாளர் தளபதிராஜ் அனுப்பிய கடிதம்!
அந்த அடிப்படையில், தளபதிராஜ் கடிதத்தை இப்பொழுது பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் படிப்பார்.
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
கடந்த 25.5.2021 அன்று மாலை ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்‘’
எனும் தலைப்பில்
தாங்கள் ஆற்றிய பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுச் சொற்பொழிவினைக் கேட்டேன். தோழர் ஆனைமுத்து அவர்களின் மறைவையொட்டி பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ‘ஃப்ரண்ட்லைன்’ பத்திரிகையில் 24.5.2021 அன்று எழுதிய கட்டுரையில், ‘சோவியத் யூனியன் தனக்கு விடுத்த அழைப்பை, தான் செல்ல இயலாத சூழலில் சிங்காரவேலர், சிபாரிசு கடிதம் கொடுத்து பெரியாரை அனுப்பியதாக‘ எழுதியதைச் சுட்டிக்காட்டி அக் கருத்தை மறுத்திருந்தீர்கள்.
‘‘விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’’ புத்தகத்தைத் தயார் செய்துகொண்டிருந்தபோது அதில் ‘பொதுவுடைமைக் கொள்கையை கைவிட் டாரா பெரியார்?' எனும் கட்டுரைக்காக சில புத்தகங் களைப் படித்தபோது இதே செய்தியைக் கண்டேன்.
சிங்காரவேலுவைப்பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற முத்து.குணசேகரன் ‘‘சிங்காரவேலர் வாழ்வும் பணிவும்‘’, சிங்காரவேலரும் பெரியாரும்‘‘, ‘‘சிங்காரவேலர் சிந்தனைக்களஞ்சியம்‘’ போன்ற நூல்களை எழுதியவர்.
அந்த வரிசையில் 2010 இல் வெளிவந்த ‘‘செஞ்சூரியன் - சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்’’ என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரைக்கு ‘‘பெரியார் நின்ற இடம் சிங்காரவேலர் வென்ற இடம்‘’ என தலைப்பிட்டு இச்செய்தியை புனைந்திருக்கிறார்.
‘‘பெரியாரை முழுமையான கம்யூனிஸ்டாக ஆக்க வேண்டுமெனக் கருதிய சிங்காரவேலர் இரகசியமாகப் புதுவையின் வழியாகப் பெரியாரை பரிந்துரைக் கடிதத்துடன் இரஷ்யாவிற்கு அனுப்பி வைத்தார்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ‘ரகசியம்‘ என்பது ஆனைமுத்து அவர் களால் முன்மொழியப்பட்டது. அதற்கு கண், காது, மூக்கு வைத்து இவர் ஒரு புதுத் திரைக்கதையை எழுதியிருக்கிறார். பெரியார் ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் ‘குடிஅரசு’ பத்திரிக்கையை கவனித்து வந்த சாமி.சிதம்பரனார் அவர்களால் எழுதப்பட்டு 1939 இல் வெளிவந்த தமிழர் தலைவர் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாற்று நூலில் கூட
‘‘மேல்நாடுகளில் அரசியல் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? சமுதாய இயக்கங்கள் எவ்வாறு இயங்குகின்றன? அவர்களின் பழக்க வழக்கங்கள் யாவை? அவர்கள் அரசியல், பொருளாதாரம், சமு தாயம் முதலியவற்றில் எவ்வாறு முன்னேற்றமடைந் தனர்? என்பனவற்றை நேரில் கண்டறிய வேண்டி பெரியார் மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் புறப்பட விரும்பினார்’’ என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
பெரியாரின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சுய மரியாதைச் சங்க நிர்வாகக் கமிட்டியார், சுயமரியாதைச் சங்கத் தலைவர் மற்றும் காரியதரிசி ஆகியவர்கள் ஒரு தடவையாவது இங்கிலாந்து, ரஷ்யா முதலிய மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் செய்துவர வேண்டும் என்று 1931 பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில், ஈரோட்டில் நடைபெற்ற நிர்வாகக் கமிட்டியில் பேசிய செய்தி ‘நாடார்குல மித்திரன்’, ‘குடிஅரசு’ ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
உண்மைச்செய்திகள் இப்படியிருக்க, தனது கதைக்கு அவர் ஆதாரமாக காட்டியிருக்கும் செய்திதான் அதைவிட வேடிக்கையானது.
1930 களில் பிரிட்டீஷ் ரகசியக் காவலர்கள், ‘‘சிங்கார வேலுச்செட்டி கெடுத்துவிட்டான். ஈ.வெ.ராமசாமி நாயக்கன் கெட்டுவிட்டான். சிங்காரவேலர் யோசனைப்படி லெனின் தலை மையில் அமைந் துள்ள புரட்சி அரசைப்போல் ஒன்றைத் தமிழகத்தில் உருவாக்க இராமசாமி நாயக்கன் இரஷியா சென்றுள்ளான்!’’ எனக் குறிப்புகள் காணப்படுவதாக கதைத்திருக்கிறார்.
இரகசியப் பயணம் என்பதே தவறு என அதற்கான ஆதாரங்களுடன் தாங்கள் எடுத்துரைத்த பின்னால், அதற்குமேல் எழுப்பப்படும் பிம்பங்கள் எப்படி நிலைக்க முடியும்?
சென்னையில் பெரியார் கப்பல் ஏறினார் என்ற செய்தி ஆதாரங்களுடன் கிடைக்கையில், ரகசியமா கப் பாண்டிச்சேரியில் வழியனுப்பியதாகச் சொல்கிறார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல்!
- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை
மிகவும் நன்றி, தளபதிராஜ் அவர்களுக்கு.
ஏனென்றால் நான் சொல்லியதுபோன்று, பெரியாரைப் பற்றி தவறான தகவல்கள் இனிமேல் ஏராளமாக வரும். புத்தருக்கு ஜாதகக் கதைகள் வந்ததுபோன்று அய்யா விற்கு அப்படி வரக்கூடாது.
(தொடரும்)
No comments:
Post a Comment