சென்னை, மே 30 பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் காணொலி பதிவு ஒன்று
வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
கருப்பு பூஞ்சை என்பது கரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு ஏற்படும் புதுவகையான நோய் கிடையாது. இது ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்தான். கருப்பு பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். இதனை சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம்.
இதுவரை தமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு யாரும் பீதியடைய வேண்டாம். கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுத்ததாலும், ஸ்டீராய்டு கொடுத்ததாலும் அல்லது நீண்ட கால இணை நோயால் பாதிக்கப்பட்டதாலும், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது என கூறுகின்றனர். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இதன் மூலம் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. அதற்காக எல்லா கரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்பது தேவையில்லாத மாயை. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆம்போடெரிசின் தேவைப்படும். அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் சார்பில் மருந்தினை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொறியியல் படிப்புக்கான ஏப்ரல், மே மாத
செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யலாம்
சென்னை, மே 30 பொறியியல் படிப்புக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யலாம் என்றும் தேர்வு ஆப்லைன், பேனா-பேப்பர் முறையில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
என்ஜினீயரிங் படிப்பு நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தது. அந்த தேர்வுக்கான முடிவு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து மறு தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் அதில் பங்கு பெற்று எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன்படி அந்த தேர்வு 3 மணி நேரம் நடக்கும் என்றும், கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் என்ன வினாத்தாள் வடிவமைப்பு பின்பற்றப்பட்டதோ, அதேபோல் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
அதாவது ஆப்லைன், பேப்பர் மற்றும் பேனா முறையிலான தேர்வாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, மே 30 குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. இதனால் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி முழுவதும் சேதமடைந்த கூரை வீட்டிற்கு தலா 5,000 ரூபாயும், அதேபோல் பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா 4,100 ரூபாயும், நெற்பயிர் சேதம் - ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், பிற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment