கடந்தாண்டில் 27 சதவிகிதம் சரிந்த அரசுத் துறை வேலைவாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 30, 2021

கடந்தாண்டில் 27 சதவிகிதம் சரிந்த அரசுத் துறை வேலைவாய்ப்பு

புதுடில்லி, மே 30 கரோனா தொற்றுப் பரவலால், நாடு முழுவதும் பரவலாக அனைத்து மாநிலங்களிலுமே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொழில் - வர்த்தகம் அனைத்தும் முடங்கியுள்ளன.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், கனரக நிறுவனங்கள், போக்குவரத்து, கட்டுமானம், சாலையோர வியாபாரம் என அனைத்துத் துறை யிலும் கோடிக்கணக்கானோர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா ஊடரங்கு துவங்கிய 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான காலத்தில், தனியார் துறைகளில் மட்டுமல்லாமல் அரசுத் துறை வேலைவாய்ப்புகளும் கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

தேசிய ஓய்வூதிய அமைப்பிட மிருந்து கிடைத்த புள்ளி விவரங் களின்படி, 2020-2021 நிதியாண்டில் அரசுத் துறைகளில் புதிய பணிய மர்த்தல்கள் 27 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

குறிப்பாக, மாநில அரசுகளுக்கான வேலைவாய்ப்புகள் 20 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 2019-2020 நிதியாண்டில் அரசுத் தரப்பில் மொத்தம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இதுவே மிகமிகக் குறைவான எண்ணிக்கைதான். ஆனால், 2020-2021 நிதியாண்டில் இதைக்காட்டிலும் குறைவாக வெறும் 87 ஆயிரத்து 423 பேர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 27 சதவிகித வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.

மாநில அரசு வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரையில், 2019-2020 நிதியாண்டில் 3 லட்சத்து 89 ஆயிரமாக இருந்தது, 2020-2021 நிதியாண்டில் ஒரு லட்சத்து 07 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலத்தில், புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமல்லாமல், ஏற்கெனவே இருந்த வேலையையும் ஏராளமானோர் இழந்துள்ளனர்.

நகர்ப்புற வேலையின்மை 17.4 சதவிகிதமாக உயர்வு!

2021 மே 23 வரையிலான காலத் தில், நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை 14.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வேலையின்மை 17.4 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மய்யம் (சிவிமிணி) தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் மாதம் 6.50 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில் 7.97 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. தற்போது, அது மே 23-ஆம் தேதி யுடன் முடிவடைந்த வாரத்தில் 14.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் அதிகரித்ததே, நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை கடும் நிலைக்குக் காரணம் என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மய்யம் தெரிவித்துள்ளது.

மே ஒன்றாம் தேதியன்று 9.60 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் மே 9 ஆம் தேதியன்று 11.77 சதவிகித மாகவும், மே 16 ஆம் தேதியன்று 14.7 சதவிகிதமாகவும் இருந்தது. அது தற்போது, ஒரே வாரத்திற்குள் மே 23 இல் 17.4 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. எனினும், ஆச்சரியப்படத்தக்க வகையில், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 14.3 சதவிகிதத்தில் இருந்து 13.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இணைய தளத்தில் வேலை தேடல் 10 மடங்கு அதிகரிப்பு

கடந்த ஓராண்டாக தொட ரும் கரோனா ஊரடங்கு நடவடிக் கைகளால், பல லட்சம் பேர், இணைய தளத்தின் மூலமாக வீட்டி லிருந்தே பார்க்கும் வகையிலான வேலைகளைத் தீவிரமாக தேடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, 2021 ஏப்ரலில் வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளுக்கான தேடல் அதிரடியாக உயர்ந்துள்ளது.

வேலை தேடுதல் தளமானஇண்டீட்வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளுக்கான தேடல் 2021 ஏப்ரல் மாதத்தில் 966 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவைச் சேர்ந்தவர்கள், இதுபோன்ற வேலைகளுக்கான தேடு தலில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 சதவிகிதம் பேர் வீட்டி லேயே செய்வதற்கான வேலை களைத் தேடியுள்ளனர். இந்த வேலை தேடல், தலைநகர் டில்லியில் 11 சதவிகிதமாகவும், மும்பையில் 8 சதவிகிதமாகவும், அய்தராபாத்தில் 6 சதவிகிதமாகவும், புனேவில் 7 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.

வீட்டிலிருந்தே பார்க்கும் வேலை களைத் தேடுவோரில், 60 முதல் 64 வரையிலான வயதினர், 15 முதல் 19 வரையிலான வயதினர், 40 முதல் 44 வரையிலான வயதினரின் எண்ணிக்கை தலா 13 சதவிகிதமாகவும், 35 முதல் 39 வரையிலான வயதினர் மற்றும் 20 முதல் 24 வயதினர் எண்ணிக்கை தலா 12 சதவிகிதமாகவும் உள்ளது.

No comments:

Post a Comment