வரலாற்றில் இடம்பெற்ற யூத இன எதிர்ப்பும் - வரலாற்றையே மாற்றிட எத்தனிக்கும் பார்ப்பனர் எதிர்ப்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 24, 2021

வரலாற்றில் இடம்பெற்ற யூத இன எதிர்ப்பும் - வரலாற்றையே மாற்றிட எத்தனிக்கும் பார்ப்பனர் எதிர்ப்பும்!

ஜெர்மானிய யூதர்களிடம் காணப்பட்ட, அவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட சில பழக்க வழக்கங்கள், அணுகுமுறைகள், மற்ற சமுதாயத்தினரின் நியாயமான நலனுக்குப் புறம்பாக இருந்தன. ஆண்டாண்டு காலமாக, யூதர்கள், தாம் கடைப்பிடித்து வருவதை பெருமையுடன் கருதும் சமூக நிலைமைகளால் அவர்கள்மீது ஒருவகையான எதிர்ப்புணர்வை மற்ற சமுதாயத்தினர் கொண்டிருந்தனர். இந்த நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தித்தான் ஹிட்லர் யூதர்களைத் தாக்க ஆரம்பித்தான். நாட்டை விட்டு வெளியேறி, தங்களுக்கு தாயகம் எது என்று புலம்பும் நிலைக்கு யூதர்களைக் கொண்டு சென்றான். யூதர்கள் மீது மற்றவர் காட்டும் வெறுப்பை மூலதனமாக்கி வன்முறைக் கருவி கொண்டு கடுமையாக யூதர்களை கொன்று ஒழித்தான். யூதர்களிடம் காணப்பட்ட பிறசமுதாயத்தினர் பற்றிய அக்கறையின்மை கண்டனத்துக்கு உரியது என்றாலும், யூதர்கள் மீது ஹிட்லர் காட்டிய வரன்முறை அற்ற வன்முறை சார்ந்த ஒழிப்பானது யூதர்கள் மீது உலகினரிடம் ஒரு வகையான அனுதாபத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்த மண்ணில், யூதர்களைப் போலவே மற்ற சமுதாய மக்களின் மீது அக்கறையின்மையோடு அவர்களை அடக்கி வைத்து, இழிவுபடுத்தி, தம்மை அனைவரைக் காட்டிலும் உயர்ந்தோராகத் தம்மைக் காட்டிவருபவர்கள் பிராமணர்கள் என பிரகடனப்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்கள். யூதர்கள் காட்டிய மற்ற சமுதாயத்தினர் மீதான அக்கறையின்மை, அவர்களது அளவில் மட்டமாக நினைத்த சமூகக் கொடுமை கண்டிக்கத்தக்கது. பார்ப்பனர்கள் காட்டும் அடக்கு முறை அளவினை ஒப்பிடும் பொழுது, பார்ப்பனர்கள் மற்றவர்களை அடக்கி ஆள கடவுள், மதம் ஆகியவைகளைப் பயன்படுத்திய அளவிற்கு யூதர்களோ - உலகின் இதர இனமக்களோ பயன்படுத்தியதில்லை.

மற்ற சமுதாயத்தினர் மீது அக்கறையில்லாமல் நடந்துகொண்ட யூத இனத்தை, சமுதாயத்தில் தம்மைத் தவிர பிற சமுதாய மக்களை அடக்கி வைத்து, அடிமைப்படுத்தி, இழிவுபடுத்தி, கல்விகற்பதை மறுத்த பார்ப்பனர்களோடு ஒன்றாகக் கருதுவது மடுவையும் மலையையும் ஒப்பிடுவது போலாகும். மனிதநேயமற்ற வகையில் மட்டுமே நடந்து கொண்ட யூதர்களை, மனிதநேய சிந்தனை அறவே அற்ற பார்ப்பனர்களுடன் ஒப்பிடவே முடியாது. ஆண்டாண்டு காலமாக வஞ்சித்து வாழ்ந்து வரும் பார்ப்பனர் மீதான எதிர்ப்பை யூத இன எதிர்ப்புடன் இணைத்துப் பார்ப்பது அறிவீனம் மட்டுமல்ல; ஆதிக்க அறிவாளிகளின் திசை திருப்பும் திருப்பணியே. யூத இனத்தின் மீதான எதிர்ப்பானது, யூத இன மக்களை சித்தரவதை செய்து கொன்ற ஹிட்லரின் நடவடிக்கைகளால் தடயம் இல்லாமல் போய்விட்டது.

யூத இனத்திற்கு ஏற்பட்ட எதிர்ப் பைவிட பார்ப்பன எதிர்ப்பில் உள்ள நியாயம் பல மடங்கு பெரிது. யூத இனத்தை அழிக்க முற்பட்டது போல பார்ப்பனர் ஒழிப்பை யாருமே செய்ய முற்படவில்லை; செய்யக் கூடாது என்பதே மனிதநேயமுள்ள அனைவரின் நிலைப்பாடாகும். பார்ப்பனர்கள், நியாயத்தை உணர்ந்து, மற்றவர்களை இழிவுபடுத்திடும் பழக்கவழக்கங்களை, அடையாளங்களை ஒழித்து அவர்கள் மற்ற சமுதாய மக்களையும் சமமாகக் கருதி வாழ்ந்திடக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நாள் வரை பார்ப்பனர் எதிர்ப்பு என்பது மனிதநேயமுள்ள எந்த மனிதராலும் காட்டப்பட வேண்டியது. சமூக அடக்கு முறையின் அடையாளமாக விளங்கும் பார்ப்பனர்களை, கருத்தியல் ரீதியில் முழுமையாக எதிர்த்த புரட்சியாளர் தந்தை பெரியார்தான். வன்முறைக்கு துளியளவும் இடம் தராமல், கருத்துச் சமர் புரிந்து அடக்குமுறைக்கு ஆளான மக்களின் எழுச்சிக்கு, ஏற்றத்திற்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார்.

யூதர் எதிர்ப்பின் விளைவு ஹிட்லரின் சர்வாதிகாரத்தில் வரன்முறையற்ற உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால் பார்ப்பன எதிர்ப்பிற்கு, பார்ப்பன ஆதிக்கத்தை தன் வாழ்நாள் முழுவதும் மக்களைச் சந்தித்து, உரையாடி அமைதியாக வன்முறையற்ற வகையில் போராட்டம் கண்டு, சட்டத்தையே எதிர்க்கும் நிலையானாலும் சளைக்காது அமைதியாக போராட்டம் நடத்தி வெகு மக்கள் மீது ஆட்சியாளர்களின் கவனத்தினை திருப்பி, அடுக்கடுக்காக சாதித்துக் காட்டியவர் தந்தை பெரியார். பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேர் அசைக்கப்பட்டு பலவீனப்பட்டது முதன்முதலாக தந்தை பெரியாரால்தான். பிராமணர் எனும் பார்ப்பன அடையாளத்தை எதிர்ப்பதில் - எதிர்த்த மக்களை அணிதிரட்டுவதில், சளைக்காத போராளியாகவே வாழ்நாள் முழுவதும் களம் கண்டார். அப்படிப்பட்ட தந்தை பெரியாரை பார்ப்பன எதிர்ப்பாளர் எனும் அடித்தளத்தில் யூத எதிர்ப்பைக் காட்டிய ஹிட்லருடன் ஒப்பிடுவது பார்ப்பனத் தந்திரத்தின் ஒரு அணுகுமுறையே.

இந்த மண்ணில் எழுச்சி பெற்றுவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே. ஹிட்லரின் கொள்கைக்கும், தந்தை பெரியாருக்கும் முடிச்சுப்போட முனைகின்றனர். ஆட்சி அதிகாரம் சார்ந்த அணுகுமுறைக்கு ஆசைப்படாமல் ஆட்சி அதிகாரத்தின் பக்கமே பற்றுவைக்காமல் தந்தை பெரியார் ஆற்றிய அரும்பணியினை கொடுங்கோலன் ஹிட்லரின் அழிவுப் பணியுடன் ஒப்பீடு செய்ய முனைபவர்கள் மனநோயாளிகளே! மனநோயாளிகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை; பரிதாபத்திற்கு உரியவர்களே. இப்படி விளக்கம் அளிப்பது மனநோயாளிகளுக்கு அல்ல; மனநோயாளிகளை மகா புத்திசாலிகள் எனக் கருதும் கல்வி கற்றும் சமூகநிலைமையைக் காண மறுக்கின்ற உண்மையான பாமரர்களுக்காகவே!

No comments:

Post a Comment