திராவிடர் கழக இளைஞரணி - தஞ்சை ந.பூபதி பெரியார் படிப்பகம் இணைந்து இணைய வழியாக நடத்திய பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாணவர்கள்கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 31, 2021

திராவிடர் கழக இளைஞரணி - தஞ்சை ந.பூபதி பெரியார் படிப்பகம் இணைந்து இணைய வழியாக நடத்திய பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாணவர்கள்கருத்து


தஞ்சை, மே 31 திராவிடர் கழக இளைஞரணி மற்றும் தஞ்சை .பூபதி பெரியார் படிப்பகம் இணைந்து 25 நாள் 25 மாணவர்கள் இணைய வழி பெரியாரியல் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நேற்று மே 30 ஆம் தேதி ஞாயிறு காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நூலகர் வே.ராஜவேல் வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன் தலைமை உரையாற்றி னார்.

  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்,  மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,  தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் .அருணகிரி, பேராசிரியர் சு.ராஜேந்திரன், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரெ.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

  பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் இணைப்புரை வழங்கினார்.

 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பேசும்போது : திராவிடர் கழக இளைஞரணி தஞ்சை  .பூபதி நினைவு பெரியார் படிப்பகம் இணைந்து 25 நாள் 25 மாணவர்களுக்கு இணைய வழியாக பெரியாரியல் பயிற்சி வகுப்பை நடத்தி இருக்கிறார்கள்.  3 ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புக்கு தனி சிறப்பு உண்டு.  இணைய வழியாக நடைபெற்ற காரணத்தினால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேராசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார்கள்.  இந்த பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள் என பேசினார்.

 பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் களில் ஒருவரான பேராசிரியர் ராஜேந்திரன் பேசும்போது :  எல்லாத் தளங்களிலும் நாம் பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்.  கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியாரியலை பரப்பக் கூடியவர்களாக திராவிடர் கழகத்தில் பணி செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என கூறினார்.

பெரியாரியல் பயிற்சி வகுப்புக்கு மாணவர்களை ஏற்பாடு செய்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முனைவர் .எழிலரசன் பேசும்போது :  மூன்று ஆண்டுகளாக நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் புதிய புதிய மாணவர்களை பங்கேற்க செய்கிறோம்.  காணொலி வாயிலாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட 40 பேரை தெரிவு செய்வதாக முடிவெடுத்தோம்.  13 வயது முதல் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்றனர். வழக்கமான கூட்டங்கள் போல் அல்லாமல்,  வரவேற்புரை, நன்றியுரை, முன்னிலை என்று இல்லாமல் நேரடியாக வகுப்புகளை நடத்துவது என முடிவு செய்தோம். ஆனால் மாணவர்கள் தாங்களாகவே, பெரியார் பொன்மொழிகளை கூறியும் வரவேற்புரைக்கு ஒருவர், நன்றியுரை ஒருவர் என பிரித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் கூறினர் என்றார்.

 பாதுகாப்பான ஆன்லைன் வகுப்பு :

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் பேசும்போது : 25 நாள் 25 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் 17 கல்லூரிகளைச் சேர்ந்த 38 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இன்றைக்கு ஆன்லைன் வகுப்புகள் ஏகப்பட்ட சிக்கல் நடந்து கொண்டிருக்கின்ற போது, நம்முடைய இளைஞரணி சார்பில் மிகுந்த பாதுகாப்போடு இந்த ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது.

  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தோடு இணைந்து இந்த பயிற்சி வகுப்பை நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பரிசு வழங்கி உரையாற்றியபோது தஞ்சை மாடல் என்று கூறினேன்.

இதனை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்ப்போம்.  கரோனா காலத்தில் இவர்களின் முக்கிய முயற்சியாகும். இந்த வெற்றிக்கு காரணம் குழு பணிதான். நிகழ்ச்சியை தொடர்ந்து நான் கண்காணித்து வந்தேன். இதில் மாணவர்களின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது எனப் பேசினார்.

பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பேசும்போது : 

புதியவர்களுக்கு புத்தொளி வீசக் கூடிய வகையில் இந்த பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம்.  மாணவர்களின் கருத்துக்கள் கனலாக ஒளி வீசுகின்றன. பார்ப்பனியத்தின் கொடுமையை நாடு முழுவதும் பேசுகிறார்கள். இதற்கு காரணம் பெரியாரின் கருத்துகளை கொண்டு சேர்த்த நம்முடைய வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையே சேரும் என பேசினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது:  காணொலி பயிற்சி வகுப்பானது  சிறப்பான முயற்சி ஆகும். இது முன்மாதிரியான பணியும் கூட. இக்கட்டான இந்த காலகட்டத்தில் அதனையும் சாதகமாக ஆக்கிக் கொண்டு நமது கொள்கையைப் பரப்பி வருகின்றோம்.

  பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி பெற்றதோடு நிறுத்திக்கொள்ளாமல் இயக்கத்திற்கும் பயன்படவேண்டும். இதனை அந்தந்த பகுதி இயக்கத் தோழர்கள் அவர்களை தொடர்பு கொண்டு இயக்க நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். காணொலியில் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக நடத்திய தோழர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என பேசினார்.

 மாணவர்களின் கருத்து:

 இளங்கலை இலக்கிய மாணவி ஜனனி : சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம் என்று பெரியார் சொன்னார். இந்த சொல் எங்களை உயிர்ப்போடு இருக்க வைத்திருக்கிறது. பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பெற்ற பகுத்தறிவு பாடம் எங்களுக்கு வாழ்க்கை பாடமாக அமைந்து இருக்கிறது என பேசினார்.

 வடுவூர் தென்பாதி நிவேதா :  ஆணுக்குப் பெண் அடிமை என்றும் ஆண் எஜமானன் பெண் அடிமை என்று இருந்ததை மாற்றி, அனைத்து மனிதரையும் சகமனிதராக பார்க்கும் எண்ணத்தை இந்த பயிற்சி வகுப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மனுதர்மம் பார்ப்பனியமும் நம்மை அடிமைப்படுத்தி இருந்தது. பெரியாரியம் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. வரலாற்றை படிக்கவும் - படைக்கவுமான எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது என பேசினார்.

 இறையியல் மாணவர் ஜான் மார்ஷல் : இந்த பயிற்சி என் வாழ்வை திசைதிருப்பும் என நம்புகிறேன். இதன்மூலம் கொள்கையைப் பின்பற்றி உறுதியோடு நிற்பேன்.

ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும் பார்ப்பனிய பொருளியல் கோட்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும்.  பெரியார் மீதான விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியை இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொண்டேன்.  ஆதிக்கத்தை ஒழிக்க முடியுமா என்பது தெரியவில்லை.ஆனால் அதற்கு எதிராக சண்டையிடும் போர்க்குணத்தை நான் இதன் மூலம் பெறுகிறேன் என பேசினார்.

 8 ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா:  பெண் ஆணுக்கு அடிமை அல்ல அனைவரும் சமம்   என்று இந்த பயிற்சி வகுப்பு உணர்த்தியது. பெரியாரியல் வகுப்பு மூலம் நான் அறிந்து கொண்டது அடங்க மறு, திருப்பி அடி , திமிரி எழு என்பதாகும்.

 போமிதா:  பெரியார் குறித்த அறிமுகத்தை எனக்கு வழங்கியவர்கள் பேராசிரியர் ராஜேந்திரன் முனைவர் எழிலரசன் ஆகியோராவர்.  பிரபலங்களின் படங்களை என்னுடைய வால் பேப்பரில் வைத்து இருப்பேன். ஆனால், இப்போது தந்தை பெரியாரின் படத்தை பொன்மொழியை வைத்திருக்கிறேன். மீம்ஸ்களில் பெண்கள் குறித்தான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தால் முன்பெல்லாம் எளிமையாக கடந்து செல்வேன். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பிறகு அவற்றையெல்லாம் எதிர்த்துப் பேச வேண்டும். அதற்கு எதிராக பதிவிட வேண்டும் என தோன்றுகிறது. என் மூலம் பெரியார் பாதைக்கு பலரையும் அழைத்து வருவேன் என்றார்.

 பவித்ரன் :  ஆடு மாடு மேய்க்க வந்த நாடோடிக் கூட்டம் வேதம், மதம், ஜாதி ஆகியவற்றால் நம் மக்களை கூறு போட்டது. கல்வி வேலைவாய்ப்புகளில் நம்மை அடிமைப் படுத்தியது. பெண்களை அடிமையாகவும் விளை நிலமாகவும் மாற்றியது. இது போன்ற முரண்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவர் பெரியார் என்பதை தெரிந்து கொண்டேன் எனக் கூறினார்.

மாணவர்கள் தங்கள் பயிற்சி அனுபவங்களை கூறிய பின், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரையாற்றி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பதிகளைச் சேர்ந்த இளைஞரணித் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் உள்பட 200-க்கும் மேல்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment