கரோனா 2ஆவது அலையில் தினசரி மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

கரோனா 2ஆவது அலையில் தினசரி மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு

 சென்னை, ஜூன் 19  கரோனா பரவலின் 2ஆவது அலையை கட்டுப்படுத்த, அரசு சார்பில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான மருத்துவக் கழிவுகளையும் 48 மணி நேரத்திற்குள் பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அளிக்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த மே 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 20.5 டன் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அந்த அளவு 36.5 டன்னாக அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது. தமிழகத்தில் தற்போது இயக்கத்தில் உள்ள 11 பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் நாளொன்றுக்கு 43 டன் மருத்துவக் கழிவுகள் கையாளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதைய சூழலில் சுத்திகரிப்பு நிலையங்களில் நாளொன்றுக்கு 50 டன் மருத்துவக் கழிவுகளை மட்டுமே கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

எனவே மருத்துவக் கழிவுகளின் அளவு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு மருத்துவமனைகளும், பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜிப்மரில் ஜூலை 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி, ஜூன் 19 புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மய்யங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

‘’புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மய்யங்களில் பயிலும் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள், பிஎஸ்சி நர்சிங் (முதல், இரண்டாம், மூன்றாமாண்டு) மாணவர்கள், பிஎஸ்சி துணை மருத்துவப் படிப்புகள் (முதல், இரண்டாமாண்டு) பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

மாணவர்கள் கரோனா தடுப்பூசியைக் கண்டிப்பாகச் செலுத்திக்கொள்ள வேண்டும். ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம். கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கரோனா பரிசோதனைக்குப் பிறகே ஜிப்மர் மய்யங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம். வகுப்புகளில் மாணவர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வகுப்புகளிலிருந்து இடைநீக்கமும் செய்யப்படுவர்’’.

இவ்வாறு ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                    

விளைநிலங்களுக்கே செல்லும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள்

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 சென்னை, ஜூன் 19  விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணானதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, மழையால் நெல் வீணாகாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் அறிக்கை ஒன்றை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தாக்கல் செய்தார்.

அதில், நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லைப் பாதுக்காக்க முடியும் எனவும், அவை படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அறிக்கையைப் பதிவு செய்த நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களிலிருந்து தூரத்தில் உள்ள

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் போக்குவரத்துச் செலவு, அலைச்சல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தினர்.

அதற்கு தமிழக அரசுத் தரப்பில், இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து வெகுதூரங்களில் உள்ள குறிப்பாக சிறிய விவசாயிகளின் விளைபொருட்களைக் கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment