சென்னை பெரியார் திடலில் கரோனாவிலிருந்து குணம் பெற சித்த மருத்துவ மய்யம் தொடக்க விழா
தமிழர் தலைவர் வேண்டுகோள்
கரோனாவை ஒழிப்பதே முதல் பணி - இதில் அரசியலுக்கு இடமில்லை
மருத்துவமனையைத் திறந்து வைத்து இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கருத்துரை
சென்னை, மே 29 சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் (அறக்கட்டளை சார்பில்) தமிழ்நாடு அரசின் முயற்சியால் இன்று திறக்கப்பட்ட மருத்துவமனை திறப்பு விழாவில் அறக்கட்டளை செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டப் பேரவை உறுப்பினர் இ. பரந்தாமன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் எஸ்.கணேஷ் அய்.ஏ.எஸ். ஆகியோர் பங்கேற்றனர்.
இன்று (29.5.2021) காலை சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் தலைமையில், தமிழக இந்து சமயம் மற்றும் அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார்.
பிறகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களி டையே கூறியதாவது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியம் அவர்களின் உடனடியான முயற்சியினால் இங்கு இந்த மருத்துவமனை கரோனா ஒழிப்புக்கான மய்யமாக இன்று திறக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு இந்த நேரத்தில் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.கரோனா கொடுந்தொற்றை எதிர்த்து ஒரு போரை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது
கரோனா கொடுந்தொற்றை எதிர்த்து ஒரு போரை நம்முடைய தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. மிக வெற்றிகரமான அளவிற்கு அதனை அடக்கக்கூடிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கரோனா தொற்றின் இரண்டாவது வீச்சு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், பல ஆண்டுகளாக பெரியார் திடலில் நடக்கக்கூடிய பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனையை முழுக்க முழுக்க தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையிடம், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை ஒப்படைத்தது.
50 ஆவது மருத்துவமனை
இந்த மருத்துவமனையை கரோனா தடுப்பு மய்யம் - கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக - இதுவரையில் தமிழ் முறையில் - சித்த வைத்திய முறையில், 49 மய்யங்களை தமிழ்நாடு அரசு அமைத்து - அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றது. இன்றைக்குத் திறக்கப் படவிருக்கின்ற மருத்துவமனை 50 ஆவது மய்யமாகும்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் செயல்மிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் திறந்து வைக்கவிருக்கிறார்.
அதேபோன்று இந்தத் தொகுதியின் சிறப்பான, துடிப்புமிகுந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் முன்னிலையிலும், இந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் திரு.பரந்தாமன் அவர்களின் முன்னிலையிலும், இயக்கத் தோழர்கள், மருத்துவர்கள், மற்றவர்கள் முன்னிலையிலும் இம்மருத்துவமனை தொடங்கப்படவிருக்கிறது.
முற்றிலும் இலவசமான சிகிச்சையை மேற் கொள்ள விருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சித்த வைத்தியத்தின் மூலமாக சில சிக்கல்கள் வராமல், சிறப்பாக செயல்படக் கூடிய மருத்துவர்கள், 25 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இதனைக் கண் காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குரிய அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார்கள்.
இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரையில், எல்லா மக்களுக்கும் பயன்படவேண்டும் என்பதற்காக முன்னுதாரணமாக - தமிழக அரசு துறையாகவே நடத்துவதற்குரிய வாய்ப்புகளை அளித்திருக்கிறோம்.
எல்லா வகைகளிலும் துடிப்பு மிகுந்தவர்கள்
தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒன்றைச் சொல்லியிருக்கிறார், ‘‘என்றைக்குக் கரோனாவை ஒழிக்கின்றோமோ அன்றைக்குத்தான் மகிழ்ச்சியான நாள்’’ என்று.
அவருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும், திராவிடம் வெல்லும் என்று காட்டக் கூடிய உணர்வை இன்றைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு இதனை செய்திருக்கிறோம்.
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிக் கிறார்கள்; தேவையானவர்கள தயக்கமின்றி உடனே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
சித்த மருத்துவமனைகள் குறைவாக இருக்கிறதே!
செய்தியாளர்: கரோனா முதல் அலையின்போது சித்த மருத்துவமனைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் சித்த மருத்துவமனைகள் குறைவாக இருக்கின்றதே?
அமைச்சர்: கடந்த காலங்களில் கரோனா முதல் அலையின்போது ஒட்டுமொத்தமாக
13 சித்த மருத்துவமனைகள் தான் தொடங்கப்பட்டன. இப்பொழுது கணக்குப் பார்த்தால், இன்றைக்குத் தொடங்கப்பட்ட சித்த மருத்துவமனை 50 ஆவது மருத்துவமனையாகும்.
அப்படியென்றால், எந்தத் துறையாக இருந் தாலும், கரோனாவிற்கு நிவாரணம் எங்குக் கிடைக்கின்றதோ, அதை அதிகப்படுத்துகின்ற முயற்சியில், மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை இருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணமாக இருக்கிறது.
தமிழக அரசு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது!
செய்தியாளர்: எந்த மருத்துவமனையும் சித்த மருத்துவமனையை பரிந்துரை செய்ய மறுக்கிறதே - சித்த மருத்துவமனைகள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறதே?
அமைச்சர்: அந்த மருத்துவமனைகளில் தேவைப் படுகின்ற மருத்துவ வசதிகள் இருக்கும்பொழுது, அவர்கள் இன்னொரு மருத்துவமனையைப் பரிந்துரைப்பது என்பது இயலாத காரியம்.
சித்த மருத்துவம் வேண்டும் என்பதை, விழிப்புணர்வோடு சித்த மருத்துவத்தில் கரோனா தொற்றை குணப்படுத்தலாம் என்கிற வழிமுறைகளை அரசாங்கமே தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றது.
சித்த மருத்துவ சிகிச்சை முறை தேவைப்படு வோருக்கு, முழு அளவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை முறையை தருவதற்கு, தமிழக அரசும் தயாராக இருக்கிறது என்பதுதான் - பெரியார் திடலில் அமைந்துள்ள சித்த மருத்துவமனையை அரசே ஏற்றிருக்கிறது.
செய்தியாளர்: கரோனா தொற்றால் இறந்த வர்களின் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்லி யிருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அனைத்திலும் வெளிப்படைத்தன்மை!
அமைச்சர்: இந்த ஆட்சியைப் பொறுத்த அளவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், அனைத்தும் டிரான்ஸ்பரன்சி - வெளிப்படைத்தன்மை என்று அறிவித்திருக்கின்றார்.
திருக்கோவில்களை எடுத்துக்கொண்டால்கூட, அதனுடைய சொத்துகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
திருக்கோவில்களில் இருக்கின்ற நகைகள், மதிப்பீட்டுக் குழுவினருக்கு அனுப்பப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, இவ்வளவு நகைகள் இருக்கின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்க இருக்கின்றோம்.
அசையும் சொத்து, அசையா சொத்து என்று அனைத்தையுமே, கோவில் சொத்துகளைக்கூட இன்றைக்கு வெளிப்படைத் தன்மையாகக் கொண்டு வருகின்ற இந்த ஆட்சி, நிச்சயம் அனைத்திலும் வெளிப்படைத் தன்மையாக இருக்கின்றது.
குறிப்பாக, முதலமைச்சர் அவர்கள் இறப்பு சதவிகிதத்தை குறைத்தே காட்டவில்லை. கடந்த ஆட்சியில் நடந்தது அனைவருக்கும் தெரியும்; இதனை அரசியல் ஆக்க விரும்பவில்லை. அனைவரும் ஒன்றுகூடி கைகோர்த்து இந்த கரோனாவை வீழ்த்துவோம் என்பதுதான் எங்களுடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கொள்கை - லட்சியம்.
எனவே, அவர் இதைச் சொன்னார், இவர் அதைச் சொன்னார் என்பதைவிட, ஆலோ சனைகள் எதுவாக இருந்தாலும், அதை ஏற்று செயல்படக்கூடிய ஓர் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு - மாண்புமிகு தளபதி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு.
அதிலும் குறிப்பாக, கடந்த ஆட்சி காலத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று சொன்னபொழுது, பல்வேறு விமர்சனங்கள் வந்ததை நீங்கள் அறிவீர்கள்.
‘‘அவர்கள் எல்லாம் மருத்துவர்களா ஆலோசனை கூறுவதற்கு; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு’’ என்றார்கள்.
ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்றவுடன், சட்டமன்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுக் கூட்டத்தையும் நடத்தி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அதனை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்.
கட்சி, மன மாச்சரியங்களைக் கடந்து, மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றனவோ, அவை யாரிடமிருந்து வந்தாலும், அதனை வரவேற்கக்கூடிய முதலமைச்சராகத்தான் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இருக்கிறார்.
ஊடகத் துறை நண்பர்களின் கடமை!
மருத்துவத்திற்காக, மக்கள் படுகின்ற துன்பங் களுக்காக, இன்றைக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
சித்த மருத்துவமனை திறப்பு என்கிற செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியல்பற்றிய கேள்விகள் முன்னுக்கு வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது ஊடகத் துறை நண்பர்களின் கடமையாக இருக்கவேண்டும்.
தமிழர் தலைவர்: தயவு செய்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்ன கருத்தை கவனத்தில் கொண்டு, இந்த நிகழ்வு என்பது முழுக்க முழுக்க கரோனா தொற்று தடுப்பிற்காக, சித்த வைத்தியத்தை உரிய அளவிற்குப் பயன்படுத்துகின்றோம் என்பதை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு செய்தி.
வேறு செய்திகளை இங்கே கேட்டு, இதனுடைய முக்கியத்துவத்தை அமைச்சர் அவர்கள் சொன் னதைப்போல குறைக்காமல், தனியே கேட்கலாம்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்களும், அமைச்சர் அவர்களும் பதிலளித்தனர்.
No comments:
Post a Comment