கவிஞர் கலி. பூங்குன்றன்
“கேட்பவன் கேனையனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது” என்பானாம்.
‘துக்ளக்‘ வகையறாக்கள், குருமூர்த்தி அய்யர்வாள்கள் அப்படித்தான் இறுமாப்போடு நினைத்துக் கிடக்கிறார்கள்.
இந்த வாரம் ‘துக்ளக்'கில் (14.4.2021 பக்கம் 6) ஒரு கேள்வி பதில்:
கேள்வி: ஸ்டாலின் பெரும்பாலான தேர்தல் கூட்டத்தில் ‘இது பெரியார் மண், அண்ணா பிறந்த மண், கலைஞர் வாழ்ந்த மண் என்கிறாரே! பிறந்த என்பதையும், வாழ்ந்த என்பதையும் எந்தக் கோணத்தில் ஸ்டாலின் பார்த்து இருப்பார்?
பதில்: கருப்புச் சட்டைப் போட்டு சபரி மலை போவது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, மொட்டை அடிப்பது, பழனிக்குக் காவடி எடுப்பது என்பது போன்ற ‘பகுத்தறிவு’ அற்ற காட்டுமிராண்டிப் பழக்கங்களை கடைபிடிக்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் திராவிட சிந்தனைகளுக்கு என்றோ ‘டாட்டா’ காட்டி விட்டார்கள். எனவேதான் ‘இது பெரியார் மண், அண்ணா பிறந்த மண், கருணாநிதி வாழ்ந்த மண், நம்புங்கள், நம்புங்கள்!’ என்று அடிக்கடி நினை வூட்டுகிறார் ஸ்டாலின். மறந்த ஒன்றைத்தானே நினைவூட்டுவோம்.- என்பதுதான் ‘துக்ளக்‘கில் திருவாளர் கு.மூர்த்தி அய்யரின் பதில்!
ஓ, அப்படியா! ‘துக்ளக்கில்’ வரும் ஹிந்துமகா சமுத்திரம் - சங்கராச்சாரியார்களின் பக்திப் பிரச்சாரம் - ‘தினமணி’, ‘தினமலர்’ வகையறாக்கள் எழுதும் ஆன்மிகங்கள், கீதோபதேசங்கள் எல்லாமே மக்கள் மறந்து விட்டார்கள்; அதனால் தான் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறார்கள் - எழுதுகிறார்கள் என்று அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டாரே!
ஆத்திரமும், வன்மமும் தலையைப் பொத்துக் கொண்டு வழியும் போது கண்களின் பார்வையும் பழுதுபடுகிறதே- நாம் என்ன செய்யட்டும்!
பார்ப்பனக் கூட்டம் திருவாளர் குருமூர்த்தி மூலம் தூண்டில் போட்டுப் பார்த்ததுண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வின் பாதையை மடை மாற்றம் செய்து பார்க்கலாம் என்ற நப்பாசை கொண்டு நாக்கை நீட்டிப் பார்த்தது.
இதோ கு.மூர்த்தி எழுதுகிறார்:
‘தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதும் கூட இல்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் திராவிட சமுதாய - அரசியல் நம்பிக்கைகளிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறிவிட்ட தமிழகத்துக்கு உகந்த சமுதாய - அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை. உதாரணமாக இப்போது எதற்கு ஹிந்தி எதிர்ப்பு? மேலும் அண்ணாவாலேயே கைவிடப்பட்ட திராவிடநாடு உள்பட பல கொள்கைகள் நீர்த்துப் போய் விட்டன என்றும் தெரியும். பிறகு இப்போது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இதையெல்லாம் பார்க்கும் போது மாறுவதா? வேண்டாமா? என்று ஸ்டாலின் குழம்புகிறார் என்று தோன்றுகிறது. 1963இல் அண்ணா, தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டுத் தைரியமாக முடிவெடுத்தது போல் தி.மு.க.வுக்கு புது வடிவம் கொடுக்க ஸ்டாலின் முன்வர வேண்டும். அண்ணா அந்த முடிவை எடுக்கவில்லையென்றால், இன்று தி.மு.க.வே இருந்திருக்காது. அதுபோல் தைரியமாக ஸ்டாலின் செய்தால் அவர் மாறுகிறார் என்று ஏற்கலாம். அப்படிப்பட்ட மாற்றம் தி.மு.க.வுக்கு நல்லது. தமிழ்நாட்டுக்கு அவசியம்.’
- (‘துக்ளக்‘ - 5.7.2017, பக்கம் 12 -13)
புரிகிறதா - பூணூல் கூட்டத்தின் நயவஞ்சகத் தூண்டில் எத்தகையது என்று!
‘நாத்திக அரசியல், தமிழ்ப் பிரிவினை வாதம் போன்ற தனது பழைய பாணியிலிருந்து தி.மு.க. மாறினால் அதற்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பது வெளிப்படை’
இன்னொரு கட்டத்தில் இப்படியும் எழுதிப் பார்த்தார்கள்.
ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிற்குப் பிறகு குருமூர்த்தி கும்பல்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நப்பாசையும், சபலமும் துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று நிர்வாணமாக ஓட்டம் பிடித்தது.
‘ஈரோட்டு மாநாடு தி.க.வின் நிலையை தி.மு.க. தழுவுவதைப் போல் தோன்றுகிறது’ என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டதே ‘துக்ளக்!’
இந்தக் கும்பல் இது போன்று அவ்வப்போது வெளியிடும் நயவஞ்சக நஞ்சுகளை முறிக்கும் வகையில் தளபதி ஸ்டாலின் என்ன செய்தார்? இவற்றை வளர விடக்கூடாது - இந்த விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தன்மையில் தி.மு.க.வின் சமரசமில்லாக் கொள்கை நிலைப்பாட்டை கோடையிடி போல் கொட்டி முழங்கினார்.
‘தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில், இந்தப் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் முழுமூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும், யாரையும் எதிர்கொள்வேன் - திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியவே முடியாது என்பதே என் உறுதியான நிலைப்பாடு’ என்று நியூஸ் 7 தொலைக்காட்சிப் பேட்டியில் பிடரியில், செவுளில் அறைந்தது போல் தி.மு.க.வின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் தளபதி மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கொள்கைப் பிரகடனமாகக் கூறியதுண்டே!
‘நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்’ (‘முரசொலி’, 2.12.2018) என்று சொன்னவரும் அவரே!
‘திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் எங்களுக்கு வழிகாட்டும்தான்.’
- தஞ்சாவூர் திராவிடர் கழக மாநில மாநாட்டில் 24.2.2019 தி.மு.க. தலைவர் பிரகடனப்படுத்தினாரே!
‘தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி’ என்றார் அறிஞர் அண்ணா. ‘தி.க.வும், தி.மு.க.வும் ரூபாய் நோட்டின் இருபக்கங்கள்’ என்றார் மானமிகு கலைஞர்.
தளபதி என்ன சொல்கிறார்? ‘மக்கள் இயக்கமாகவும், தமிழர்களின் உரிமைக்காப்பு இயக்கமாகவும், இந்த இயக்கத்தை தந்தைபெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மாற்றிய ஊர் இந்தச் சேலம். அந்த மக்கள் இயக்கம்தான் இன்றைக்குச் சமூக தளத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் களமாடிக் கொண்டிருக்கிறது’ என்றார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.
(‘முரசொலி’, 22.11.2020, பக்கம் 1)
இதற்கு மேலும் தி.மு.க.வுக்குத் தூண்டில் போட்டுப் பார்க்கலாம் என்று இன எதிரிகள் கருதுவார்களேயானால் அவர்களின் வெட்கமற்ற, மானமற்றத் தன்மையைத்தான் (இவற்றிலிருந்து இன்று வரை மாறவில்லை) வெளிச்சமாகக் காட்டும்!
ஒரு உண்மையான திராவிட இயக்கம் அதன் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்து வழியில் செயல்படக் கூடாது என்ற எதிரிகளா கருத்து தானம் செய்வது!
மிமி
‘துக்ளக்‘ எழுதிய இரண்டாம் பகுதி நகைச்சுவை விருந்துதான்.
பொதுவாக ‘துக்ளக்‘ - அதன் நிறுவனர் திருவாளர் சோ.ராமசாமிக்கு நாட்டில் என்ன பெயர் என்றால் ‘கோமாளி’ என்றுதான் பெயர்.
அதை அடிக்கடி தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டும் வருகிறது - இந்த வார இதழின் கேள்வி - பதில் பகுதியிலும் அதனைப் பளிச்சென்று அறியலாம்.
“கருப்புச்சட்டை போட்டு சபரிமலை போவது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, மொட்டை அடிப்பது, பழனிக்குக் காவடி எடுப்பது போன்ற ‘பகுத்தறிவு’ அற்ற காட்டுமிராண்டிப் பழக்கங்களைக் கடைபிடிக்கும் கோடிக் கணக்கான தமிழர்கள், திராவிட சிந்தனைகளுக்கு என்றோ ‘டாட்டா’ காட்டி விட்டார்கள்” என்று எழுதுகிறார் கு.மூர்த்தி. - (‘துக்ளக்‘, 14.4.2021, பக்கம் 6)
ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது. தீ மிதிப்பது, மொட்டை அடிப்பது, காவடி எடுப்பது, அலகு குத்துவது என்பதையெல்லாம் எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் செய்ய மாட்டான். இவற்றையெல்லாம் செய்வோர் யார் என்றால் நம் மக்கள்தான். இதனைத்தான் ‘காட்டு மிராண்டிகள்’ என்று குத்திக் காட்டுகிறார்.
உண்மையைச் சொன்னால் இந்த ‘துக்ளக்‘ கும்பல்தான் அசல் காட்டுமிராண்டிகள். பகுத்தறிவு என்றால் பித்த லாட்டம் என்று எழுதியவர் கு.மூர்த்தியின் குருநாதரான சோ.ராமசாமி ஆயிற்றே. - (‘துக்ளக்’ - 4.3.2009)
மனிதன் என்றால் அவனுக்கு ஆறாவது அறிவு உண்டு - அதுதான் பகுத்தறிவு என்பது. அந்தப் பகுத்தறிவையேப் பித்தலாட்டம் என்று சொல்லுபவர்கள் காட்டுமிராண்டி களாகத்தானே இருக்க முடியும்?
சரி, பக்தி பெருகி விட்டது. திராவிடச் சிந்தனைக்கு மக்கள் ‘டாட்டா’ காட்டிவிட்டார்கள் என்று கதைக்கிறதே - ‘துக்ளக்’. அந்தப் பக்தியின் யோக்கியதை என்ன? நாம் சொல்லவேண்டியது இல்லை. ‘துக்ளக்‘ சொன்னதையே திருப்பிச் சொன்னாலே போதுமானது.
கேள்வி: சென்னை தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?
சோ பதில்: ‘இவ்வளவு கட்டணம் கொடுத்தால் வெங்கடேசுவரப் பெருமாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒருநாள் தங்க வைக்கிறோம்‘ என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை. - (‘துக்ளக்‘ - 23.4.2006, பக்கம் 17)
திருப்பதி வெங்கடேச பெருமாளே காசுக்கு விலைபோய் விட்டார் என்று ‘துக்ளக்‘ சொல்லி விட்டதே!
இது போதாதா? பக்தியின் யோக்கியதை? இன்னும் இதோ இருக்கிறது....
கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?
சோ பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்ல தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிய வேண்டும். (‘துக்ளக்‘, 6.10.2016, பக்கம் 23)
யாரைச் சொல்லுகிறார் சோ? அவர்களின் ஜெகத்குருவான சங்கராச்சாரியாரையும், ஜீயர்களையும் தானே சொல்லுகிறார் - ஒரு பொய்யை அருள்வாக்காக மாற்றுவார்கள் என்பதற்கு; நாஸ்திகம் குன்றி, ஆஸ்திகம் வளர்கிறது என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொள்கிறார் கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை. ஆனால் அவரின் குருபீடமான சங்கராச்சாரியார் என்ன சொல்லுகிறார்?
‘யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும் கூடப் பழைமை வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய், எல்லாம் ஒன்றாகி விட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிறகுதான், இப்படி மத உணர்ச்சிக் குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்பது தெரிகிறது; சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது’ - மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. (‘தெய்வத்தின் குரல்’, வர்ண தத்துவம் என்ற தலைப்பில் பக்கம் -62)
எல்லாம் ஒன்றாகி விடக்கூடாது - எந்த வகையிலும் சமத்துவம் வந்து விடக்கூடாது என்பதுதான் ஆஸ்திக மாகவும், இதற்கு எதிரானதுதான் நாஸ்திகம் என்பதையும் ‘ஜெகத்குரு’ ஒப்புக் கொண்டு விட்டாரே!
நாத்திகம் வளர்வதையும் ஒப்புக் கொண்டு விட்டாரே!
அப்படியென்றால் நாட்டில் வளர வேண்டியது நாஸ்திகமா? ஆஸ்திகமா? பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று கருதுவோர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது?
உண்மையைச் சொல்லும் போது தடுமாற்றம் இருக்காது. ஆனால் பொய்யைக் கூறும் புளுகர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கடைசி வரை அவற்றைக் காப்பாற்ற முடியாது என்பது உளவியல்.
அப்படி இருப்பது தான் இந்த பார்ப்பனக் கூட்டம். அதற்கும் ஓர் எடுத்துக்காட்டு. அதுவும் அவர்கள் எழுதிய ஆதாரத்திலிருந்தே.
‘பெரியாரின் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (INTELLECTUAL PROPERTY) பெரியாரு டையது அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் வாழ்ந்த சாருவாக முனி, குறிப்பாக ஆன்மிக மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சமஸ்கிருதத்தில் என்ன கூறினாரோ அதைத்தான் பெரியார் இங்கு தமிழில் கூறினார் என்றக் கருத்தை ‘விடுதலை’ மறுக்கவில்லை.’ - (‘துக்ளக்‘ 16.5.2018, பக்கம் 22, 23)
அறிவுசார் கருத்துகளை சொன்ன சாருவாக முனி மற்றும் சமஸ்கிருதத்தில் கூறப்பட்டதைத்தான் பெரியார் சொல்லுகிறார் என்று கூறுகிறது ‘துக்ளக்.’ அப்படியென்றால் பெரியார் கருத்தை ஏன் எதிர்க்க வேண்டும் - கொச்சைப்படுத்த வேண்டும்? ஏன் உளற வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?
பக்தி பெருகி விட்டது, திராவிடச் சிந்தனைக்கு மக்கள் ‘டாட்டா’ சொல்லி விட்டார்கள் என்று கிராப்புக்குள் குடுமியை மறைத்து வைத்திருக்கும் இந்தக் கூட்டம் கடைசியில் தந்தை பெரியாரிடம் சரணடைந்ததை என்ன சொல்ல!
கேள்வி: தமிழ் மக்கள் எந்த விஷயத்தில் தனித்துவம்?
பதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களது தனித்துவம். (‘துக்ளக்,’ 19.2.2020, பக்கம் 29)
ஆம், துக்ளக்கே, குருமூர்த்திகளே, தினமலர்களே, சங்கரமடமே - இதுதான் தமிழ் மக்களின் தனித்தன்மை. தந்தை பெரியாரின் பூமி என்பது இதுதான். இதனை குருமூர்த்திகளே ஒப்புக் கொண்டு சரணடைந்து விட வில்லையா?!
இதற்கு மேல் வீண் சவடால் என்ன வேண்டிக் கிடக்கிறது? - ‘கப்-சிப்!’ அய்ம்புலன்களைப் பொத்திக் கிடப்பதைத் தவிர இந்தக் கும்பலுக்கு வேறு வழியில்லை - இல்லவே இல்லை.
No comments:
Post a Comment