திராவிடர் கழக இளைஞரணியின் 26 ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவு: தன்னை முன்னிலைப்படுத்தாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இனி அரசியலில் வெற்றிடமில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

திராவிடர் கழக இளைஞரணியின் 26 ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவு: தன்னை முன்னிலைப்படுத்தாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இனி அரசியலில் வெற்றிடமில்லை!

கவிஞர் நந்தலாலா

திருவாரூர், ஜூன்16- திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 'ஸ்டாலின் தான் வாராரு' எனும் தலைப்பில் 26 ஆவது இணையவழி தொடர் சொற்பொழிவு கூட்டம்  மே 30 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ. பிளாட்டோ வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி தலைமையேற்று உரை யாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் இணைப்புரை வழங்கினார்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு காமராஜ், பொழிசை கண்ணன், ஆத்தூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார்.

கவிஞர் நந்தலாலா உரை

தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சாரத்தில் முன்வைத்த முக்கியமான 'ஸ்டாலின்தான் வராரு' என்கிற தலைப்பைக் கொண்டு பேசுவோம் என்று நினைத்தேன். அதற்குக் காரணம் மக்களுக்கு எது பிடிக் குமோ அதை பேசுவது தான் சரி அந்த வகையில் தற்போது மக்களுக்கு பிடித்திருப்பது 'ஸ்டாலின்தான் வராரு.'

தந்தை பெரியார் இந்த மண்ணில் ஒரு கூட்டு மனசாட் சியை உருவாக்கினார். அப்படி அவர் உருவாக்கியதன் விளைவு தான் பலர் இங்கே வேல் தூக்கினாலும், அண்ணாமலைக்கு அரோகரா என்றாலும் அத்தனை பேருக்கும் பாமர மக்களாகிய சமூகத்தின் எளிய மக்கள் பதில் சொன்னார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிடித்தது 'ஸ்டாலின்தான் வராரு.' இதற்குப் பொருள் என்னவென்றால் இதுதான் மக்கள் மனங்களில் தேங்கியிருந்த எண்ணங்களின் வெளிப்பாடு. ஒரு ஆட்சியை கணக்கிடுவதற்கு நாட்கள் தேவையில்லை, அடிப்படையில் குறைந்தது ஆறு மாதம் ஆட்சி அமைய வேண்டும் என்று சொல்லுவார்கள். பெருந் தலைவர் காமராஜர் தோற்றபிறகு திமுகவை விமர்சிப்பதற்கு ஆறு மாத காலம் தரவேண்டும் என்று சொன்னதாக வரலாறு, அப்படி ஆறு மாதங்கள் ஆவதற்கு முன்னாலே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை, அது ஏற்படுத்தப்போகும் நன்மைகளைப்பற்றி எல்லாம் நான் பேச வேண்டி இருக்கிறது.

மோடியும் அமித்ஷாவும் ஒரு புல்டோசர் போன்று நீதிமன்றம், ரிசர்வ் பேங்க், தேர்தல் ஆணையம் என அனைத்தையும் துவம்சம் செய்யும் வேலையில் மூன்று மாநில தேர்தல் வந்தது. ஒன்று கேரளம் இன்னொன்று மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு இந்த தேர்தல் என்னவாக போகிறது என உலகமே உற்று நோக்கிய போது யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவின் தெற்கே இரண்டு மாநிலங்களிலும் கிழக்கே ஒரு மாநிலத்திலும் நாங்கள் இந்தியர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாக இருக்கிறோம் என்று பதில் சொன்னது, பிஜேபிக்கு ஏற்பட்ட இந்த தோல் விக்கு காரணம் அந்த கட்சிக்கு ஒரு வேகத்தடையை உரு வாக்கியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது தமிழ்நாடு மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வெற்றி.

இனி அரசியலில் வெற்றிடமில்லை

தான் பதவியேற்றபோது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறிவிட்டு அவர் நிமிர்ந்து பார்த்த பார்வை யின் அர்த்தம் தமிழ்நாட்டில் இனி அரசியல் வெற்றிடம் இல்லை என்பதை சொன்ன சொல் அது. தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் வந்துவிட்டது,.தமிழ்நாட்டு அரசிய லில் தலைமைக்கு பஞ்சம் வந்துவிட்டது என்று நேற்று முளைத்தவர்கள் வரை கூறிக்கொண்டு இருந்தவர்களின் மத்தியில் அந்தத் தலைமையை நிரப்புவதற்கு 'ஸ்டாலின் தான் வராரு' என்று சொல்லி பிரச்சாரம் செய்து முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லிவிட்டு அவர் நிமிர்ந்து பார்த்த அந்த ஒரு பார்வை, சங்கிகள் உட்பட அனைவருக்கும் தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது. அந்தப் பார்வை என்பது அரிமாப் பார்வை, கம்பீரப் பார்வை என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்த அந்தப் பார்வை திட்டமிட்டு செய்தது அல்ல, தன்னுடைய அத்தனை குமுறல்களையும் அந்த ஒரு பார்வையில் காட்டினார்.

பதவியேற்கும் முன்பே பணிகளை மேற்கொண்டவர்

முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி பதவியேற்கும் முன்பே அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அப்போது ஒரு அரசாணை வெளிவருகிறது அது முன் களப்பணியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட செவிலியர் களை நிரந்தரப் பணியில் அமர்த்தும் அரசாணை! அதை தான் செய்தேன் நாங்கள்தான் செய்தோம் என்று எங்கேயும் கூறவில்லை. இப்படி பதவியேற்கும் முன்பே தன்னுடைய பணிகளை தொடங்கினார்.

தன்னை முன்னிறுத்தாத தலைவர்

சட்டமன்றத்தில் பேசும்பொழுது, 'நான் செய்தேன்', 'நான் செய்தேன்' என் அரசு செய்தது என்று எல்லாவற்றையும் தன் மீது ஏற்றிக்கொண்டு முதல்வர்களை இந்த தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஆனால் ஒரு முதல்வர் பொறுப்பேற்ற புதிய நிலையில் கூட தன் சக அமைச்சர்களை அழைத்து இந்த குறிப்பிட்ட விஷயம் நான் நேரடியாக பங்கேற் காது நீங்கள் பங்கேற்று உள்ளீர்கள் அதனால் நீங்களே பதில் கூறுங்கள் என்று சொன்னதன் மூலம் ஒரு அமைச் சரவையின் கூட்டுப் பொறுப்பை நிறுவுகிறார், இன்னொரு வகையில் தன் சக அமைச்சர்களை நான் வேறு அல்ல - நீங்கள் வேறு அல்ல என்று சொல்லுகிறார் இந்தப் பண்பாடு தமிழ்நாட்டிற்கு புதிது. இப்படி யாரும் செய்யாத ஒரு வழிமுறையை 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று கொண்டாடுகிற இந்த நாட்டில் 'இந்தப் புகழ் உனக்குரியது' என்று சொல்லும் பெருந்தன்மையும், அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பே தனி மனிதனின் சிகரம் அல்ல என்று புரிய வைப்பதற்கும், சிறப்பாக செயல்பட்டால் அங்கீகரிருப்பேன் என்று மக்களுக்கு தெரிவிப்பதற்கும், ஆற்றல் படைத்திருக்கும் ஆளுமைத் திறன் கொண்டவர் தான் ஸ்டாலின்.

நேர்மையை முன்னிறுத்தி நடக்கும் ஆட்சி

கடந்த ஆட்சியில் மருத்துவர்களின் இடமாறுதல் தொடர்பாக பல்வேறு செயல்பாடுகள் நடந்தபோதும் தற்போது மிகவும் அமைதியாக எளிமையாக இணையம் வழியில் இடமாறுதல் ஆணையை வழங்கி இருக்கிறார். எதிர் அணியினரால் 'ஸ்டாலின் இந்து விரோதி!', அவர் குடும்பமே இந்து விரோத குடும்பம்!' என்று தொடர்ந்து எதிர் அணியினர் பாமர மக்களிடையே சொல்லிக் கொண்டே இருந்தவர்கள்.  ஆனால் அந்தப் பாமர மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் - ஏனென்றால், 'இந்து', 'இந்து', 'இந்து' என்று சொன்னவர்களை புறந்தள்ளிய போற்றத் தகுந்தவர்கள்.

முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் முன் நிறுத்திய முதல் விஷயம் போஸ்டர் இல்லாமல் அறிக்கை இல்லாமல் நடந்த அரசு தலைமை பொறுப்பில் வகிக்கக்கூடிய நியமனங்கள் மூலம் தனது ஆட்சி நேர்மையை முன்னிறுத்தி நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதுதான் ஸ்டாலின்தான் வராரு என்பதற்கு பொருள்.

செயல்பாடுகள்மூலம் தன்னை நிரூபிக்கும் முதல்வர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பிற்கு 5 லட்சம் ரூபாய் அரசு வழங்கும் என அறிவித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவருக்கு தனது அருகில் இடம் தந்து அமரவைத்து பெருமைப்படுத்திய பாங்கு, 'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குரலுக்கு உரை எழுதி ஓவியம் வரைந்தார் கலைஞர். அவர் மகன் ஸ்டாலின் தனது செயலால் உரை எழுதுகிறார். இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் தனது செயல்களின் மூலம் தன்னை நிரூபிக்க விரும்புகிறார். இவ்வாறு பல்வேறு தரவுகளை எடுத்துக்கூறி ஸ்டாலின்தான் வராரு என்ற சொற்றொடருக்கு பொருள் கூறி சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் விழுப்புரம் மண்டல இளைஞரணி செய லாளர் தா. இளம்பரிதி, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நூலகர் வே.இராஜவேல்,புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா, கோவை மண்டல இளைஞரணி செய லாளர் .பிரபாகரன், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் .சிவகுமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த்குமார், ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்  வேல்முருகன், கோவை வெற்றிச்செல்வன், விருத்தாசலம் பாலச்சந்தர்,   தஞ்சை மாநகர இளைஞரணித் தலைவர் பெரியார் செல்வம்.

வேலூர் மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் பட்டா பிராமன்,  மாநில . துணைத் தலைவர் அண்ணா சரவணன், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன்,செயலாளர் சண்முகம், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன்,  திருச்சி மாவட்டத் ஆரோக்கியராஜ், விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் .வெற்றிச்செல்வன், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேரா. பூ.சி.இளங்கோவன், பொதுக்குழு உறுப் பினர் நீலகண்டன், . முருகேசன், கோவை இராஜா, கோவை இரமேசு உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இணைய வழியாக ஒருங்கிணைப்பு செய்து உதவினார்.

கூட்டத்தின் நிறைவில் தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment