‘‘உறவுக்குக் கை கொடுப்போம் - உரிமைக்குக் குரல் கொடுப்போம்!'' என்ற கொள்கைக்குச் செயல் வடிவம் - விளைவுகள் விளைச்சல்களாக மாறுவது நல்லது!
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர் களின் பிரதமர் சந்திப்புக் குறித்தும், தமிழ்நாடு நலன் சார்ந்த 120 பக்க அறிக்கைபற்றியும் - மாநில - ஒன்றிய அரசுகளின் உறவுகள் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று 40 நாள்கள் ஆகின்றன.
கரோனா கொடுந்தொற்றின் கொடு மையைக் குறைத்து மக்களின் உயிர் காக்கும் அதிவேக முன் உரிமைப் பணியில் அவரும், அவரது அமைச்சர்களும், அவ ரால் முடுக்கிவிடப்பட்ட அரசு அதிகார இயந்திரமும் தீவிரமாக ‘குடி செய் வார்க்கில்லை பருவம்' என்பதற்கொப்ப ஓய்வறியாப் பணியாக அமைத்துக் கொண் டதால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் போதாமை, மருத்துவ நுட்பங்கள் முதலியன கிட்டாமை, ஊர்கள்தோறும் ஏழை எளியவர்களுக்கு அரசின் உதவிகள் எட்டாமை - என்பதெல்லாம் பஞ்சாய்ப் பறந்தோடிவிட்டன.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் காலி படுக்கைகள் எவ்வளவு என்பன உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவிப்பு கள் - தமிழ்நாடு திமுக அரசின் சாதனைகள் என்ற சரித்திரத்தின் தொகுப்பாகி, தமக்கான நம்பிக்கையைப் பெற்று, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்!
மளமளவென மக்கள் நலப் பணிகள் - உதவிகள்!
காலநேரம், உயிர் - பாராது உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், நலத்துறைக் களப்பணியாளர்கள், துப்புரவுத் தோழர்கள், காவல்துறை கடமை வீரர்கள்; இப்படி பலருக்கும் ஊக்கத் தொகை தந்து, அவர் களின் உழைப்பின் சிறப்பைப் பாராட்டு வதும், ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களான குடும்பத்த வர்க்கு இரண்டாம் தடவையாக 2000 ரூபாய் (ஏற்கெனவே தந்த 2000 ரூபாய்க்கு மேலும்) குடும்ப சமையலுக்கான பல வகை இலவச ரேஷன் பொருள்கள் என்று பால் வார்த்த தாய்மை போன்ற தகைமை - இவை நாளும் ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதியாக தி.மு.க. ஆட்சி திக்கெட்டும் புகழ் பரப்பும் ஆட்சியாகவே உள்ளது. அது முன்பு நாம் சொன்னது போன்று “வெறும் காட்சி அல்ல; எம் இனத்தின் மீட்சி" என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
பிரதமரிடம் 120 பக்க அறிக்கை
இந்நிலையில், இந்திய ஒன்றிய அரசின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாட்டு மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைநகர் டில்லி சென்று சந்தித்தார் (17.6.2021). அதன்மூலம் உறவுக்குக் கை கொடுத்துள்ளார்.
அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து உள்பட பல கோரிக்கைகள் அடங்கிய 120 பக்க கோரிக்கைக் கோப்பு ஒன்றை - 25 தமிழ்நாட்டின் தேவைகளைப் பட்டியலிட்ட கோரிக்கைப் பட்டியலை அவரிடம் நேரில் அளித்து சுமார் 25 மணித்துளிகள் அந்தப் பேட்டியில் செலவழித்துத் திரும்பியுள்ளார்! உரிமைக்குக் குரல் கொடுத்தார் என்பதன் அடையாளமே அது!!
தமிழ்நாட்டுப் பிரச்சினைகளையும் கடந்து வேளாண் சட்டங்கள், குடியுரிமைப் பறிப்பு, ‘நீட்' உள்ளிட்ட தேசிய பிரச்சினை களிலும் முதலமைச்சர் கவனம் செலுத்தி யிருப்பது அவரின் ஆளுமையை மேலே உயர்த்தக் கூடியதாகும்.
இது அரசியல் நனிநாகரிகம் மட்டுமல்ல; புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல மைச்சர் ஒருவர், கூட்டாட்சியாக உள்ள ஒன்றிய அரசின் தலைமை அமைச்சரைச் சந்தித்து தமது மாநிலத்தின் உரிமைகளைச் சுட்டிக் காட்டி, தேவைகளை நிறைவுச் செய்ய வேண்டுகோள் விடுப்பது தான் ஜனநாயகக் கடமையாகும்!
இந்திய ஒன்றிய பிரதமர் எந்தக் கட்சியைச் சேந்தவர்; தமிழ்நாடு முதல மைச்சர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்; அவர்கள் இருவருக்கும் உள்ள கொள்கை வேறுபாடுகள் எப்படிப்பட்டவை என்பதை ஆராய்வதற்கல்ல இச்சந்திப்பும், கனிந்த இரு தரப்பு சுமூக உரையாடலும்!
முதலமைச்சர்தம் முதிர்ச்சியின் முத்திரை
எந்தக் கட்சியைச் சார்ந்தவராயாயினும் அவர் பிரதமர்; அதுபோல் எதிர்க்கட்சியி னராயினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். இது தான் அரசமைப்புச் சட்டப்படி உள்ள உறவு ஆளுமைகளால் சுமுகத்துடன் காணப்பட வேண்டிய தீர்வுக்கான அடிப்படை.யாகும்.
அதனைக் காலந்தாழ்த்தாமல், தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் கடமை உணர்வுடன், கண்ணியம் பொங்க, கட்டுப்பாட்டை ஒளி வீசச் செய்து, துவக்கத்திலேயே தனது முதிர்ந்த அரசியல் முத்திரையைப் பதித்துள்ளார்!
அதன்பிறகு டில்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் பேட்டியின்போது, "பிரத மருடன் ஆன 25 நிமிட சந்திப்பு மன நிறைவாக - மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எந்த நேரத்திலும் தன்னிடம் தொடர்பு கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்!
உறவுக்குக் கை - உரிமைக்குக் குரல்!
இந்த அரசியல் பண்பாடு வளர்ந் தோங்குவதன் மூலம் தான் கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி (cooperative federalism) என்பது முகிழ்த்துக் காட்சி யளிக்கும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.
"உறவுக்குக் கைகொடுக்கத் தவறாத நாங்கள் உரிமைக்கு எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்'' என்ப தையும் தெளிவுபடுத்திவிட்டார் நம் முதலமைச்சர்.
எனவேதான் இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் முழுப் பொருள் செயல் வடிவம் பெற இரு தரப்பு ஒத்துழைப்பு - முக்கியமாகும்!
மாநில உரிமைகள் ஏதோ சலுகைகள் அல்ல; அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள். கடமையைச் சிறப்பாகச் செய்த நமது முதல்வருக்கு நம் பாராட்டுகள்!
சென்றார் - சிறப்பாக முடித்தார் முதலமைச்சர்
நல்ல துவக்கம். நமது முதலமைச்சர் தலைநகர் டில்லி சென்றார். தலையாய கொள்கைகளை, கோரிக்கைகளை வலி யுறுத்திடும் முதல் கட்டத்தை சிறப்பாக முடித்தார். விளைவுகள் விளைச்சல்களாக மாறினால் நல்லது - எல்லாத் தரப்புக்குமே!
தலைவர்,
சென்னை
19.6.2021
No comments:
Post a Comment