திருச்செங்கோட்டில் காங் கிரஸ் பேரியக்கத்தின் பிரபல தியாகியும் தலைசிறந்த பண்பாளருமான உயர் திரு டி.எம்.காளியண்ணன் அவர்கள் 101 வயது நிறைவாழ்வும் வாழ்ந்த பெருமகனார்.
அக்கால அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் ஒருவராக அவர் நம்மிடையே வாழ்ந்து வந்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினர், ஜில்லா போர்டு தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். எவரிடத்திலும் அன்போடும் பண்போடும் உரையாடும் பான்மையர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, திருச்செங்கோட்டிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் சண்முகம் (வயது 99) அவர்களுடன் சென்று நேரில் நலம் விசாரித்த போது நல்ல நினைவுடன் நம்மிடம் உரை யாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல; தமிழ் நாட்டு பொது வாழ்விற்கே பெரும் இழப்பு ஆகும். அவரது குடும்பத்தினர்க்கு நமது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்!
அரசியல் நேர்மையும் நாணயமும் மிகுந்த அந்த பெருமகனாருக்கு நமது வீரவணக்கம்.
28.5.2021 (கி.வீரமணி)
சென்னை தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment