ஒரே மாதத்தில் 10 மடங்கு சரிந்தது
சென்னை, ஜூன் 19 சென்னையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலை பரவலின்போது, தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது.
அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 2ஆவது அலை பரவலில், மிக குறுகிய காலத்தில் தொற்று படுவேகமாக பரவியது. கடந்த மே 12ஆம் தேதி ஒரே நாளில் 7 ஆயிரத்து 564 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 277 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 24.41 சதவீதம் (7,564) பேருக்கு தொற்று உறுதியானது.
மாநகராட்சி மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஒரே மாதத்தில் தொற்று பரவல் 10 மடங்கு குறைந்துள்ளது. 16ஆம் தேதி 28 ஆயிரத்து 506 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 689 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாளில் செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கையில், தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 2.41 சதவீதமாக உள்ளது.
சென்னையில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து 27 ஆயிரத்து 283 பேரில் இதுவரை 5 லட்சத்து 12 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 531 ஆக குறைந்துவிட்டது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி நடவடிக்கையால் சென்னையில் தொற்று பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தடுப்பூசி போடுவதிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 22 லட்சத்து 52 ஆயிரத்து 361 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
வீடு வீடாக கரோனா அறிகுறி உள்ளதா என செய்யப்படும் ஆய்வும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரிசோதனை முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகவே சென்னையில் ஒரே மாதத்தில் 10 மடங்கு தொற்று குறைந்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment