69% இடஒதுக்கீடும், 9ஆம் அட்டவணையும், மாநிலங்களின் உரிமை பறிப்பும்!
Dr. ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் LLD
ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. இராஜன் அவர்கள் மிகப் பெரிய சட்ட வல்லுநர். நுண்மாண் நுழைபுலம் மிக்க தமிழ்நாடு அரசின் சட்டத் துறை செயலாளராகவும் பல ஆண்டுகள் இருந்து அனுபவம் பெற்றவர்.
9ஆம் அட்டவணை பாதுகாப்பு இருந்தாலும்கூட 69% சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற சிலரின் ஆசை கலந்த நம்பிக்கை எவ்வளவு அடிப்படையற்றது என்பதை இக்கட்டுரை மூலம் - 9ஆம் அட்டவணை வரலாற்றைக் கூறி தெளிவுபடுத்துகிறார்.
[ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்- -- ஆசிரியர்]
சொத்துரிமையும் அடிப்படை உரிமையே!
(Right to Property was a Fundmental Right)
இந்திய அரசமைப்புச் சட்டம் 1950ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தபோது, குடிமக்கள் அனைவருக்கும் சொத்துரிமையும், 19(1)f பிரிவின்கீழ், ஓர் அடிப்படை உரிமையாகவே இருந்தது. குடிமக்களின் சொத்து எதையும் அரசு கையகப்படுத்துமானால், அதற்கு அரசு தக்க ஈடு செய்ய வேண்டும் என்றும் 31ஆவது பிரிவின் கீழ் சொல்லப்பட்டிருந்தது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடனேயே பல மாநிலங்கள், நிலச் சீர்திருத்தச் சட்டங்களை இயற்றின. ஜமீன் தாரி நில உரிமைகள் நீக்கப்பட்டன. அச்சட்டங்கள் நீதிமன்றங்களால் செல்லாது என தீர்ப்பளிக்கப் பட்டு முடக்கப்பட்டன. போதுமான பாதுகாப்பு அம்சங்கள் 31ஆம் பிரிவில் இருந்தபோதும், A.R.1951 Part 91இல் கண்டுள்ள காமேஷ்வர் சிங் எதிர் மீகார் மாநில வழக்கைப் போன்ற பல வழக்குகளில் அச்சட்டங்கள் செல்லாச் சட்டங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டன. அப்போது மத்திய அரசு ஒரு புதிய உத்தியைக் கையாண்டு, இது போன்று செல்லாச் சட்டங்கள் என்று தீர்மானிக் கப்பட்ட சட்டங்களுடன் இனி வருங்காலங்களில் இயற்றக்கூடிய சட்டங்களையும், காக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்தது.
அரசமைப்பு முதல் திருத்தச் சட்டம், பிரிவு 31A, 31Bசேர்ப்பு
அந்த உத்தி, அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 31A மற்றும் 31B என்ற இரு பிரிவுகளைச் சேர்த்ததாகும். இத்திருத்தச் சட்டம் இயற்றப்படுவ தற்கான காரண காரியங்கள் எனக் கீழ்க்கண்ட வற்றையும் உள்ளடக்கி இருந்தது:
“பிரிவு 31இல் இடம் பெற்றிருக்கும் பல பாதுகாப்புக் கவசங்களையும் மீறி, பல மாநிலச் சட்டமன்றங்கள் இயற்றிய, நிலச் சீர்திருத்தச் சட்டங்களை, நீதிமன்றங்கள் செல்லாது எனத் தீர்மானித்து விட்டதால், பெருவாரியான மக்களுக்குப் பயனளிக்கவல்ல நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் தடைபட்டுவிட்டன. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், ஜமீன்தார் முறை ஒழிப்புச் சட்டங்கள் மற்றும் சில குறிப்பிட்ட சட்டங்களை முழுமையாகப் பாதுகாத்து அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் சில பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதே.
அதாவது ‘எஸ்டேட்’ முதலானவற்றை கையகப்படுத்துவதை பாதுகாப்பதற்காகவே புதிய பிரிவு 31A அரசமைப்புச் சட்டத்தில் சேர்க் கப்பட்டது. அதன்படி “எஸ்டேட்டுகளையோ அல்லது அது தொடர்பான உரிமைகள் எதனை யுமோ அரசு கையகப்படுத்துவதற்காகவோ, மாற்றி அமைப்பதற்காகவோ இயற்றப்படும் எந்தச் சட்டமும், அது எந்த அடிப்படை உரிமையையும் மட்டுப்படுத்துகிறது என்றோ அல்லது அதற்கு எதிரானது என்றோ தீர்மானித்து, அச்சட்டங்களைச் செல்லாது எனத் தீர்மானிக்க இயலாது”.
இந்த 31A பிரிவில், முதல் திருத்தச் சட்டத் திற்குப் பின்னர் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த பிரிவு நிலச் சீர்திருத்தச் சட்டங்களை மட்டுமே பாதுகாக்க வகை செய்தது. வீட்டு வசதிகளைப் பெருக்குவதற்கோ, வெள்ளத் தடுப்பிற்கோ தனியார் நிலங்களைக் கையகப் படுத்துவதானது நிலச் சீர்த்திருத்தங்கள் அல்ல. எனவே அவற்றிற்கு 31A பிரிவின் பாதுகாப்பு அரண் பொருந்தாது என நீதிமன்றங்கள் தீர்ப் பளித்தன.
‘9ஆம் அட்டவணை’:
முதலாம் அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் 31B என்ற மற்றொரு பிரிவும் இவ்வாறாகச் சேர்க்கப்பட்டது:
சில சட்டங்களையும், விதிகளையும் செல்லத்தக்கதாக்கல்:
“பொதுவாக, 31A பிரிவின் கீழ் கண்டுள்ள வற்றுக்கு குந்தகம் இல்லாத வகையில், 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்படும் எந்தச் சட் டமோ, விதிமுறைகளோ, அடிப்படை உரிமை எதனையும் பாதிக்கிறது, அல்லது பறித்து விடு கிறது, அல்லது குறுக்கி விடுகிறது என்பதற்காக அவை செல்லத்தகாத சட்டம் ஆகிவிடும் என்றோ அல்லது முன் எக்காலத்திலும் செல்லத்தகாத சட்டமாகிவிட்டது என்றோ கருதக்கூடாது; நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது உத்தரவுகள் ஏதேனும் அதற்கு எதிரானதாக இருப்பினும் இப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டமும் விதிமுறைகளும், அதனை இயற்றிய சட்டமன்றத்தின் அதிகாரத்திற்கு மட்டுமே கட்டுப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்”.
இப்பிரிவினைச் சேர்த்ததன் நோக்கமே சில குறிப்பிட்ட சட்டங்களையும், விதிமுறைகளையும், அவை இயற்றப்பட்ட காலம் முதற்றேயும் இனி வருங்காலத்தில் இயற்றப்பெறும் சட்டங்களையும் செல்லத்தகாததாக்க இயலாத முறையில் பாதுகாப் பதே ஆகும். இம் முதல் திருத்தச் சட்டத்தின் மூலம் 13 சட்டங்கள் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டன. அதன்பின் பல திருத்தச் சட்டங்களின் மூலம் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 284 சட்டங்கள் இதில் உள்ளன. இதில் சேர்க்கப்பட்டுள்ள எந்தச் சட்டத்தையும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று முடிவு செய்து, செல்லாச் சட்டங்களாக்க இயலாது.
பிரிவு 31B, பிரிவு 31Aக்கு கட்டுப்பட்டதல்ல:
அரசமைப்புச் சட்ட 31B பிரிவானது அதில் சேர்க்கப்பட்ட குறிப்பிட்ட சட்டங்களை, அடிப் படை உரிமைகளுக்கு எதிரானது அல்லது பாதிக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து அதன் ஆக்கத்தை அல்லது செயல்பாட்டை குறை கூற முடியாது. மேலும் 31A பிரிவு எந்த வகையிலும், 31B பிரிவினைக் கட்டுப்படுத்தாது. இரண்டும் வெவ்வேறு தனித்த பிரிவுகளாகும். அதாவது 31ஙி பிரிவுடன் சேர்ந்த 9ஆம் அட்டவணை, சட்டங் களில் ஏதேனும் குறைகள் இருப்பினும், அவற்றை நீக்கி விடுகிறது. ஏற்கெனவே நீதிமன்றங்களால் செல்லாது எனத் தீர்ப்பளித்திருந்தாலும், அச் சட்டம் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட வுடன் எல்லா வகையிலும் ஆதி முதற்கொண்டே செல்லும் சட்டமாகி விடும். அரசமைப்பு சட்டத்திற்கு முந்தைய சட்டமானாலும் அதற்கும் இது பொருந்தும். 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் எதனையும் அதனை இயற்றிய சட்டமன்றம், திருத்தவும் கூடும். ஆனால் அவ்வாறான திருத்தங்களுக்கு 31A பாதுகாப்பு கிடைக்காது. சேர்க்கப்பட்ட சட்டத் திலேயே விதிமுறைகளை இயற்ற வகை செய்யப் பட்டிருந்தால் மட்டுமே, புதிய விதிமுறைகளுக்கும் அந்த பாதுகாப்பு கிடைக்கும்.
வாமன் ராவ் எதிர் மத்திய அரசு(1981(2) Scc 362)
உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், 9ஆம் அட்ட வணையில் 24.4.1973ஆம் நாளுக்கு முன்பே இணைக்கப்பட்ட சட்டம், அதாவது ‘கேசவானந்த பாரதி’ தீர்ப்புக்கு முன்பே இணைக்கப்பட்டு விட்ட சட்டத்தினை நீதிமன்றங்கள் எந்தவிதமான ஆய்வுக்கும் உட்படுத்த இயலாது என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னர் இணைக்கப்பட்ட சட்டங்களை நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின், ‘அடிப்படைக் கோட்பாட்டிற்கு’(basic structure)எதிரானதா இல்லையா என்று ஆய்வு செய்ய இயலும்.
மினர்வா மில்ஸ் வழக்கு
(AIR 1980 SC 1789)
மேற்சொன்ன கருத்தை உச்சநீதிமன்றம் மினர்வா மில்ஸ் வழக்கிலும் உறுதி செய்தது. ஆனால் பீம்சிங் எதிர் மத்திய அரசு,(1981(1) SCC 166), தீர்ப்பில், நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டம் 1976, 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டிருந்த போதும் அது அடிப்படை உரிமைகள் 14 மற்றும் 19(1)(f)க்கு எதிரானது என்றும், அதனால் அரச மைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் செல்லத்தக்கதல்ல என்றும் தீர்ப்பளித்தது. இந்த இரண்டு வகையான தீர்ப்புகளுக்குப் பின்னால், ‘கொயிலோ நீதிமன்றம்’ அதனை கூடுதல் நீதி பதிகள் கொண்ட அமர்வு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியது.
L.R. கொயிலோ எதிர் தமிழ்நாடு மாநில அரசு (1999(9) SCC 580)
பிரிவு 31Bயின் நோக்கம், இடர்களை நீக்கு வதல்லாமல், நீதிமன்ற விமர்சனத்தையே நீக்குவதல்ல. எனவே, அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்படும் ஒவ்வொரு திருத்தமும், 9ஆம் அட்டவணையில் செய்யப்படும் திருத்தம் உள்பட, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு ஒத்ததாகவே இருக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பின்படியுமே, 9ஆம் அட்ட வணையில் சேர்க்கப்பட்ட சட்டம், அடிப்படைக் கோட்பாட்டுக்கு (basic structure) எதிராக உள் ளதா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய இயலும். இடஒதுக்கீடு வழங்கப்படுவது சமத்துவக் கோட் பாட்டுக்கு எதிரானது அல்ல என்றும் மாறாக சமத்துவக் கோட்பாட்டை நிலை நாட்டுவதற்கே என்பதையும் அனைத்து நீதிமன்றங்களும ஒப்புக் கொண்டுள்ளன. உண்மையில் அது ‘உண்மை நிலையில் சமத்துவம்’(equality infact) என்ற அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டை நிலைப்படுத்துவதே ஆகும். மேலும் 1986ஆம் ஆண்டு இரண்டாவது மினர்வா மில்ஸ் வழக்கில் நீதிமன்றம் முதல் வழக்கில் அளித்த தீர்ப்பினை மாற்றிக் கொண்டது. நீதிமன்றத்தின் அதிகாரம் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத் தின் செல்லத்தக்க நிலையை, அது அடிப்படைக் கோட்பாட்டிற்கு ஏற்புடையதா இல்லையா என்பதை அதிக எண்ணிக்கை கொண்ட அமர்வு தீர்மானிக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தது. அந்தக் கேள்விக்கு 2007ஆம் ஆண்டில் 9 நீதிபதிகள் அமர்வினால் விடை அளிக்கப்பட்டு விட்டது.
L.R. கொயிலோ எதிர் தமிழ்நாடு மாநிலம் (2007)
1. இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்களைக் கேட்டபின்னர், 11.1.2007ஆம் நாள் உச்சநீதிமன்றம் கீழ்க்கண்டவாறு, மேற்கண்ட கேள்விக்கு, விடை அளித்துள்ளது.
(i) அடிப்படை உரிமைகளில் எதையேனும் கட்டுப்படுத்துவதோ அல்லது நீக்கும் வகையிலோ ஒரு சட்டம் இயற்றப்படும்போது அது அசரமைப்புச் சட்ட அடிப்படைக் கோட்பாட்டிற்கு முரணானதாக இருக்கலாம் அல்லது இல்லா திருக்கலாம். அவ்வாறு இருக்குமேயானால், அது அடிப்படை உரிமைப் பிரிவுகளில் எதையேனும் திருத்தி அமைந்திருந்தால், அச்சட்டத்தினை 9ஆம் அட்டவணையில் சேர்த்திருந்தாலும் கூட, அச்சட்டம் நீதிமன்ற ஆய்வின்போது செல்லாத சட்டம் என்று தீர்மானிக்கப்பட வேண்டும். அவ்வாறான சட்டங்கள் செல்லுமா செல்லாதா என்பதை இத்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கோட் பாடுகளைப் பின்பற்றியே தீர்மானிக்கவேண்டும்.
(ii) கேசவானந்த பாரதி வழக்கின் பெரும் பான்மைத் தீர்ப்புடன், இந்திரா காந்தி வழக்கின் தீர்ப்பினையும் சேர்த்துப் படிக்கும்போது, புதி தாகச் செய்யப்படும் அரசமைப்புத் திருத்தத்தின் செல்லும் தன்மையை, அத்திருத்தச் சட்டத்தின் சாதக பாதகங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிக்கும் போது அச்சட்டம் உண்மையில், அடிப்படை உரிமைகளின் மீது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையிலேயே, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படுகிறதா எனவும் முடிவு செய்ய வேண்டும். அச்சட்டத்தின் தாக்கத்தின் அடிப்படையிலேயே அச்சட்டத்தின் செல்லும் அல்லது செல்லாத் தன்மையைத் தீர்மானிக்க வேண்டும்.
(iii) 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாளுக்குப் பின்னர், 9ஆம் அட்டவணையில் பல்வேறு சட்டங்களைச் சேர்ப்பதற்காக இயற்றப் பட்ட திருத்தச் சட்டங்கள் அனைத்துமே, அரச மைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு எதற்கும் முரணாக உள்ளதா என்பதை பிரிவுகள் 14, 19 மற்றம் 21இல் கண்டுள்ள அடிப்படை உரிமைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும். அதையே வேறு மாதிரியாகச் சொல்வதானால், ஒரு சட்டம் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப் பட்டிருந்தாலும், அச்சட்டப் பிரிவுகள், அடிப்படை உரிமைகளைப் பாதிக்குமாறோ அல்லது அழிப்பது போலோ இருப்பினும், அச்சட்டம் அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அமைந்துள்ளதா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க இயலும்.
(iv) அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்படும் ஒரு சட்டத்திற்கு முழுப் பாதுகாப்பில்லாத வகையிலான ஒரு பாதுகாப்பு தருவது சரியானதே என்று அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளிப் பதற்கு, அச்சட்டம் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அது அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு பிரிவுகள் 14, 19 மற்றும் 21 ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதாவது இந்திரா காந்தி வழக்கில் சொல்லப் பட்டவாறு அடிப்படை உரிமைகளின் அடிப்படை யிலான சுருக்கமான ‘உரிமைச் சோதனை’ (right test)செய்ய வேண்டும். இவ்வாறான சோதனை யில் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டம், அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் போது, அது அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தால், அச்சட்டத்திற்கு 9ஆம் அட்டவணையின் பாதுகாப்பு கிடைக்காது. இதுவே, 14.9.1999ஆம் நாளில் கொயிலோ வழக்கில் எழுப்பப்பட்ட, கேள்விக்கு எங்களின் விளக்கமாகும்.
(v) இந்நீதிமன்றத்தால் ஒரு சட்டம் 9ஆம் அட்டவணையின் பாதுகாப்புக்கு உகந்தது என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்குமேயானால், அதனை மேலே குறிப்பிட்டுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில், மீண்டும் விவாதத்திற்கு உட் படுத்த இயலாது. ஆயினும், அடிபப்டை உரிமை களுக்கு எதிரானது எனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு சட்டம் 9ஆம் அட்டவணையில் 24.9.1973க்குப் பின்னர் சேர்க்கப்பட்டிருக்குமேயாயின், அச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாக இருந்தால் அதன் அம்சங்களை அரசமைப்புச் சட்ட 14, 19 மற்றும் 21ஆம் பிரிவுகளின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.
(vi)முடிவு பெற்ற செயற்பாடுகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாகாது. எங்களிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இவ்வாறு நாங்கள் விளக்கம் அளிக்கிறோம். இதுவே 2007ஆம் ஆண்டில் கொயிலோ வழக்கில் உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்ட விளக்கமாகும்.
த.நா. 69% இடஒதுக்கீட்டுச் சட்டம் அரசமைப்பின் ஓர் அங்கம்
தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள 69% இடஒதுக்கீட்டுச் சட்டம், 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதால், அது அரசமைப்புச் சட்டத்தின் ஓர் பகுதியாகும். அதை எதிர்த்து வழக்காட வேண்டுமாயின், அச்சட்டம் அரச மைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட் டுக்கு எதிரானது என்ற வாதம் மட்டுமே வைக்க இயலும். குடியரசுத் தலைவரின் அறிவிக்கையைக் (Notification) காட்டிலும் தமிழ்நாட்டின் சட்டம் பன்மடங்கு வலிமையுடையது.
த.நா. சட்டத்திலுள்ள ‘பட்டியலை’ மாற்ற இயலாது
எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் பிரிவு 342A இன் கீழ் புதிதாக அறிவிக்கை வெளியிட்டாலும் அது தமிழ்நாட்டு சட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட இனம், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம், பட்டியல் இனத்தவர், பழங்குடி மக்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ள பட்டியலை மாற்ற இயலாது. காரணம் அறிவிக்கை என்பது அரசின் நிருவாக முறை செயலாகும். அது சட்டத்தினை மாற்றி அமைக்க இயலாது. எனவே அண்மைக்கால (2021 மே மாதத்திய) உச்சநீதி மன்றத் தீர்ப்பு, தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள 69% இடஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்காது.
2021 மகாராஷ்ட்ர வழக்கின் தீர்ப்பு
உச்சநீதிமன்றம், மராட்டிய மாநிலத்தால் செய்யப்பட்ட மராட்டியருக்கு இடஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தது. அதற்கான அடிப்படைக் காரணம், அரசமைப்புச் சட்டம் 366ஆவது பிரிவில் புதிதாகச் சேர்க்கப்பட்ட (26C) என்ற உட்பிரிவில் ’சமூக நிலையிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள்’ யார் என வரையறுக்கப்பட்டுள்ளது தான். அதாவது ‘இந்த அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள நோக்கத்திற்காக’ (for the purposes of this constitution) சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் என்பவர்கள் ‘342A பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டவர்கள்’ மட் டுமே என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாலும், 342A பிரிவின்கீழ் அவ்வாறு வகைப்படுத்தும் அதி காரம் மத்திய அரசுக்கு மட்டுமே என்று குறிப் பிடப்பட்டிருப்பதாலும், மராட்டிய மாநிலம் புதிதாக எந்த வகுப்பினரையும் அந்தப் பட்டி யலில் சேர்க்க இயலாது என்றும் அவ்வாறு சேர்த்தது செல்லத்தக்கதல்ல என்றும் தீர்ப்பளித் துள்ளது.
முறையாகச் சிந்திக்காமை (Non-application of mind)
பட்டியலின ஆணையத்திற்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் அரசமைப்புச் சட்டம் 339ஆம் பிரிவில் கண்டுள்ளவாறு ஓர் ஆணையம் தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. அதே பிரிவினை அப்படியே பின்பற்றி பட்டியல் பழங்குடி இனத்தினருக்கு தனியாக ஓர் ஆணை யம், பிரிவு ‘338A’ பிரிவின்படி பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. அதையே அச்சுப் பிசகாமல் நகலெடுத்து 338B பிரிவின்கீழ் ‘சமூக நிலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர்’ ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இச்செயலானது பட்டியல் இனத்தவர் யாவர் என்பதும் பட்டியல் இன பழங்குடியினர் யாவர் என்பதும் 1932ஆம் ஆண்டிலேயே, அகில இந்திய அளவில், முடிவு செய்யப்பட்டு அட்டவணையில் இடம் பெற் றுள்ளது என்பதையும், அதுபோன்ற பட்டியல் பிற்படுத்தப்பட்டோர் குறித்து வரையறை செய்யப்படவில்லை என்பதையும், ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் பல்வேறு வகைப்படுவர் என்பதையும் கருத்தில் கொள்ளா மலும், முறையாகச் சிந்திக்காமலும், இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 366(26A) பட்டியல் இனத்தோர் யார் என்பதை வரைமுறை செய்வது போன்றும் 366(26B) பிரிவு, பட்டியல் இன பழங்குடியினரை அதுபோன்றே வரையறை செய்ததுபோல், அதே வழியில் 366(26C) பிரிவினை புதிதாகச் சேர்த்து அதில் பிற்படுத்தப்பட்டோர் யாவர் என்பதை வரையறை செய்வதாக வனையப்பட்டுள்ளது.
மாநிலங்களிலுள்ள பட்டியல்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை:
பொதுவாக அனைத்து வறையறைகளிலும் (definitions), ‘இடத்திற்கேற்ப மாறுபட்ட பொருள் தேவைப்பட்டாலன்றி’ என்னும் சொற்றொடர் காணப்படும். பிரிவு 366இல்கூட அதே சொற் றொடர் காணப்படுகிறது. அதாவது, வரையறை செய்யப்படும் எதுவும் எப்போதும் ஒரே பொருளைத் தராது என்பதும், இடத்திற்கேற்ப தேவைப்படும் போது மாறுபட்ட பொருள் கொள்ளலாம் என்பதுமாகும்.
பிரிவு 12இல் அரசமைப்புச் சட்ட மூன்றாவது பகுதியில் அரசு(State)என்பது மாநில அரசு களையும் உள்ளடக்குமாறே வரையறை செய்யப் பட்டுள்ளது. தவிர, பிரிவுகள் 15 மற்றும் 16இன் கீழ் வகைப்படுத்தும் உரிமை (right to classify) மாநிலங்களுக்கு உண்டு. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்த 342A மற்றும் 366(26C) வரையப்பட்டுள்ளது. அநேகமாக அனைத்து மாநிலங்களுமே தத்தம் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் யாவர் என்பதை வகைப் படுத்தி உள்ளன. அவை எல்லாவற்றையுமே, இவ்வரையறை வீணானதாக்கி விடுகிறது.
அடிப்படைக் கோட்பாடு மீறப்படுகிறது:
அவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யாவர் என்பது 1951ஆம் ஆண்டு முதலே வகைப்படுத் தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சில தனிச் சலுகைகள் தரப்பட்டுள்ளன. அவ்வாறு வகைப் படுத்துவதே அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். ஆனால், புதிதாகச் சேர்க்கப்பட்ட 366(26C) பிரிவில் மாநி லங்களின் இந்த உரிமை முற்றாகப் பறிக்கப்பட்டு விட்டது. அவ்வாறான செயல், அடிப்படைக் கோட்பாட்டினை மீறுவதாகிறது. இச்செயலானது, எந்த அய்யமுமின்றி, கூட்டாட்சித் தத்துவத் துக்கும் எதிரானதாகிறது.
’மராட்டியத் தீர்ப்பு’ மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்:
இந்த நிலையில், மராட்டிய மாநிலத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதைத் தீர் மானிக்கும் உரிமையே இல்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு. மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று என்பது புலனாகும். மேலும் தற்போது நிலவும் ‘கொரனா’ நெருக்கடி நிலையில், அனைத்து மாநிலங்களின் வாதங்களும் முழுமை யாக முன் வைக்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் தாக்கீது(Notice) அனுப்பப் பட்டதா என்பதும் தெரியவில்லை. எனவே, இத் தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி யதாகிறது. மற்ற மாநிலங்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லவே வாய்ப்பளிக்கப்படவில்லை.
மத்திய அரசால் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது:
மத்திய அரசு 13.5.2021 அன்று இந்தத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மனுச் செய்துள்ளது. அநேகமாக இந்த மனு ஏற்கப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் தாக்கீது அனுப்பப்பட்டு, முழுமையாக விசாரிக் கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு பிரிவு 366(26C) மற்றும் 342Aபிரிவுகளில் தகுந்த திருத்தம் செய் யப்பட வேண்டும் என அறிவுறுத்தவும் கூடும். அதுவரை இத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment