3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு

சென்னை, ஜூன் 18 தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் தி.மு.. மனு அளித்துள்ளது.

டில்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா மற்றும் ஆணையர்கள் ராஜிவ்குமார், அனுப் சந்திரா  ஆகியோரை தி.மு.. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, பி.வில்சன் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த மார்ச் 23ஆம் தேதியன்று மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இறந்த காரணத்தினாலும், கடந்த மே 10ஆம்  தேதியன்று வைத்தியலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி விலகல் செய்த நிலையிலும் 3 பேரின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது.

அவர்கள் 3 பேரின் பதவி காலம் முறையே 24-7-2025, 29-6-2022 மற்றும் 2-4-2026 ஆகிய தேதிகளில் முடிவடைய வேண்டும்.

ஆனால் தற்போது முன்னரே அவை காலியாகிவிட்டதால், அந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி உடனடியாக நடத்த வேண்டும். மாநிலங்களவைக்கான தற்காலிக காலியிடங்கள் தனித்தனியான தேர்தல்கள் மூலம் நிரப்பட வேண்டும் என்றும், அந்த பதவியை துறந்ததால் ஏற்படும் காலியிடங்களை தற்காலிக காலியிடங்கள் என்றும் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது.

முகமது ஜானின் உறுப்பினர் பதவி கடந்த மார்ச் 24ஆம்  தேதியில் இருந்தே காலியாக உள்ளது. வைத்தியலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோரின் பதவியிடம் கடந்த மே 12ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்த தற்காலிக காலியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்காலிக காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் உடனடியாக நடத்தாமல் காலதாமதம் செய்வது, தமிழக மக்களின் உரிமைகளை தேர்தல் ஆணையம் புறக்கணிப்பதாக அமைந்துவிடும்.

கடந்த 2019ஆம் ஆண்டில் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதன் விளைவாக மாநிலங்களவையில் ஏற்பட்ட தற்காலிக காலியிடங்களுக்கு தனித்தனியான இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் அகமது பட்டேலின் மறைவால் ஏற்பட்ட தற்காலிக காலியிடத்திற்கும், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அபய் பரத்வாஜ் மறைவால் ஏற்பட்ட தற்காலிக காலியிடத்திற்கும் கடந்த மார்ச் மாதம் தனித்தனியான இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி யுள்ளது. இதே நிலையை உச்சநீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே மாநிலங்களவையில் ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான 3 தற்காலிக காலியிடங்களை உடனடியாக தனித்தனி இடைத்தேர்தல் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment