சென்னை, ஜூன் 1 முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் குறித்து, நிதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று (31.5.2021) ஆலோசனை நடைபெற்றது.
தமிழக அரசின் 2021-2022ஆம் ஆண்டுக் கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி, அப்போதைய நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.இதையடுத்து தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். வழக்கமாக, புதிய ஆட்சி அமைந்ததும் அந்த ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை உடனடியாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
ஆனால் தற்போது, கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதன்படி தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் மத்தியில், தமிழகத்தின் 2021-2022ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார். இதையடுத்து, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதைத்தொடர்ந்து, துறை வாரியான மானிய கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கு முன்னேற்பாடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போதைய நிதிநிலை குறித்தும், 2021-2022ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் 2021-2022ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment