அரிமா நோக்கு - பார்ப்பனர் வந்தால் தீட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

அரிமா நோக்கு - பார்ப்பனர் வந்தால் தீட்டு

சு.அறிவுக்கரசு

சென்னை மாகாணப் பதிவுத்துறைத் தலைவராக இருந்த சீனிவாசராகவ அய்யங்கார் என்பவர் கிறித்துவ மதத்திற்கோ இஸ்லாத்திற்கோ மாறி விட்டால் ஆதிதிராவிடர்களின் சமூக நிலையில் மாற்றம் ஏற்படும் என்றார். கத்தோலிக்க சர்ச்சுகளில் அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியும் புரொஸ்டன்ட் சர்ச்களிலும் அதே மாதிரி நிலை இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பண்டிதர் அயோத்தி தாஸ் அவர்களை நினைக்க வேண்டும். அவர் தமிழ் இலக்கிய அறிவு நிரம்பப் பெற்றவர். பறையர் எனும் சொல்லுக்கு மாற்றாகப் பூர்வ பவுத்தர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியவர். தமிழர்க்கே உரிய சித்த மருத்துவம் பயின்றவர். 1870இல் அத்வைதானந்த சபையை ஏற்படுத்தி கிறித்துவ மதத்தவரின் தப்புப் பிரச்சாரத்தை முறியடித்தவர். 1898இல் இலங்கைக்குச் சென்று (அப்போது இந்தியாவின் பகுதியே) பவுத்தரானார். ஆன்மஞான சபையின் நிறுவனர் கர்னல் ஹென்றி ஆல்காட் இதற்கு உதவினார். சென்னையில் சாக்கிய பவுத்த சங்கத்தைத் தொடங்கினார். 1907இல்ஒரு பைசாத் தமிழன்எனும் ஏடு தொடங்கினார். பின்னர்தமிழன்என்ற பெயரில் நடத்தினார். தாம் மறையும் வரை (1914 வரை) அவ்விதழ் வெளிவந்தது.

1898ஆம் ஆண்டில், ஹென்றி ஆல்காட்டுக்கு எழுதிய கடிதம் பல உண்மைகளைத் தெரிவித்தது. “தற்காலத்தில் பஞ்சமர் என்று அழைக்கப்படும் அசல் திராவிடர்கள் வசிப்பிடங்களில், தெருக்களில் பார்ப்பனர் வந்து விட்டால், அவர்கள் விரட்டி அடிக்கப்படுவர். அவர்கள் நடந்த பகுதிகள் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டது. அமளி ஏற்பட்டுக் குழப்பமும் நிலவுமாம். தீட்டு போக்குவதற்காக அப்பகுதியில் மாட்டுச் சாணம் தெளித்து தூய்மைப்படுத்தப்படுமாம். சாணம் கரைத்த பானைகள் ஊருக்கு வெளியே கொண்டு போய் உடைக்கப்படுமாம். பிணம் எடுத்தபின் என்னென்ன சடங்குகள் செய்யப்படுமோ அந்தச் சடங்குகள் பார்ப்பனர் வந்தால் செய்யப்பட்டனவாம். (பார்ப்பனர், செத்த பிணத்திற்குச் சமமாக கருதப்பட்டனர்.)

இதை வழிமொழிகிற மாதிரியில் 1919இல் எழுதப்பட்டஆக்ஸ்ஃபோர்டு இந்திய வரலாறுஎனும் நூலில் வின்செட் ஸ்மித் எழுதியுள்ளார். மலபார் பகுதியில் பார்ப்பனர்கள் கீழ் ஜாதியாகவே கருதப்படுகின்றர் எனும் உண்மையை வசந்த் கைவார், சுசேதா மஜூம்தார் ஆகியோர் பதிப்பித்த நூலில் ஒத்துக் கொண்டுள்ளனர். (Race, Orient, Nation நூல் 1993 பக்கம் 32) பார்ப்பனர் வந்து போனால் திராவிடர் வீட்டின் சுவர்கள் சாணம் மெழுகித் தீட்டுக் கழித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழைப் பேசுவதால் திராவிடர் என்றார் அயோத்தி தாசர்.

என்றாலும், குறவர், வில்லியர், சக்கிலியர், துப்புரவுப் பணி செய்யும் தோட்டி ஆகியோரே தாழ்ந்தவர்கள் என்று அவர் கூறியதும் எழுதியதும் நெருடலே.

இவ்வாறு அவமானப்படுத்தப்பட்ட பார்ப்பனர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் பதவிகளைப் பிடித்து விட்டதால் நிலைமையை தலைகீழாக்கி ஏற்றம் பெற்றுவிட்டனர். தாம் அனுபவித்ததீட்டைத் திராவிடர்க்கு என்றாக்கிக் கடைப்பிடிக்க வைத்து விட்டனர். திருச்சியில் குடமுருட்டி ஆற்றில் உள்ள படித்துறையில் பார்ப்பனர் மட்டுமே குளிக்குமாறு ஒதுக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நகராட்சியில் தரப்பட்டது. தந்தவர் உறையூர் வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்த டி.எஸ்.பொன்னுசாமித் தேவர். இது நடந்தது 1914ஆம் ஆண்டில். மலைக் கோட்டை வார்டு உறுப்பினர் வெங்கோய ராவ் என்பவர் தில்லை நாயகம் பிள்ளை படித்துறையையும் பார்ப்பனர்க்கே ஒதுக்க வேண்டும் என்றார். நகர் மன்றத் தலைவர் தன்னிச்சையாக அதே மாதிரி விளம்பரப் பலகை வைத்து பார்ப்பனப் பாசத்தை காட்டிக் கொண்டார். 1916இல் நீதிக்கட்சி பிறந்தது. 1917 முதல் செயல்பட்டது. 1918இல் முனிசிபல் நோட்டீசு போர்டு உடைக்கப்பட்டது. பார்ப்பன ஆண்களும், பெண்களும் மட்டுமே குளிப்பது நிறுத்தப்பட்டது. பூணூல் புதுப்பித்தல், பிண்டம் தருதல் போன்ற பார்ப்பனச் சடங்குகள் தடுக்கப்பட்டன. சிவராம கிருஷ்ணய்யர் எனும் வக்கீல் மூலம் மாவட்ட கலெக்டரை அணுகி, போலீஸ் பாதுகாப்பு பெற்றனர். பூணூல் புதுப்பித்துக் கொண்டனர்.

பார்ப்பனரல்லாத பாரிஸ்டர் டி.சி.தங்கவேல்பிள்ளை எனும் நீதிக்கட்சிக்காரர் பிரச்சினையை கையில் எடுத்தார். தில்லைநாயகம் பிள்ளை எனும் பார்ப்பனரல்லாதவர் தம் சொந்த செலவில் கட்டிய படித்துறை பார்ப்பனர்க்கு மட்டுமா? என்ற கேள்வியை எழுப்பினார். நகராட்சி நோட்டீஸ் போர்டு வைத்தது சட்ட விரோதம் என்றார். வழக்கு தொடர்ந்தார். நகர் மன்றத்தில் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்ததில் பார்ப்பனரல்லாதார் வெற்றி பெற்றனர். பார்ப்பனரின் அக்கிரம செயல்கள் நீதிக்கட்சி பிறந்தவுடனே பார்ப்பனரல்லாதாரின் எதிர்ப்பை சந்தித்தன. முறியடிக்கப்பட்டன. இதற்கான துணிவைத் தந்தது நீதிக்கட்சியின் தோற்றமே.

ஆவணி அவிட்டம் தில்லை நாயகம் பிள்ளை படித்துறையில் நடக்காமல் தடைப்பட்டதால் பார்ப்பனர் கோபப்பட்டனர். 1918 ஏப்ரலில் திருச்சி பெரியக்கடை மைதானத்தில் கூட்டம் ஏற்பாடு செய்தனர். அய்ரீஷ் பார்ப்பனத்தி அன்னிபெசன்ட் நடத்திய ஹோம்ரூல் ஆதரவு எதிர்ப்பாளர்களான பார்ப்பனரல்லாதாரும் பத்தாயிரம் பேர் திரண்டனர். ஒரே இடத்தில் கூட்டம் நடத்துவதா?  சமரசப் பேச்சு நடந்தது. ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. பார்ப்பனர் டவுன் ஹாலில் கூட்டமாய் கூடியனர். பார்ப்பனர் அல்லாதார் மைதானத்தில் பேசினர். இது தொடர்பாக ஆங்கில அரசு ஜே.என்.ராமநாதன் மீது 184 வழக்குகள் போட்டது. டி.வி.சுப்ரமணியம் மீது 98, ஜே.எஸ்.கண்ணப்பர் மீது 53 வழக்குகள். திராவிடர்கள் அச்சிட்டு வெளியிட்ட துண்டறிக்கை வன்முறையைத் தூண்டுவதாக பார்ப்பனர் தீர்மானம் போட்டனர். அந்தத் துண்டறிக்கையை சர்..டி.பன்னீர்செல்வம்  ஏற்கவில்லை. என்றால், நீதிக்

கட்சியினரின் நனி நாகரிகம் எவ்வளவு சிறப்புக்குரியது என்பதை உணரலாம்.

பார்ப்பனர் - திராவிடர் போர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையேயும் பரவியது. இருபிரிவாகி சொற்போர் நடத்தினர். நாள்தோறும் சச்சரவுகள் நடந்தன. ஆசிரியர் மீதும் ஜாதி அடிப்படையில் ஆதரவும் எதிர்ப்பும் நடைபெற்றன. வகுப்பறையில் ஒரு பார்ப்பனப் பேராசிரியர் வாயைத் திறக்கவே பார்ப்பனரல்லாத மாணவர்கள் அனுமதிக்கவில்லை. (நியூ இன்டியா, 19.10.1918இல் எழுதியது). 1920இல் நடந்த முதல் தேர்தலிலேயே , வாக்குச் சேகரித்த மாணவர்களும் மாணவியரும்  பார்ப்பானுக்கு ஓட்டுப் போடாதீர்கள், சர் தியாகராயருக்கு வாக்கு அளியுங்கள்  என்றே கேட்டனர் என்பதை மேற்கண்ட ஏடு 1.12.1920இல் எழுதியுள்ளது. சென்னை, ராயப்பேட்டை மோபரீஸ் ரோட்டில் நடந்த ஊர்வலத்தில், பிளடி பார்ப்பனர்கள், பாப்பார ஹோம் ரூல், பிளடி பார்ப்பன பிச்சைக்காரன்கள்என்றெல்லாம் கோஷம் போட்ட ஊர்வலம் நடந்ததை 2.4.1918 நியூஇண்டியா ஏடு வெளியிட்டுள்ளது.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட என்று கோவலன் - கண்ணகி திருமணம் நடந்ததை சிலப்பதிகாரம் பாடுகிறது. “நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகன் குடுமிபோலஎன்று சங்கப்பாடல் உள்ளது. அந்த ஜாதியினரைக் குறிக்கும் சொல்லையே, அவர்களைத் தாக்கும் வசைச் சொல்லாக மாற்றியவர் பெரியார் என்பார் பேராசிரியர் தொ.பரமசிவன்.

டாக்டர் நாயர் பேசினார்: திருப்பதி கோயிலின் வருமானம், செலவினம் பற்றிய கணக்குகளைப் பார்வையிட்டனர். 99.5 சதவிகிதம் பணம் பார்ப்பனரின் பைக்குள் போய் விடுகிறது. இது பார்ப்பனரல்லாதார் காணிக்கையாக தந்தது. பார்ப்பனர் தந்ததல்ல. என்றாலும் பார்ப்பனர் மட்டுமே படிக்கும் சமஸ்கிருதப் பள்ளிகளுக்கு செல்கிறது. இந்த அநியாயம் தட்டிக் கேட்கப்பட வேண்டும் என்றார். இந்த உண்மையை 1887ஆம் ஆண்டிலேயே ஒத்துக் கொண்டார் வேம்பத்தூர் பாஷ்யம் அய்யங்கார். மாநிலக் கல்லூரி சட்டத்துறையில் இளநிலை பேராசிரியராக இருந்தவர். பொதுப்பணி ஆணையம் கேட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் பின்வருமாறு:

கேள்வி: பெரும்பாலான பார்ப்பன மாணவர்கள் படிப்புச் செலவுக்கான தொகை, பார்ப்பனரல்லாதாரின் நன்கொடை அல்லவா?

பதில்: ஆம். குறிப்பாக சூத்திரர்கள் கொடுத்தது.

கேள்வி: சூத்ர மாணவர்களுக்கும் இதே மாதிரி உதவி தரப்படுகிறதா?

பதில்: பார்ப்பனர் அனுபவிக்கும் அளவுக்கு இல்லை.

என்ன புலனாகிறது? சூத்திரர்களின் கொடைப்பணம் முழுவதும் இவர்களைச் சூத்திரர்களாக்கிய பார்ப்பனர் வயிற்றுக்குத்தான் போகிறது. எனும் உண்மை புரிகிறதல்லவா? இதே போலவே பார்ப்பனரல்லாத பணக்காரர்களின் பணம் வக்கீல் கட்டணம் எனும் பெயரால் பார்ப்பன வக்கீல்களால் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டாமா என்று  கேட்டார் தலைவர் தியாகராயர். (ஜஸ்டிஸ் மூவ்மென்ட் 1917 - வரதராஜூலு நாயுடு - செக்ஷன் 2 பக்கம் 150) நாட்டுக்கோட்டை நகரத்தார் தம் செல்வம் முழுவதையும் கோயில், கட்டுவதிலும், குளம் வெட்டுவதிலும் கொட்டுகின்றனர். சமஸ்கிருதம் படிக்கப் பணத்தைப் பாழாக்குகின்றனரே எனப் பேசினார் பனகால் அரசர். (1917இல் கோவை முதல் பார்ப்பனரல்லாதார் மாநாட்டுப் பேச்சு - மேற்கண்ட நூல் - பக்கம் 13, 14)

இப்படியெல்லாம் பார்ப்பனரல்லாதாரின் செல்வம் பார்ப்பனர்க்கு வாழ்வு தருவதிலும் படிப்புக்காகவும் பாழாகிப் போகிறதே என்கிற ஆதங்கம் தான் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் 1923இல் நிறைவேறியதும் பார்ப்பனர் முட்டுக்கட்டையால் 1925இல் தான் வைஸ்ராய் ஒப்புதல் பெற்றதும் வரலாறு.

பாதிக்கப்பட்ட பார்ப்பனர்கள் இன்றளவும் விபீஷணர்களின் துணையோடு அச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூச்சல் எழுப்புகின்றனர் பக்தியின் பெயரால் - பார்ப்பனர் சூழ்ச்சியைப் புரிந்து கொள்வீர்.

(நிறைவு)

No comments:

Post a Comment