எல்லாம் வல்ல விடுதலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

எல்லாம் வல்ல விடுதலை!

- பெரு.இளங்கோ

அடுபகையாம் ஆரியத்தை வெல்ல வல்ல

                ஆயுதமாம்விடுதலைக்கு எண்பத் தேழு!

கொடுந்தளையாம் ஜாதியத்தைக் களைய வல்ல

                கோடரியாம்விடுதலைக்கு எண்பத் தேழு!

கடும்புரையாம் வேதியத்தைக் கரைக்க வல்ல

                கந்தகாமிலவிடுதலைக்கு எண்பத் தேழு!

படுகறையாம் பார்ப்பனியம் போக்க வல்ல

                பகுத்தறிவு விடுதலைக்கு எண்பத் தேழு!

 

அறியாமை இருட்டதனை அகற்ற வல்ல

                விரிகதிராம்விடுதலைக்கு எண்பத் தேழு!

வெறியூட்டும் மதபோதை தணிக்க வல்ல

                வினையாற்றும்விடுதலைக்கு எண்பத் தேழு!

பறிபோகும் உரிமைகளை மீட்க வல்ல

                பாதுகாவல்விடுதலைக்கு எண்பத் தேழு!

செறிவார்ந்த கொள்கைவழி, செலுத்த வல்ல

                செம்பதிப்பாம்விடுதலைக்கு எண்பத் தேழு!

 

பெண்ணுரிமை மண்ணுரிமை காக்க வல்ல

                பேராயுதம்விடுதலைக்கு எண்பத் தேழு!

உண்மைதனை உலகறிய உரைக்க வல்ல

                ஒப்பில்லாவிடுதலைக்கு எண்பத் தேழு!

பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்க்க வல்ல

                படைக்கலனாம்விடுதலைக்கு எண்பத் தேழு!

தன்மதிப்பு இனமானம் பயிற்ற வல்ல

                தாளிகைநம்விடுதலைக்கு எண்பத் தேழு!

 

தந்தைநம் பெரியாரால் மாந்தர்க் காக

                தரப்பட்டவிடுதலையைத் தோளில் தாங்கி

 வந்துற்ற தடைகளெல்லாம் கடந்து மண்ணில்

                வீறுநடை போடவைத்த அன்னைக் குப்பின்

விந்தைமிகு ஆசிரியர் பொறுப்பை ஏற்று

                விழிப்புடனே அறுபதாண்டை அதற்காய் ஈந்தே

இந்தமண்ணின் இதழ்ப்பணியின் முதல்வ ராக

                இலங்குகின்ற வீரமணிக் கில்லை ஈடே!

 

தொண்டறத்தைத் துவளாமல் செய்ய வைக்கும்

                தொடர்பணியைத் துஞ்சாமல் செய்வ தாலே

மண்பதையில் மாந்தநேயம் மட்டும் கொண்டு

                மறுமலர்ச்சி புரட்சிநெறி தாங்கி நின்று

எண்பத்தே ழாண்டகவை காணும் நந்தம்

                ஏற்றமிகு விடுதலை¬யை ஞால மெங்கும்

கண்டுகொள வைத்துத்தன் கடனை யாற்றும்

                கண்துஞ்சா வீரமணி காண்டார் தூறே!

No comments:

Post a Comment