திராவிட நம்பிக்கை மு.க.ஸ்டாலின்
(தொண்டர் முதல் தலைவர் வரை) - ராஜராஜன் ஆர்.ஜெ.
வெளியீடு: நிகர்மொழி பதிப்பகம்
விலை: ரூ. 150/-
திராவிட இயக்கத்தின் தலைமை என்பது தங்கக்கிரீடமல்ல. அது முட்கிரீடம், எண்ணற்ற தியாக மறவர்களை உள்ளடக்கிய வரலாற்றைக் கொண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக இருப்பது சாதாரண விஷயமல்ல. நீதிக்கட்சி உருவாக்கத்தின் தேவை ஏன் ஏற்பட்டது? பார்ப்பனர் அல்லாதார் அரசியல் இயக்கம் என்று ஒன்று ஏன் இங்குத் தேவைப்பட்டது? என்கிற கேள்விகளை நோக்கினால் தான் இன்றைய அரசியலையும், நாளைய வரலாற்றையும் சரியாக எழுத முடியும்.திராவிடர் இயக்கத்தின் வரலாறு நெடியது, அது நீதிக்கட்சியில் தொடங்கி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தொடரக்கூடியது.
இந்த மண்ணில் திராவிட இயக்கத்தின் தேவை என்பது இன்றும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாடு இன்னமும் பெரியார் மண்தான் என்று சொல்லுமளவுக்கு சமூகநீதி அரசியலையும், ஆதிக்க எதிர்ப்பு அரசியலையும் செய்தார்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஓயாமல் உழைத்து தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, தமிழர்களைக் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத் தன்னிறைவால் சுயமரியாதையுடன் வாழவைத்து விட்டு இன்று வங்கக் கரையோரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பெரியாரின் கைத்தடியும், அண்ணாவின் அறிவுக் கூர்மையும், கலைஞரின் உழைப்பும் ஒன்று சேர்ந்து திராவிடத்தின் ஒற்றை நம்பிக்கையில் இன்றைய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நிற்கிறார். தமிழகத்தை மீட்க, அடிமைகளை விரட்ட, ஆதிக்கத்தை வேரறுக்கக் களத்தில் நிற்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு நூல் ஆசிரியர் வரலாற்று பூர்வமாக தகவல்களை நுணுக்கி ஆராய்ந்து வடித்து கொடுத்துள்ளார் என்று நூலின் உள்அடக்கம் தெரிவிக்கிறது.
சமூக அறிவியல் சிந்தனையில் பெரியார்
முனைவர் சௌ.ரா
வெளியீடு: மதுமதி பதிப்பகம்,
105 டியோடர் பிரிவு,
ஈடன் பார்க் குடியிருப்பு,
எம்.ஆர்.ராதா முதன்மைச்சாலை,
புதுப்பாக்கம் அஞ்சல், சிறுசேரி,
சென்னை - 603 193.
விலை: ரூ. 150/-
“சமூக அறிவியல் சிந்தனையில் பெரியார்” என்ற இந்த நூல் அறிவியல் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் நிலையில் சவு.இராமகிருஷ்ணன் அவர்கள் முனைவர் பட்டத்திற்காக தான் செய்த ஆய்வில் சில மாற்றங்களைச் செய்து நூலாகத் தந்திருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்களின் மனிதநேயச் சிந்தனைகள் மூலமும் அறிவியல் சார்ந்த எண்ணக்கருத்துக்களை ஆராய்வதாக இந்த நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களின் விழிப்புணர்வையும், விடுதலை நோக்கி அமைந்த விமர்சனங்களையும் மய்யப்படுத்தி அறிவியல் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் நிலையில் நான்கு பிரிவுகளாகப் பெரியாரை ஆராய்ந்திருக்கிறார்.
மானுட சமுதாயத்தின் அனைத்து கூறுகளையும் பற்றி நன்கு சிந்தித்து, அவற்றின் வளர்ச்சிக்காக உழைப்பதையே தமது வாழ்வில் லட்சியமாகக் கொண்டிருந்தவர் பெரியார். மனித நேயத்தின் முழு முதல் வடிவமாகவும், சமுதாயச் சிந்தனைகளைப் பெற்ற மனிதராகவும் விளங்கியவர்.
பெரியாரின் சமூக அறிவியல் சார்பான விசாலமான பார்வை பற்றி ஆராய்வதாக அமைந்துள்ளது. மதபோதனைகள், தெய்வ அபிசேகங்கள் போன்ற தெய்வ நம்பிக்கைகளைப் பெரியார் ஏற்காமையும், ஜாதி ஒழிப்பு, சமதர்ம நிலை, பிறப்பால் உயர்வு தாழ்வு போன்ற செய்திகளை, பெரியார் மனித இனத்தை மீட்டெடுக்க வகுக்கப்பெற்ற உயரிய கொள்கை, அறிவியல் சார்ந்த சமூகச் சிந்தனைக்கு சான்றாக இலக்கணமாக இருந்தவர் பெரியர் என்பதையும் எடுத்தியம்பியுள்ளமை - தெளிவான மொழிநடையும், ஆற்றொழுக்கமான செய்திகளையும் கொண்டுள்ளதாக “பெரியாரின் சமூக அறிவியல் சிந்தனைகள் ” நூல் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment