ஹிந்து மதம் என்பதிலேயே கடவுள் மறுப்பு என்பது ஒரு பகுதியாயிற்றே!
‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்
சென்னை, மே 31 பகுத்தறிவாளர்கள் மகிழவேண்டிய ஒரு பெரிய செய்திஎன்னவென்றால், ‘‘உளமார'' என்று அத்தனை பேரும் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள் ஆளுங்கட்சியில். ‘‘உளமார'' என்று ஜாதி, மத வேறுபாடில்லாமல் உறுதிமொழி எடுத்தவுடன், உடனே கேட்கிறார்கள், ‘‘ஆகா, உளமார என்று உறுதிமொழி எடுப்பதா? கடவுள் பெயரால் எடுக்கலாம் அல்லவா?'' என்று துள்ளிக் குதிக்கிறார்கள். அட, பைத்தியக்காரர்களே, ஹிந்து மதம் என்பதிலேயே கடவுள் மறுப்பு என்பது ஒரு பகுதியாயிற்றே! அதுவே அவர்களுக்குப் புரியவில்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' காணொலி சிறப்புக் கூட்டம்
கடந்த 14.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற காணொலிக் கருத்தரங்கத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய - ‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய, திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
தேர்தல் முடிவுகளைப்பற்றி சிறப்பான ஓர் ஆய்வுரை போல மிக அழகாக, எங்களுடைய பணிகளை யெல்லாம் குறைத்து, இன்றைய முதலமைச்சர் அவர் களுடைய அடக்கமிகு, ஆற்றல்மிகு, திறமைமிகு, கொள்கை மிகு ஆட்சியைப்பற்றி மிக அழகாக எடுத்து தன்னுடைய உரையில் விளக்கியுள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரும், அன்பிற்குரிய அருமைச் சகோதரரும், மானமிகு சுயமரி யாதைக்காரருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இக்கருத்தரங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர் களே, தோழர்களே, இயக்கக் குடும்பத்தவர்களே, இன உணர்வாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகமாக சொல்லவேண்டிய அவசியமில்லாத அளவிற்கு, என்னுடைய பணிச் சுமையைக் குறைத்தி ருக்கிறார்கள்.
யாருடைய பிரச்சாரத்தைத் தடுக்கவேண்டும் என்று நினைக்கின்றபொழுது, குறிப்பாக, அண்மைக்காலத்தில் இரண்டு பேரை அவர்கள், எதையாவது சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறக்கூடாது; திராவிட இயக்கத்தினுடைய கொள்கை பலம் கூடி விடக் கூடாது என்பதற்காகக் குறி வைப்பார்கள்.
குறி வைக்கப்படுபவர்களான இரண்டு பேர்!
அப்படி குறி வைக்கப்படுபவர்களான இரண்டு பேர் இங்கு பேசுகிறோம்.
ஒன்று நான்; இரண்டாவதாக அருமைச் சகோதரர் சுப.வீ. அவர்கள்.
சுப.வீ. அவர்கள் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்குப் பக்கத்திலே திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் எல்லாம் அமர்ந்திருக்கிறார்கள். எனவே, அதன்மூலமாக தி.மு.க. வினுடைய பலம் வெகுவாகக் குறையப் போகிறது. தி.மு.க.விற்குக் கிடைத்திருக்கின்ற ஆதரவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறப் போகிறது என்று - இப்படியெல்லாம் ஆரூடம் கணித்தார்கள்.
அவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்
ஆனால், ஆலமரத்தடி ஜோசியர் அளித்த ஆரூடமாவது சில நேரங்களிலே தப்பித்தவறி, ஏதோ சந்தர்ப்பவசத்தால், ‘‘காக்கா உட்கார்ந்தது, பனம்பழம் விழுந்தது'' என்று சொல்வதைப்போல சில நேரங்களில் நடந்தாலும்கூட, இப்பொழுது அப்படி நடப்பதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லாத அளவிற்கு, அவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்.
ஓர் இனப் போராட்டத்தினுடைய தொடர்ச்சி இந்தத் தேர்தலும்கூட! கொள்கை லட்சியப் போராட்ட வரலாற்றிலே, முதல் தலைமுறை - இரண்டாவது தலை முறை - மூன்றாவது தலைமுறை என்று வரக்கூடிய அந்தப் போராட்டம். இது ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நடக்கின்ற போராட்டத்தின் ஒரு கட்டம்.
அண்மைக் காலத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் - ‘‘வெற்றிடம், வெற்றிடம்'' என்று மற்றவர்கள் எல்லாம் ஒரு பிரச்சாரத்தை செய்து, ஒரு போலித்தனத்தை உருவாக்க முனைந்தார்கள்.
பலம் எது? பலகீனம் எது?
நாம் அப்பொழுதே சொன்னோம், இது அறிவி யலுக்கே முரண்பாடு. வெற்றிடம் என்பது கிடையாது என்று. அதற்கு மாறாக திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு கருத்தை முன்வைத்தோம். இதுதான் கற்றிடமாக மாறும். மாற்றக்கூடிய ஆற்றல் நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. காரணம், அவர் திடீரென்று நடப்பட்டவர் அல்ல; திடீரென்று கழுத்தில் யானை மாலை போட்டதால் அழைத்து வரப்பட்டவர் அல்ல. அவருடைய அடித்தளம் என்பது - இளைஞரணியிலிருந்து இன்றைக்கு அவருக்கு 68 வயது ஆகிறது என்று சொன்னால் நண்பர்களே, ஏறத்தாழ 54 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் முத்திரை பதித்து, ஒவ்வொரு துறையிலும் அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியாருடைய கொள்கைவயப்பட்டு, அண்ணா அவர்களுடைய அரசியலை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, கலைஞரால் தயாரிக்கப்பட்டு, தன்னுடைய அடக்கத்தினாலும், ஆற்றலினாலும், தன்னுடைய பலம் எது? பலகீனம் எது? என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கின்ற காரணத்தினாலும், அவர்கள் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தெளிவான முடிவு எடுக்கிறார்கள். நான் சுருக்கமாகச் சொல்கிறேன், ஏனென்றால், மற்றவற்றை கவிஞரும், சுப.வீ. அவர்களும் விளக்கி விட்டார்கள்.
‘‘இது பரம்பரை யுத்தம்'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தினார்கள்!
உங்களிலே சிலருக்கு நினைவிருக்கலாம் - கலை ஞர் அவர்கள் கடைசியாகப் பங்கேற்ற தேர்தலில் (2016) ஜெயலலிதா அம்மையார் அவர்கள் பேசும்போது, அ.தி.மு.க. - தி.மு.க. என்ற இரண்டு அரசியல் கட்சிகளுக் கிடையே நடைபெறக்கூடிய அரசியல் தேர்தல் என்று அவர்கள் சொல்வதற்குப் பதிலாக, ‘‘இது பரம்பரை யுத்தம்'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தினார்கள்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தை - கலைஞரை ஆதரித்துக் கொண்டிருக்கின்ற கால கட்டத்தில், கலைஞர் அவர்கள் ‘‘ஆம், இது பரம்பரை யுத்தம்தான்'' என்று சொன்னார்கள்.
திராவிடர் கழகமும் சொன்னது, இது ஒரு நீண்ட இனப் போர் என்று. தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், ‘‘மிகப்பெரிய இனப் போராட்டம்'' என்று. அரசியல் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறதே தவிர, உண்மையில் அந்த வண்ணத்தை நீக்கிப் பார்த்தால், அது மிக முக்கியமான இனப் போராட்டம் என்று எடுத்துச் சொன்னோம்.
அந்தப் பரம்பரை யுத்தத்தின் அடுத்தக் கட்டத்தை முடித்து வைக்கக்கூடிய மிகப்பெரிய ஆற்றலைப் பெற்று, அந்த வெற்றியைத் தந்திருக்கிறார்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக - தேர்தலுக்கு முன்பு வரையில் இருந்து -தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் வந்திருக்கிறார்.
வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் முதலமைச்சர்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருக்கிற பொழுது, அவருக்குக் கட்சிப் பார்வை உண்டு. தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றக் கொண்டவுடன், ஓட்டுக் கண்ணோட்டம் இல்லை; நாட்டுக் கண்ணோட்டம்தான். அவர் அனைவருக்கும் முதலமைச்சர்தான். வாக்களித்தவர்களுக்கும் அவர் முதலமைச்சர்; வாக்களிக்காதவர்களுக்கும் அவர்தான் முதலமைச்சர் என்ற உணர்வோடு, யாரையும் அவர் உதாசீனப்படுத்தவில்லை.
‘‘வெற்றி என்று வருகிறபொழுது, அது தலைசாய்ந்த கதிராக இருக்கவேண்டும்; ஆடம்பரம் எல்லாம் கூடாது'' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன் னதை தளபதி ஸ்டாலின் அவர்கள் பாடமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்.
‘‘வரவேற்புப் பதாகைகள் எல்லாம் வேண்டாம் இந்தக் கரோனா காலட்டத்தில். மக்கள் நலன் ஒன்றுதான் மிக முக்கியம்'' என்று அறிவித்தார்கள். அவருடைய எதிரிகள் கைகளில் இருக்கின்ற எந்த ஆயுதமும் பயன்பட முடியாத அளவிற்கு, தன்னுடைய நடத்தையின்மூலம் அவற்றை சக்தியற்றவைகளாக ஆக்கியிருக்கிறார்.
தேர்தல் வெற்றி என்பது ஒரு கட்டம். தேர்தலுக்குப் பின்னால், அருமைச் சகோதரர் சுப.வீ. அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு வார காலத்திலேயே அவர் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்; எவ்வளவு மிளிர்ந்து கொண்டிருக்கிறார்; ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், அவர் எவ்வளவு கவலை தோய்ந்த முகத்தோடு, பொறுப்புணர்ச்சியோடு தன்னுடைய கடமைகளைக் கவனத்தோடும், மிகுந்த அடக்கத் தோடும், உறுதியோடும் செய்துகொண்டிருக்கிறார் என் பதை நாம் பார்க்கிறோம்.
இது வெற்றிடமல்ல; கற்றிடம்!
இதைத்தான் நாம் சொல்கிறோம்; இது வெற்றிடமல்ல; கற்றிடம் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
என்னென்ன கற்றிடம்?
ஒன்று,
இந்து மதம் என்று சொல்லி, இந்துக்கள் எல்லாம் ஒன்று என்று சொல்லி, மதத்தைப் பயன்படுத்தினார்களே, அந்த மதத்தை மக்கள் பொருட்படுத்தினார்களா? என்ற கேள்வியை நியாயமாகக் கேட்டார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இது பெரியார் மண் என்று நாம் சொல்லுகிறபொழுது, அது ஏதோ அலங்காரச் சொல் அல்ல; அல்லது நாமாக வலிந்து சொல்வது அல்ல.
இங்கே கவிஞர் அவர்களும் சுட்டிக்காட்டினார்கள்; அடுத்தபடியாக சுப.வீ. அவர்களும் தெளிவாகச் சொன்னார்கள்.
பார்ப்பனர்களே சட்டமன்றத்தில் இல்லை. அமைச்சரவையில் இல்லை என்பது ஒரு கட்டம் - அது இந்த இயக்கத்தைப் பொறுத்தது. ஆனால், சட்டமன்றத்திலேயே இல்லை. சென்ற சட்டமன்றத்தி லாவது இரண்டு பேர் இருந்தார்கள்; இப்பொழுது அந்த இரண்டு பேர்கூட இல்லை என்பது இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமானது.
‘‘திராவிடம் வெல்லும், அதை நாளைய வரலாறு சொல்லும்''
சென்ற முறை அவர்களுக்குப் பயன்பட்ட கிருஷ்ண னையோ, அதற்குமுன் பயன்பட்ட இராமனையோ தேடினாலும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. இந்த முறை அதற்குப் பதிலாகத்தான் மதம் என்று அவர்கள் ஆரம்பித்தபோது, ‘‘அவை மயக்க பிஸ்கெட்டுகள்'' ஏமாந்துவிடாதீர்கள் என்பதை நாம் எச்சரித்து, ‘‘திராவிடம் வெல்லும், அதை நாளைய வரலாறு சொல்லும்'' என்று தெளிவாக எடுத்துச் சொன்னோம்.
அந்தப் பரம்பரை யுத்தத்தினுடைய தொடர்ச்சி, - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற உணர்ச்சி இருக்கிறதே அது கட்சிகளைக் கடந்தது. திராவிடர் கழகம், கருப்புச் சட்டைப் போட்டவர்கள்தான் அதைப் பேசுகிறார்கள் என்று யாரும் தயவு செய்து நினைக்கக்கூடாது. யார் யாரெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கிறார்களோ - யார் யாரெல்லாம் தங்களுடைய உரிமைகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் நெற்றியில் சின்னம்கூட அணிந்திருப்பார்கள்; ஆனால், அவருடைய உள்ளத் தில் பெரியார் இருப்பார். அதுதான் இந்த வலிமை. அதற்குக் காரணம் அய்யா அவர்களுடைய தொண்டு.
திராவிடம் என்றால், சமத்துவம்!
அவர்களே சொன்னார்கள்,
‘‘நான் எந்தக் காலத்திலும் ஒருபோதும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரரனாகத்தான் இருந்தி ருக்கிறேன்'' என்று சொன்னார்.
கொள்கைக்காரராக இருந்தது என்ன?
‘‘அனைவருக்கும் அனைத்தும்;
சமூகநீதி'' இதுதானே மிக முக்கியம்!
திராவிடம் வெல்லும் என்று நாம் சொல்லுகிறோம் - இது புரியாத சிலர், திராவிடம் என்றால் மொழி, அது, இது என்று சொல்கிறார்கள்.
திராவிடம் என்றால், சமத்துவம்.
சுப.வீ. அவர்கள்கூட இங்கே அழகாகச் சொன்னார்;
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிடம்.
திராவிடத்திற்கு நேர் எதிரான ஆரியத்தினுடைய தத்துவம் என்ன?
வருணாசிரம தர்மம் - பேதம் -
சமத்துவத்திற்கு விரோதமானது.
அங்கு பேதத்தையே வைத்துக்கொண்டு, அதை அடிப்படையாக வைத்துதான் கல்வி மறுப்பு, உத்தி யோக மறுப்பு, வாய்ப்புகள் மறுப்பு என்பதெல்லாம் இருக்கிறது.
அதற்கெதிராக திராவிடர் இயக்கம் அன்றைக்குத் தொடங்கிய யுத்தம் இருக்கிறதே - நூறாண்டு காலத்திற்கு முன்பாக நடந்து வந்தது என்பதற்கு அடையாளமாக ஒரு சிறு செய்தியை இங்கு பதிவு செய்கிறேன்.
அண்ணா அவர்களின் உறுதி!
அண்ணா அவர்கள் வெற்றி பெற்றவுடன் செய்தி யாளர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது,
‘‘நாங்கள் திடீரென்று ஒரு பத்தாண்டு காலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்று நினைக் காதீர்கள். மாறாக, எங்களுடைய பாட்டன் நீதிக்கட்சி'' என்றார். ‘‘நீதிக்கட்சியை 500 அடி ஆழத்தில் புதைத்து விட்டோம் என்று சிலர் உளறினார்கள்; அப்படியல்ல, அதனுடைய தொடர்ச்சிதான் நாங்கள்'' என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
அது இன்னொரு 50 ஆண்டுகாலத்திற்குப் பிறகு, தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருவெற்றியின்மூலம் - நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. மதவாதத்திற்கு எதிராக - ஜாதியத்திற்கு எதிராக - பதவி வெறிக்கு எதிராக - பண வெறிக்கு எதிராக - செல்வாக்கிற்கு எதிராக - அடக்குமுறைக்கு எதிராக - அதிகாரவர்க்கத்திற்கு எதிராக வென்றிருப்பது அதனுடைய அடிப்படையில்தான்.
நூறாண்டுகளுக்கு முன்பு பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று ஆரம்பித்த அந்தக் காலகட்டத்திலே ஒரு செய்தி. இதை ஆய்வாளர் சரசுவதி அம்மையார் எழுதியிருக்கின்ற ஒரு நூலில் இருந்து, ஆய்வாளர்கள் குறிப்பிலிருந்து நான் சொல்கிறேன்.
98 இடங்கள் இருந்த இடத்தில், பார்ப்பனர்களின் ஆதிக்கம் எப்படி இருந்தது என்று பாருங்கள். நண்பர்களே, இப்பொழுது சிலர் நினைக்கலாம், ‘‘என்னங்க, அவர்கள் 3 சதவிகிதம் கூட இல்லையே - அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். ஆனால், அவர்களுக்குச் சொல்கிறோம், அவர்கள் எவ்வளவு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அடையாளம்,
1920 இல் - சட்டமன்றத்தில் 98 இடங்களில் 17 இடங்கள் அவர்கள்.
1923 இல் - 13
1926 இல் - 18
இராஜகோபாலாச்சாரியார் 1937- 1938 இல் அதிகம்.
அப்படிப்பட்ட சூழலில், கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இன்றைக்கு அறவே ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.
கொஞ்ச காலத்திற்கு முன்பு - வழக்குரைஞர்கள் என்றால் அவர்கள்; ஆனால், இப்பொழுது பார் கவுன்சில் என்கிற வழக்குரைஞர் சங்கத்தில், ஒரு பார்ப்பனர்கூட தமிழ்நாட்டில் இல்லை என்பதை ஆந்திராவில் இருக்கின்ற நண்பர்கள் வியப்போடு என்னிடத்திலே கேட்டார்கள்.
பெரியார் மண் என்பதற்கு இதுதான் அடையாளம்.
அவர்கள்தான் வழக்குரைஞர்கள் என்கிற பாரம் பரியம் இருந்தது; இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது - நீதிபதிகள் மத்தியில். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இது எப்படி வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
1920 இல், 98 ஆக இருந்த இடங்கள், பிறகு 234 ஆகப் பெருகியது. பிறகு வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்று மாறியிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
செய்தியாளர்களின் கேள்வியும் - அண்ணாவின் பதிலும்!
அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்,
நீங்கள் எல்லோருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுப்பீர்களா?
‘‘ஆம்! யார் யாருக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அவர்களுக்கெல்லாம் கொடுப்போம்'' என்றார். 9 பேர்தான் அமைச்சரவையில் அன்றைக்கு.
‘‘யாரையாவது ஒதுக்குவீர்களா? பார்ப்பனர்களுக்கு இடம் உண்டா?'' என்று கேட்டார் ஒரு செய்தியாளர்.
உடனே அண்ணா அவர்கள், ‘‘எங்களுக்கு யார் மீதும் வெறுப்பில்லை; ஆனால், எங்களை நம்பி எந்தப் பிராமணரும் வரவில்லையே'' என்று பதில் சொன்னார்.
காமராசருடைய ஆட்சியிலும்கூட அந்த நிலைதான். பிறகு டில்லியிலிருந்த சொல்லித்தான், ஆர்.வெங்கட்ராமன் உள்ளே புகுந்தார்.
ஆகவே, தமிழ்நாட்டினுடைய வரலாறு என்பது - இது பெரியார் மண்தான் என்பதை மீண்டும் சொல்லி இருக்கிறது.
எனவேதான், இதிலே மதத்தைக் கொண்டுவந்து புகுத்தினார்களே, எடுபட்டதா?
இன்றைக்கு அல்ல - 1971 தேர்தலைப்பற்றி சொன் னார்களே - அதிலே இராமனைப் போட்டார்கள்; அதேபோல, சகோதரர் சுப.வீ. அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னாரே - 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு நிகழ்வு - பொள்ளாச்சி சம்பவம் - அதையொட்டிய எனது உரை. அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக - அதிலிருந்து பேச்சை வெட்டி - ஒட்டி - அதைப் பயன்படுத்தி என்னிடத்திலே கேள்வி கேட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இக்கட்டான கட்டத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக முயற்சி செய்தார்கள். அப்போதும் தங்கள் முயற்சியில் அவர்கள் தோற்றார்கள். அதேபோல, இந்த முறை ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள்; எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில், இராசாதான் சிக்கினார்.
இவற்றையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய அள விற்கு வெற்றியை அவர்கள் பதித்திருக்கிறார்கள் என்று சொன்னால், அது சாதாரணமானதல்ல.
பகுத்தறிவாளர்கள் மகிழவேண்டிய ஒரு பெரிய செய்தி!
இந்தப் பரம்பரை யுத்தத்தில், பகுத்தறிவாளர்கள் மகிழவேண்டிய ஒரு பெரிய செய்தி என்னவென்றால், ‘‘உளமார'' என்று அத்தனை பேரும் உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள் ஆளுங்கட்சியில்.
‘‘உளமார'' என்று ஜாதி, மத வேறுபாடில்லாமல் உறுதிமொழி எடுத்தவுடன், உடனே கேட்கிறார்கள், ‘‘ஆகா, உளமார என்று உறுதிமொழி எடுப்பதா? கடவுள் பெயரால் எடுக்கலாம் அல்லவா?'' என்று துள்ளிக் குதிக்கிறார்கள்.
கடவுள் பெயராலும் எடுக்கலாம், உளமார என்றும் எடுக்கலாம் என்று தெளிவாகவே அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதைத்தான் அவர்கள் பயன்படுத்தினார்கள்.
அதிலே, கடவுள் நம்பிக்கையாளர்கள் பலர் இருக் கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில், கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல.
ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்று அவர்கள் சொல்வார்கள்.
திராவிடர் கழகத்திற்கும் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு கோடே அதுதான்.
அரசியல் பிரிவு திராவிட முன்னேற்றக் கழகம்; சமுதாய உணர்வு திராவிடர் கழகம்.
எனவே, அது எங்களைப் பிரிக்காது; எங்களுக் கிடையில் குறுக்குச்சால் ஓட்டலாம் என்றால், அது நடக்காது.
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றவர் கூட, கடவுள் பெயராலே உறுதிமொழி எடுக்கவில்லை என்கிறார்கள்.
ஹிந்து மதம் என்பதிலேயே கடவுள் மறுப்பு என்பது ஒரு பகுதியாயிற்றே!
அட, பைத்தியக்காரர்களே, இந்து மதம் என்பதி லேயே கடவுள் மறுப்பு என்பது ஒரு பகுதியாயிற்றே! அதுவே அவர்களுக்குப் புரியவில்லையே!
நாஸ்திகர்கள் என்பவர்கள் - கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள்; உன்னுடைய இராமாயணத்தில் இருக்கிறது - தசரதனுக்கு அமைச்சராக இருந்தவர் ஜாபாலி. அதுமட்டுமல்ல, அவ்வளவு தூரம் போகவேண்டாம் -
பவுத்தம் இந்து மதத்தினுடைய ஒரு பிரிவு என்று சொல்லுகிறீர்களே - பவுத்தம் கடவுள் மறுப்பைக் கொண்டது - இது இன்னொரு செய்தி. (தொடரும்)
No comments:
Post a Comment