வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1ஆம் தேதி வரை கால நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

 புதுடில்லி, ஜூன் 17 வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய் பரவல் காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது வருங்கால வைப்புநிதி (பி.எப்.) கணக்கில் இருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பி.எப். கணக்கில் இருக்கும் தொகையின் ஒரு பகுதியை ஊழியர்கள் திரும்ப பெறலாம்.

இந்த நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142ஆவது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை இந்த மாதம் (ஜூன்) முதல் பி.எப். கணக்கில் வந்து சேராது. ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில் அவர்களது பங்கை, பி.எப். கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும். மேலும் பி.எப். கணக்கில் இருந்து கரோனா முன் தொகையையும் எடுக்க இயலாது.

எனவே இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக  இணையதளத்துக்கு சென்று உங்கள் யூசர்நேம், பாஸ்வோர்டு உள்ளீடு செய்து, பி.எப். கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம். பி.எப். கணக்கில் ஆதார் இணைக்கப்பட்ட பின்னர் கடந்த கால நிலுவைத்தொகையினை உங்களின் கணக்கில் நிறுவனம் சேர்த்துவிடும்.

இந்தநிலையில்,  வருங்கால வைப்பு நிதி (.பி.எப்.) கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் ஆதாரை ஜூன் 1ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பலர் ஆதாரை இணைத்து வருகிறார்கள். கரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் விரைவில் பேருந்து போக்குவரத்து..!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, ஜூன் 17 தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசியப் பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேபோல், பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, தமிழக அரசு அறிவித்தவுடன், கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம். தமிழக அரசு அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இருப்பினும், வரும் 21ஆம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சர் மு. ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்

கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துப்போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா குறைந்து வரும் நிலையில் பேருந்து  சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

 

No comments:

Post a Comment