கட்டண வசூலை நன்கொடையாகக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஈஷா ஃபவுண்டேஷன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

கட்டண வசூலை நன்கொடையாகக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஈஷா ஃபவுண்டேஷன்!

கோவையில் இயங்கிவரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மய்யத்தின்மீது, மலைப்பகுதிகளைச் சட்டத்துக்குப் புறம்பாக வளைத்துக் கட்டடங்களைக் கட்டியது. யானையின் வழித்தடங்களை மறித்து, கட்டடங்களையும், சுற்றுச்சுவர்களையும் கட்டியது உள்பட பல்வேறு வழக்குகள், விவகாரங்கள் இருக் கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, இந்த ஈஷா நிறுவனம் குவிக்கும் கோடிக்கணக்கான வருமானத் தில் நடத்திவரும் வரி ஏய்ப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிறுவனத்தின் வரி ஏய்ப்பின் அடிப்படை சூத்திரம், வணிகரீதியாகப் பெறப்படும் தொகையை, நன்கொடை ரசீதாகக் கணக்கில் காட்டி வரிச்சலுகை பெறுவதாகும். கடந்த 2018ஆம் ஆண்டில் 56.43 கோடி ரூபாயை வருமானமாகக் காட்டியுள்ள ஈஷா ஃபவுண்டேஷன், தனது வருமானத்தில் 35.81 கோடி ரூபாயை அன்பளிப்பு என்ற வகையில் கணக்கில் காட்டியுள்ளது. இப்படி நன்கொடையாகக் காட்டப் பட்டுள்ள தொகைக்கு இந்திய வருமான வரிச்சட்டம் 80G  பிரிவின்படி வரிவிலக்கு பெற்றுள்ளது.

ஈஷா யோகா நிறுவனத்தின் சார்பாக யோகா, மாதாந்திர, வருடாந்திர, சிறப்பு நிகழ்ச்சிகள், ஆன்மிகப் பயணம், மரக்கன்று நடும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு கட்டண முறைகள் இருக்கின்றன. ஜக்கி வாசுதேவின் விளம்பரங்கள், பாப்புலாரிட்டிக்கு மயங்கி, உள்நாடு, வெளிநாடு என உலகம் முழுவதுமிருந்தும் பலரும் ஆன்மிக நம்பிக்கையோடு இந்நிறுவனத்துடன் இணைந்து பணத்தை ஆயிரங்களில், லட்சங்களில், கோடிகளில் கொட்டுகிறார்கள். ஆனால் இவற்றுக் கெல்லாம் முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. சிலவற்றுக்கு இவர்களாகவே ஒரு தொகையை எழுதி, நன்கொடையாகக் கணக்கில் காட்டுகிறார்கள். ஜக்கியின் பக்தர்களாக இருப்பவர்களுக்கு இதெல் லாம் ஒரு விஷயமாகத் தோன்றுவதில்லை. பாதிக்கப் பட்டவர்களில் சிலர் மட்டும் இதில் நடக்கும் மோசடி களைப் புரிந்துகொண்டு கேள்வியெழுப்புவது, வழக்கு தொடுப்பதென, இங்கே நடைபெறும் மோசடி களை வெளியுலகுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

காவேரி கூக்குரல்என்ற பெயரில் காவிரி ஆற்றுப்படுகையில் 242 கோடி மரங்களை நடப் போவதாக ஒரு பிரச்சாரத்தை ஜக்கி வாசுதேவ் முன் னெடுத்தது நினைவிருக்கிறதா? உண்மையிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரக்கன்று நடுபவர்கள், சத்தமில்லாமல் அந்த சேவையைச் செய்து வருகி றார்கள். ஆனால் இந்த ஜக்கி போன்ற கார்ப்பரேட்டுகள் இதை மிகப்பெரிய பிசினசாகப் பார்க்கிறார்கள். "கருநாடகாவிலுள்ள தலைக்காவேரியிலிருந்து தமிழ்நாட்டின் திருவாரூர் வரை  மொத்தம் 639 கிமீ தூரத்துக்கு, காவிரி நதிப்படுகையில் 242 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால், 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். இத்திட்டத்தை விவசாயிகளே பங்கெடுத்து செயல்படுத்த வேண்டும். அதற்கான மரக்கன்றுகளை ஈஷா ஃபவுண்டேஷனில் கன்று ஒன்றுக்கு 42 ரூபாய் விலைக்கு வாங்கலாம்" என்று ஒரு திட்டத்தைப் பிரபலங்களின் துணையோடு விளம்பரப்படுத்தினார். இதில் நடப்படும் மரங்களின் விளைச்சலிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் இணைத்து வியாபாரம் செய்யும் உத்தியையும் குறிப்பிட்டார். அதன்படி இது, மறைமுகமாக கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான வணிக முயற்சியென்பதை விவரமான வர்கள் மட்டும் புரிந்துகொள்ள, மற்றவர்கள் பசுமைப் புரட்சியாக நம்பி, மரக்கன்றுகளை ஈஷா ஃபவுண் டேஷன் மூலம் வாங்குவதற்குப் பணம் செலுத் தினார்கள்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை விவசாயியான நாகப்பன் கவுதம் என்பவர், "மதுரையிலுள்ள ஈஷா மய்யத்திலிருந்து 8,000 ரூபாய்க்கு ஒரு முறையும், தலா 3,000 ரூபாய்க்கு இருமுறையும் மரக்கன்றுகளை வாங்கியிருக்கிறார். ஆனால் அதற்கு ஈஷா மய்யத்திலிருந்து எவ்வித ரசீதும் தரப்படவில்லை. அவரும் கேட்கவில்லை. அடுத்த 4 மாதங்கழித்து, ஈஷா மய்யத்திற்கு நாகப்பன் 1,242 ரூபாய் நன்கொடை அளித்ததாக ஒரு ரசீதை ஈஷா மய்யம் அனுப்பி யிருக்கிறது. முழுக்க முழுக்க வணிகமாகச் செலுத்திய தொகையில் சிறு பகுதியை மட்டும் நன்கொடையாகக் காட்டி, வரிச்சலுகைக்கு முயன்றிருப்பது மிகப்பெரிய மோசடியாகும். ஒருபக்கம் வரிச்சலுகைக்கு சிறு தொகையைக் காட்டுவதோடு, பெரும்தொகையைக் கணக்கிலேயே காட்டாமல் மறைக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார். இந்த 'காவேரி கூக்குரல்' திட்டத் தின்மூலம் காவிரிப் படுகையில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று பெங்களூருவைச் சேர்ந்த வழக்குரைஞர் அமர்நாத் என்பவர், கருநாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2014ஆம் ஆண்டில், யோகா வகுப்பில் சேர்வதற்கான மோசடியால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப்பெண் ஜெயா பாலு ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர், கோவையிலுள்ள ஈஷாவில் 'யந்திரா' நிகழ்ச்சியில் யோகா வகுப்பில் கலந்துகொள்வதற்காக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருக்கிறார். அந்தக் கட்டணத்துக்கு ரசீது தராமல், நன்கொடையாகக் கணக்கில் காட்டி ரசீது அனுப்பியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், யோகா வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும், அப்போது தரப்படும் ஒரு மந்திரித்த கல்லுக்கும் சேர்த்துதான் 4.5 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அந்தக் கல்லுக்கு மட்டுமே தனியாக 1.5 லட்சம் ரூபாய் கட்டினால்தான் கொரியரில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

கட்டணம் என வசூலித்துவிட்டு, அதனை நன்கொடை என்று கணக்கில் காட்டுவது, கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் கேட்பது என ஈஷா மய்யத்தின் மோசடிகளால் மனம் வெதும்பி, தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஆனால் ஈஷா தரப்பில் அதற்கு மறுத்திருக்கிறார்கள். அதன்பின்னர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அப்பணத்தை மீட்டிருக்கிறார் ஜெயா பாலு.

இந்த ஈஷா ஃபவுண்டேஷன், 'ஆன்மிகச் சுற்றுலா என்ற பெயரில் கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு 2,75,000 ரூபாயி லிருந்து, 50 லட்சம் ரூபாய்வரை பேக்கேஜிங் கட் டணம் வசூலிக்கப்படுகிறது. 50 லட்ச ரூபாய் கட்ட ணத்தில் சுற்றுலா செல்பவர்கள், ஜக்கி வாசுதேவுடன் இணைந்தே பயணமாகலாம். இப்படியான பயணத் திட்டங்களின் மூலமாகவே ஆண்டுக்கு சுமார் 60 கோடிவரை இந்த ஃபவுண்டேஷனுக்கு வருமானம் வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஆச்சிமுத்து சங்கர், இஷா ஃபவுண்டேஷனின் வரி ஏய்ப்பு மோசடி குறித்து 2018ஆம் ஆண்டில் மாநில வருமான வரித்துறை ஆணையரிடம் புகாரளித்திருக் கிறார். பல்வேறு ஆன்மிக வியாபாரக் கட்டணங் களையும் நன்கொடை கணக்கில் காட்டுவதைப் புகாரில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரே நேரடி யாகவும் அந்த ஃபவுண்டேஷனில் அனுபவப்பட்டி ருக்கிறார். இவர் சேர்ந்த ஒரு வார யோகா வகுப்புக்கான கட்டணத்தையும் நன்கொடையாகவே ரசீது கொடுத்திருக்கிறார்கள். ஒருவார வகுப்பின் இறுதி நாளில், பல்வேறு பொருள்களை வியாபாரம் செய்வதற்காகக் கடை விரித்திருக்கிறார்கள். இப்படி ஈஷா ஃபவுண்டேஷன், ஆன்மிகத்துடன், வணிக நோக்கையும் சேர்த்தே செயல்படுகிறது. அந்த மய்யத்தின் சார்பில் நடத்தப்படும் நவராத்திரி நிகழ்ச்சியே இதற்கு சாட்சி என்கிறார் இவர்.

இப்படி தொடர்ச்சியாக வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஜக்கி வாசுதேவ், தனது அரசியல் செல்வாக்கைக் காட்டித்தான் அனைத்தையும் சரிக்கட்டிவருகிறார். அவ்வப்போது, ‘காவேரி கூக்குரல்’, ‘நதிகளை மீட்போம்’, ‘கோவில் அடிமை நிறுத்துஎன்று பல்வேறு விளம்பர ப்ராஜெக்ட்களையும் கோஷங் களையும் எழுப்புவதன்மூலம், சமூக சேவகராகவும், தேச பக்தராகவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார். ஈஷா ஃபவுண்டேஷனின் வரி ஏய்ப்பு மோசடி, அனைவருக்கும் தெரியவரும்போதுதான் அந்நிறுவ னத்தின் செயல்பாடுகள் மீதான போலி பிம்பங்கள் உடையும்.

- கவுதமன் (நக்கீரன் இணையம், 25.5.2021)

 

No comments:

Post a Comment