தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
புதுடில்லி, மே 30 மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரைநிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது. மேலும், தமிழகத்தில்கடந்த 5 ஆண்டுகளில் வரி வருவாய்குறைந்ததற்கு அரசின் செயலின்மையே காரணம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரி வித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 28.5.2021 அன்று காணொலி வாயிலாக நடந்த ஜிஎஸ்டி மன்றத்தின் 43ஆவதுகூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று (29.5.2021) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது :
ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்று வைத்துள்ளது எந்த வகையில் நியாயம்? ஜனநாயகம் என்பது மக்கள் தொகை அதிகளவில் இருக்கும் இடத்தில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான். வரி வருவாய், உற்பத்தி, நுகர்வு, பொருளாதார உற்பத்தித் திறன் ஆகியவை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு அதிகாரம் அதிகமாக இருக்க வேண்டும்.
மகாராட்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரி வருவாய் அதிகம். இந்த மாநிலங்களில் 65 முதல் 75 சதவிகிதம் வரை மாநில சொந்த வரி வருவாய் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 35 முதல் 25 சதவிகித தொகை மாநிலத்தில் இருந்து கிடைத்த வரி வருவாய் மூலம் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
தடுப்பூசிக்கு வரி விலக்கு அளிக்கும் விஷயத்தில், வருமானம் குறைந்து விடும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. மத்திய அரசுக்கு வரி வருவாய் அதிகம் அளிக்கும் பெரிய மாநிலங்கள் வரியை எடுத்துவிட கூறுகின்றன. ஆனால், நம் வரிப்பணத்தின் மூலம்பயன்பெறும் சிறிய மாநிலங்கள் வரிவிலக்கு கூடாது என்று தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் சுயநலம் உள்ளது என்பதை எடுத்துரைத்தேன்.
வரியை சில மாதங் களுக்கு மட்டும் 5இல் இருந்து பூஜ்யத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். இதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவைஅமைப்பதாக மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்துக்கு ஜிஎஸ்டி மற்றும் இதர வரி வருவாய் ரூ.12 ஆயிரம் கோடி வரை நிலுவை உள்ளது. இதுகுறித்து வலியுறுத்தியபோது, கடன் வாங்கிபிரித்துத் தருவது போன்ற திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிக நிதியை நீண்ட கால கடனாகப் பெறலாம் என்று தெரிவித்துள்ளோம்.
ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசலை கொண்டுவருவது சாத்தியமில்லை. வரியில்லா பட்ஜெட் தவறான கருத்து. மாநிலம், வரியில்லாமல் ஆட்சி நடத்த முடியாது. தமிழக அரசின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், அரசின் வருவாய்அளவு 10.5 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைந்துவிட்டது. இது அரசின் செயலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
தற்போதைய கரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு வரி விதித்து அதைக் கொண்டு அரசை நடத்துவது என்பது மனிதத் தன்மை இல்லாதது. ஜீரோ வரி விதித்தால் சில நூறு கோடிகள் மட்டும்தான் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும். இதைக்கூட பேரிடர் காலத்தில் மக்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment