பத்திரிகையாளர் இரா.ஜவகர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

பத்திரிகையாளர் இரா.ஜவகர்

இரண்டு நாள்களுக்குமுன் காலமான பத்திரிகையாளர் தோழர் இரா.ஜவகர் அவர்களால் எழுதப்பட்ட ஓர் அரிய நூல் ''கம்யூனிசம் நேற்று - இன்று -நாளை'' என்பதாகும் (முதல் பதிப்பு 2003).

பொறியியல் படித்தவராக இருந்தாலும், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் தங்கள் வேதாந்த- சனாதனப் பொடி வைத்து எழுதத் தவறுவதில்லை.

தோழர் இரா.ஜவகர் அவர்கள் அந்த சன்னமான மூக்கு நுழைவைத் தன் எழுதுகோல் எனும் பேனா கத்தியால் நறுக்கென்று வெட்டித் தள்ளுவது தனித்தன்மையானது.

''அணுக்களின் உள்ளே துகள்கள் உள்ளன. இந்தத் துகள்களை நாம் எந்த விதத்தில் பார்க்கிறோமோ அதற்கேற்ப இவற்றின் இயற்கை வேறுபடும். சில சமயம் துகள்கள், சில சமயம் அவை ஒரே பொருள், ஒரே எதிர் எதிர் நிலைகளாக, இந்த எதிர்மறைத் தத்துவம் நவீன பவுதிகத்தின் கண்டுபிடிப்பு.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் பக்திப் பாடல் திரட்டில் சொல்லப்படும் கடவுள் தத்துவம் நவீன பவுதிகத்துடன் ஒத்துப் போகும் ஆச்சரியம்பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

''நிழல் வெயில், சிறுமை பெருமை, குறுமை நெடுமையுமாய் கழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லலுறுமாய் திருவிண்ணகர் மன்னுபிரான் - இப்படிக் கடவுளை எதிர்மறைத் தொடர்களாகவே வர்ணிக்கிறார் நம்மாழ்வார்'' என்று க்வாண்டம் தத்துவம் கண்டுபிடித்து இருப்பதாக சுஜாதா கூறுவது தவறு.

''பார்ப்பதால்'' அவை மாறுவதில்லை. எந்த விதத்தில் சோதனை செய்கிறோமோ, அதற்கேற்ப அவற்றின் தன்மை வேறுபடும் என்றுதான் க்வாண்டம் தத்துவம் கண்டுபிடித்துள்ளது. அப்புறம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்  கடவுளைப்பற்றி எதிர்மறையாக வர்ணித்து இருப்பதும், இயற்கையின் துகள்கள் எதிர்மறைகளாக இயங்குவதைக் கண்டுபிடித்த க்வாண்டம் தத்துவமும் ஒத்துப் போகின்றன என்று ஆச்சரியப்படுகிறார் சுஜாதா.

யானை கருப்பு, காக்கையும் கருப்பு. எனவே, இரண்டும் ஒன்றேதான் என்று யாராவது சொன்னால், 'ஆகா, அற்புதம்' என்று ஆச்சரியப்பட முடியுமா என்ன?'' என்று கலாய்க்கிறார் தோழர் ஜவகர்.

கடைசியாக தந்தை பெரியாரைக் கொண்டு 'சாத்துப்படி' செய்கிறார்.

''பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது.

பகுத்தறிவுக்குக் கடவுளும், கருமமும் நேர் விரோதிகளாகும். பகுத்தறிவு என்பதும் மாறி மாறி வருவதாகும்.''

இதுதான் பெரியார் கூறும் பகுத்தறிவு என்று முத்திரை பதிக்கிறார் தோழர் ஜவகர்.

 - மயிலாடன்

No comments:

Post a Comment