ஆளுநரிடம் அடுகிடையாக அடகு போய்விட்ட அ.தி.மு.க.
புகழ்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவில், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை ஆளுநர் நியமனம் செய்தமைக்குக் கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த நான்கு ஆண்டுகளாக - அ.தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் துணைவேந்தர் நியமனம் என்ற உரிமையை, தமிழ்நாடு ஆளுநரிடம் பறிகொடுத்த அடிமைகள் ஆட் சியாகவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த ஆட்சி நடந்து வருகிறது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் தேடல் குழு நியமனத்தில், அரசு சார்பில் ஒரு உறுப்பினர் - முக்கிய உறுப்பினராக நியமிக்கப்படுவதை, முதலில் பறிகொடுத்துவிட்டது; சென்னை கோட்டையிலிருந்து காலங்காலமாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த உரிமையை, ஆளுநர் அபகரிக்கும் நிலை யைக் கண்டு, பாரதக் கதையில் வரும் துரோபதையின் துகிலுரிந்த துச்சாதனன் செயலை வேடிக்கைப் பார்த்த பாண்டவர்கள் என்ற நிலையில், வாய்ப் பொத்தி உரிமையை இழந்ததால், துணைவேந்தர்கள் நியமனம், தமிழ்நாடு அரசின் உரிமையாக இருந்ததை இழந்தனர்.
பாரம்பரிய உரிமையைக் கோட்டை விடுவதா?
அத்தோடு துணைவேந்தரை தேர்வு செய்து வந்த பாரம்பரிய உரிமையையும் கோட்டை விட்டனர் கோட்டையை ஆண்ட அ.தி.மு.க. அரசினர்!
ஆளுநர் ‘வேந்தர்' என்பது தனி நியமனம் பெற்ற பதவி அல்ல. ex-officio என்பதால் அந்த அதிகாரம் அவ்வளவே! பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார்.
இதன்மூலம் பிற மாநிலத்தவர் - தேடல் குழுவில் இடம்பெறுவதும், அவர்களால் பரிந்துரை செய்யப்படும் பெயர்ப் பட்டியலில் - வழமைக்கு மாறாக - பிற மாநிலத்தவர் என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.காரர்களா கவோ, அனுதாபிகளாகவோ உள்ளவர்களாக இருப்பதும், அத்தகையவர்களையே நிய மிக்கிறார் தற்போதைய ஆளுநரான ‘வேந்தர்' என்பதும் எதைக் காட்டுகிறது?
பிரபல அண்ணா பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனத்திற்கு புதுடில்லியில் உள்ள ஜே.என்.யூ. என்ற ஜவகர்லால் நேரு பெயரில் உள்ள பல்கலைக் கழகத் துணைவேந்தரை, தேடல் குழு (Search Committee) உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை நியமித்துள்ளார் ஆளுநர்.
தமிழ்நாட்டில் கல்வி அறிஞர்களுக்குப் பஞ்சமா? இதை வன்மையாகக் கண்டிக் கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
2.4.2021
No comments:
Post a Comment