சிந்தனையாளர்களை படைப்பாளர்களை உருவாக்கும் பாசறைகளே படிப்பகங்கள்: கோவி.லெனின் உரை
தஞ்சை, ஜூன் 19 தஞ்சை ந. பூபதி நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றின் 14-ஆம் ஆண்டு விழா 13.06.2021 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாநில இளைஞரணி துணை செயலாளர், படிப்பக செயலாளர் இரா.வெற்றிக்குமார் வரவேற்று உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மண்டல இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன், படிப்பக இயக்குநர், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மண்டல செயலாளர் க. குருசாமி, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.
பெரியாரியல் பயிற்றுனர் பேராசிரியர் வடுவூர் நா.எழிலரசன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
டாக்டர் அஞ்சுகம் பூபதி தொடக்கவுரை
மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி அவர்கள் இந்நிகழ்விற்கு தொடக்க உரையாற்றினார்.
தோழர் திருச்சி வி.சி.வில்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர் நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் அவர்கள் பற்றிய அறிமுக உரையை வழங்கினார்.
சென்னையிலிருந்து நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் மானமிகு எழுத்தாளர் கோவி லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பின்வருமாறு சிறப்புரையாற்றினார்.
இன்றைய நேரத்திலே படிப்பகம் அல்லது நூலகம் என்று சொல்லப்படுவது வெறும் புத்தகங்கள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறைகள் மட்டுமல்ல அவை சிந்தனையாளர்களை படைப்பாளர்களை உருவாக்கும் பாசறைகள். ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய பணி என்னவென்றால் நூலகங்களை வளர்த்து அறிவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்வது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கும் வாய்ப்பு வசதியற்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிவை மேம்படுத்தும் இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும். இதனை தொடர்ச்சியாக அரசாங்கம் அமைவதற்கு முன்பே செய்த இயக்கம்தான் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதை கூட புறக்கணித்துவிட்டு சமூக சீர்திருத்த இயக்கமாக, பகுத்தறிவை பரப்புரை செய்கின்றன இயக்கமாக, மூடநம்பிக்கையை எதிர்க்கின்ற இயக்கமாக, சாதிக் கொடுமைகளுக்கு எதிராக நின்று அதனை வீழ்த்தகூடிய இயக்கமாக, மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் நடைபெறக்கூடிய மோசடிகளை தோலுரித்துக் காட்டுகின்ற இயக்கமாக தந்தை பெரியார் அவர்கள் திராவிட இயக்கத்தை உருவாக்கினார்.
மக்களை ஜனநாயக நெறிப்படுத்திய இயக்கம்தான் திராவிடர் இயக்கம்
அப்படிப்பட்ட அந்த இயக்கத்தின் ஓர் இலக்காக ஒரு செயல்பாடாக ஒரு கொள்கையாக கூட அது இருக்கலாம், ஆனால் அந்த இலக்கை அடையும் போது அதனால் பயன்படக்கூடிய அவர்கள் யார் என்பதை பார்த்தால் கருப்புச் சட்டைக்காரர்கள் உருவாக்கிய படிப்பகம் வெறும் கருப்புச் சட்டைக்காரர்களை மட்டும் படிப்பவர்களாக, அறிவாளிகளாக, அறிவுத்தேடல் கொண்டவர்களாக, சிந்தனையாளர்களாக மாற்றவில்லை. சட்டையே போட முடியாமல் இருந்தவர்கள், தோளிலே துண்டு போடக்கூடாது என்று தடுக்கப் பட்டவர்கள், வேட்டி கட்ட கூட வழியில்லாமல் அதற்கான வசதி வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள், இவர்களையெல்லாம் அந்தப் படிப்புக்கு வரச்செய்து, அவர்களை படிக்க வைத்து, அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்தி, சமூக புரிதலை உணர்த்தி, அவர்களின் சிந்தனையை மேம்படுத்தி, அவர்களை அரசியல் மையப்படுத்திய, ஜனநாயக நெறிப்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். ஒரு படிப்பகம் என்பது பத்திரிகைகள் இருக்கிறது புத்தகங்கள் இருக்கிறது என்கிற வகையில் அமையப் பெறுவதில்லை, அது ஒரு தலைமுறையையே புரட்டிப்போட்டு சிந்தனையை மேம்படுத்தி அந்த சிந்தனையின் காரணமாக தங்களுடைய பயணம் எது, தங்களுடைய வரலாறு எப்படி இருக்கிறது காலம் காலமாக நாம் என்ன நிலையில் இருந்தோம், இனி நாம் எந்த நிலைக்கு மாற வேண்டும் என்கின்ற அந்த உணர்வை ஊட்டியது படிப்பகம் என்ற பாசறை தான்.
பொதுநலத் தொண்டில் மிக முக்கியமானது கல்வியை வழங்குவது
படிப்பகம் என்று சொல்லும் பொழுது பாரதிதாசன் மிக அழகாக சொல்லுகிறார்
காலையில் படி, கடும்பகல் படி, மாலை இரவு பொருள்படும்படி, நூலைப் படி சங்கத்தமிழ் நூலைப்படி என்கின்ற அந்தப் பாடலிலே படி படி படி என்று தொடர்ச்சியாக சொல்லுகிறார். படி என்கிற வார்த்தையை எடுத்தோமானால் படி படி படி என்றால் நாம் படிபடியாக மேலே போய்க்கொண்டிருக்கிறோம் என்பது பொருள். இந்தப் பணியை மிகவும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிற அதுவும் பொதுநலத் தொண்டர் பூபதி அவர்களின் பெயரால் நடைபெறுகிற இந்த படிப்பகம் சிறப்பு வாய்ந்ததாகத் தெரிகிறது. பொதுநலத் தொண்டர் என்கிற அந்த வார்த்தையை பார்க்கும்பொழுது பூபதி அய்யா அவர்கள் இந்த மக்களுக்கு செய்த பொது தொண்டினை மேற்கொண்டு அந்தப் பெயரை அவருக்கு சூட்டியிருக்கிறார்கள் அந்த வகையில் பொதுநலத் தொண்டில் மிக முக்கியமானது கல்வியை வழங்குவது, இந்தப் படிப்பகம் அறிவுத் தேடலுக்கான ஒரு களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஒரு குடும்பம் பொதுநலத் தொண்டில் தொடர்ச்சியாக செயல்படுகிறது என்பதை இந்த பதிப்பகத்தை நிர்வாகிக்க கூடிய பூபதி அவர்களின் துணைவியார், மகள் ஆகியோரின் பணியினை பார்க்கும்பொழுது மிகவும் சிறப்புக்குரியதாக அமைந்திருக்கிறது.
தனக்கான சிகிச்சையை ஒதுக்கி மக்களுக்கான சிகிச்சையை வழங்கிவரும் முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்து விட்டது இந்த ஒரு மாதத்தில் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எத்தனை மணி நேரம் உறங்கியிருப்பார் என எண்ணிப்பார்க்கிறேன். ஒரு மனிதன் இயல்பாகவே அவனுக்கு உடல்ரீதியாக ஒரு பிரச்சினை என்றால் நன்றாக உறங்குகிறீர்களா என்றுதான் மருத்துவர்கள் கேட்பார்கள், மருத்துவர்களின் முதல் அறிவுரையே நன்றாக உறங்குங்கள் என்பதாகத்தான் இருக்கும். அந்த அடிப்படை சிகிச்சையை கூட எடுத்துக் கொள்ளாமல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்குமான சிகிச்சையை வழங்கி கொண்டிருப்பவர் தான் நம்முடைய முதல்வர் என்கின்ற பொழுது இப்படியான பொதுநலத் தொண்டு எப்படி வந்தது என்றால் தொண்டு செய்து பழுத்த பழம் ஆகிய பெரியாரின் வழி வந்தவர்கள் நாம், அவருடைய தம்பிகளாக அவருடைய பிள்ளைகளாக அவருடைய பேரன் பேத்திகளாக இருக்கக்கூடியவர்கள் அதனால் தான் இந்த தொண்டுள்ளம் நமக்கு ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் பரப்புரை செய்கின்ற இயக்கம் மக்களிடத்தில் அறிவார்ந்த கருத்துக்களை விதைக்கின்ற இயக்கம். இவ்வாறாக நூறு ஆண்டுகளாக திராவிட இயக்கம் அறிவார்ந்த கருத்துக்களை விதைத்து அதற்கான களங்களை அமைத்து மக்களிடத்திலே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியின் மீது ஆதிக்கம் நடத்து, அந்த மொழியை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய கலைச்செல்வங்கள் மீது அதனுடைய இலக்கியங்கள் மீது, அதனுடைய வரலாறு மீது ஆதிக்கம் நடத்து என்று சொல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் நிலவியது என்ன? வரலாற்றில் சரஸ்வதிபூஜை என்கிற பெயரில் என்ன நடத்தப்பட்டது? நம்முடைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்த பொழுது அவை ஆற்றிலே வீசப்பட்டன. அதில் நம்முடைய பல அறிவுச் செல்வங்கள் அழிந்து போயின. இப்படி நூலோர் நடத்துகிற பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கோட்டூர்புரத்தில் உலகத்தரம் வாய்ந்த அறிஞர் அண்ணாவின் பெயரில் அமைந்த கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட அந்த நூலகம், குழந்தைகள் கூட விரும்பக்கூடிய வகையில் மிகச்சிறந்த கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட அந்த நூலகத்தைஅதிமுகவின் ஆட்சி காலத்தில் திருமண வரவேற்புநிகழ்ச்சிக்கு வாடகைக்குக் கொடுத்து எச்சில் இலைகள் போடும் குப்பைத் தொட்டிகளாக மாற்றப்பட்டிருந்தது. இப்படி கடந்த 10 ஆண்டுகளாக பார்த்தீர்களென்றால் மக்களுக்கான அறிவுச் செல்வங்கள் சிதைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இல்லாமல் இந்த படிப்பகம் மிகச்சிறந்த வகையிலே சிறப்பாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.
இறுதியாக பெரியார் படிப்பகத்தின் தலைவர், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப்பட்டு அ.ராமலிங்கம் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் காணொலி வாயிலாக திராவிட இயக்கத் தோழர்கள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் படிப்பகத்தை நாள்தோறும் பயன்படுத்துகிற பயனாளர்கள் மாணவர்கள் இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்ட நேரலையில் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
தொகுப்பு:நெல்லுப்பட்டு நூலகர் வே.இராஜவேல்
No comments:
Post a Comment