அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம் பெற்ற சோசலிசம் காணாமல் போய் விட்டது.
கடந்த 7 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. இப்போது மீதமிருக்கும் துணைப்பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனைக்கு பன்னாட்டு அளவில் டெண்டர் கோரி வருகின்றனர்
இயற்கைப் பேரிடர்களின் போதும் கூட மோடி அரசு உரிய விதத்தில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை. கிராமப்புற ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் “மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி” திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும்கூட மோடி அரசு குறைத்துவிட்டது.
இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டில் கைவைத்து அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மண் அள்ளிப்போட்டு உயர்ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இரண்டே நாளில் கொண்டுவந்து அதை பல மாநிலங்களில் அமல்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பும் அதிக எண்ணிக்கையில் பெற்றுவிட்டனர்.
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் இட ஒதுக்கீட்டுக்குப் பல்வேறு தடைகளை அரசாங்கத்தின் மூலமாகவும், நீதிமன்றங்களின் மூலமாகவும் மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. அது கொண்டுவந்த 102ஆவது சட்டத் திருத்தத்தின் காரணமாக மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதும், இட ஒதுக்கீடு அளிப்பதும் இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து எல்லாவற்றையும் தன் கையில் குவித்துக் கொண்டு மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற யூனியன் பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு எவ்விதமான உருப்படியான திட்டங்களையும் வகுக்காமல் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க மோடி அரசு காரணமாகியுள்ளது. தடுப்பூசிகளை வழங்குவதிலும், ஆக்சிஜன் என்னும் உயிர்வளி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டியதால் உச்சநீதிமன்றமே தலையிடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை உலக அளவிலான ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்திவரும் மோடி அரசு, நாடாளுமன்றத்தையும் மதிப்பதில்லை. 70க்கும் மேற்பட்ட அவசர சட்டங்கள் மோடி அரசால் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கும் , சிறார்களுக்கும் எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
சிறுபான்மையினரை எதிரிகளாக சித்திரித்து ஹிந்துக்களிடம் மதவெறியூட்டி அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த மோடி யின் ஆட்சியில் ஹிந்துக்கள்தான் அதிகமாகக் கரோனாவால் உயிரிழக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப் படுகிறவர்களிலும், மோடி அரசின் கொள்கைகளால் வேலை இழந்தவர்களிலும், ஜிஎஸ்டி முதலான வரிவிதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களிலும் ஹிந்துக்கள் தான் அதிகம். எனவே, மோடியின் ஏழாண்டுகால ஆட்சி அவர்கள் கூறும் ‘ஹிந்துக்களுக்கு விரோதமான ஆட்சி’ என்பதே உண்மை.
இந்த 7 ஆண்டுகால ஆட்சியில் மோடியால் அறிமுகப் படுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தோல்வியில் முடிந்தன. ஆகையால் தான் அவரால் எந்த ஒரு மாநிலத் தேர்தலிலும் தனது கடந்த ஆட்சிகால திட்டம் குறித்துப் பேசமுடியவில்லை. தமிழகம் வந்த போது “வெற்றி வேல் வீரவேல்” என்றார். கேரளா சென்ற போது “சுவாமியே சரணம் அய்யப்பா” என்றார். மேற்குவங்கத்தில் பெண் தெய்வ வழிபாடு என்பதால் “ஜெய் துர்க்கா மா” என்றார். அதாவது இவரால் எந்த ஒரு மாநிலத்திலும் தனது திட்டத்தால் மக்கள் பெற்ற பலன் குறித்துப் பேச முடியவில்லை ஆகையால் இவர் மதவெறியூட்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரம் பெறலாம் என்று நினைக்கிறார்,
தமிழக தேர்தல் பரப்புரையில் மதுரையில் பேசும் போதும்
‘எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த மதுரை வீரன் படம் பார்த்தேன்’ என்று கூறுகிறார். இதுதான் அவரது 7 ஆண்டுகால ஆட்சியின் பெருமை ஆகும்.
மதுரை வீரன் படம் வந்த போது மோடியின் வயது என்ன என்று கேட்டு விட வேண்டாம்!
அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட்ஸ் டிராக்கர் என்ற டேட்டா இன்டெலிஜென்ஸ் கம்பெனி ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் நரேந்திர மோடியின் செல்வாக்கு தொடர்பாக தொடர்ந்து கணித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவாக, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் நரேந்திர மோடியின் செல்வாக்கு 63 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. 22 புள்ளிகள் சரிவடைந்து முதல்முறையாக இந்த அளவுக்கு அவர் ரேட்டிங் சரிந்துள்ளது. நாட்டு மக்களுக்கு மோடி மீதான நம்பிக்கையின்மையைக் காட்டியுள்ளது இந்தப் புள்ளிவிவரம்.
இந்தியாவின் தலைநகர் டில்லி, வர்த்தக தலைநகர் மும்பை, தகவல் தொழில்நுட்பத் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போனதும், ஆக்சிஜன் விநியோகம் செய்ய முடியாமல் திணறியதும், நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமை மீது மக்களுக்கு சந்தேகங்களை எழுப்பி உள்ளதால், இந்த அளவுக்கு அவரது செல்வாக்கு சரிவடைந்து உள்ளது என்கிறது இந்தப் புள்ளிவிவர அறிக்கை.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் மத்திய அரசின் செயல்பாடு பற்றிக் கூறுகையில், “நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்களை தாங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். தங்கள் குடும்பத்தையும், தங்கள் நண்பர்களையும், தங்கள் உயிரையும் தாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, அரசை நம்பிப் பயன் இல்லை என்ற முடிவில் அவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். தற்போதைய அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும் போது மக்கள் அந்த மனநிலையில் இருப்பதைத்தான் அது பிரதிபலித்துள்ளது.
No comments:
Post a Comment