கேள்வி : தாங்கள் 88 வயதில் தொடர்ந்து 18 நாட்களுக்கும் மேலாக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை செய்துள்ளீர்கள். இது எப்படி தங்களால் சாத்தியமாகிறது? கடும் கரோனா காலம், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மருத்துவர் ஆலோசனைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தங்களுக்கு சோர்வோ - அச்ச உணர்வோ ஏற்படவில்லையா?
- கு.கணேஷ், கடப்பாக்கம் &
சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: எப்போதும் எனது ஆசான் 95 வயதில் - மூத்திரம் வடியும் வாளியோடு தோழர்களின் தோளில் கையைத் தாங்கி நாளும் சலியாது உழைத்து, இறுதி நாட்களிலும் போராட்டக் களத்தில் நின்று வென்ற தலைவரைப் பின்பற்றுகிறேன் என்று கூற அதன் மூலம் என்னைத் தகுதியாக்கிக் கொண்டேன் என்ற உணர்வு எனக்கு சோர்வைத் தரவில்லை. எதிரிகளின் வியூகம் நான்விறுவிறுவென்று தேர்தல் பிரச்சார களத்தில் சலிப்பின்றி நிற்க ‘செயலியாகப்’ பயன்பட்டது.
எனது தோழர்கள் என்ற முகக்கவசமும் அணிந்ததால் எந்த சங்கடமும் ஏற்படவில்லை.
கேள்வி : ஒரு நட்சத்திரப் பேச்சாளர்
- நாடாளுமன்ற உறுப்பினர் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அடிமனதில் இருந்து மன்னிப்புக் கேட்கிறேன் என்று ஊடகங்கள் வாயிலாக தெரிவித்த பிறகும் தேர்தல் பரப்புரை செய்வதற்கு தடை விதித்தது முறையான செயலா?- எஸ். பத்ரா, வந்தவாசி.
பதில்: தேர்தல் ஆணையத்தின் சார்பு நடவடிக்கைகள் பற்றி ராகுல்காந்தியின் விளக்கத்தை ‘தேர்தல் கமிஷன்’(Election ‘Commission’) என்ற டுவிட்டர் வாசகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் - புரியும். மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி - அங்கு இங்கு எனாதபடி எங்கும்!
கேள்வி : ஒரு வேட்பாளர் இன்னொரு வேட்பாளரை அடிப்பேன், குத்துவேன் என்று மக்கள் மத்தியில் ஒருமையில் அநாகரிகமாக பேசுவது தரம் தாழ்ந்த அரசியல் ஆகாதா?
- மல்லிகா, மாங்காடு.
பதில்: பா.ஜ.க. அரசியல் எப்படிப்பட்டது என்பதை, அய்.பி.எஸ். படித்து பணியாற்றியவரைக் கூட கெடுக்கும் தன்மையான விஷக்கிருமி, வன்முறை வளையம் என்பதனை உலகுக்குப் புரியவைத்த அவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.கேள்வி : படித்த பண்பாளர்கள் நிறைந்த சென்னை மாநகரில் குறிப்பாக அண்ணா நகரில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?
- கி.ச.பொன்மணி, பூவிருந்தவல்லி.
பதில்: பல படிச்‘சுவர்கள்’ எப்போதும் ஈசிசேர் விமர்சகர்கள் - மேனி குலுங்கா மேட்டிமை மனப்பான்மையினர் - எனவே கரோனாவை இங்கு காரணம் காட்டி கடமை தவறினர், அவ்வளவுதான்! வழமைதான் இது - வியப்பல்ல!
கேள்வி : ஓட்டுக்குப் பணம் தரவில்லை என்று சாலை மறியல் செய்யும் அளவிற்கு மக்களை ஆட்படுத்தி இருப்பது சமூக அவலம் அல்லவா?
- ஒ.வெண்ணிலா, விழுப்புரம்.
பதில்: நம்நாட்டுத் தேர்தல் ஆணையம் தனது கண்களை அகலமாக விரித்துக் கொண்டுதானே பார்த்தது, யாரையாவது தட்டிக்கேட்டதா? இந்த ஜனநாயகம் வாழ்க வளர்க - என்று கெட்டிமேளத்தோடு கொட்டி முழக்குங்கள்!
கேள்வி : நம் மக்களிடம் திராவிட இயக்கச் சித்தாந்தங்களை நன்கு புரிய வைத்து விட்டால், தேர்தல் நேரத்தில் இவ்வளவு சிரமப்படாமல் ஊடகங்கள் வாயிலாகவே மக்களிடம் வாக்கு கேட்கலாம் அல்லவா?
- முகிலன், முடிச்சூர்.
பதில்: முன்னது நடந்தால் - நோய் எதிர்ப்பு சக்தி உடலில் நிரம்ப இருந்தால், நோய்க்கிருமிகள் நுழையவே முடியாது என்பது உண்மைதான். தேர்தலில் போட்டியிடும் பலரும் இன்றும் அந்நிலைக்கு பக்குவமாக வில்லையே, என் செய்வது?
கேள்வி : மீண்டும் பொது முடக்கமா - தாங்குமா நாடு? மாற்று வழி என்ன?
- வி.சுரேஷ்குமார், ஊற்றங்கரை
பதில்: பொது முடக்கம் என்றால் நாடும் மக்களும் தாங்க மாட்டார். அது நோயை விட கடுமையான சிகிச்சையாக முடிந்து விடக்கூடும்!
கேள்வி : இத்தனை அவசரமாக அடுத்த மூன்றாண்டுகளுக்கான துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்கிறாரே ஆளுநர்?
- முகிலா, குரோம்பேட்டை
பதில்: பச்சை பார்ப்பன - ஆர்.எஸ்.எஸ். புத்தியின் வெளிப்பாடு - தேர்தல் முடிவு வர 3 வாரங்கள் இருக்கும் நிலையில் இப்படி செய்வது அரசின் முறைகேடு - அதிகார துஷ்பிரயோகம்! “பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை” என்று ஒரு பழமொழியை தந்தை பெரியார் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது!
கேள்வி : இனநலனை அணுகுவதில் பாசிசப் போக்கு இருத்தல் நலமா?
- பிரபுகுமார், பள்ளிப்பாளையம்
பதில்: கூடாது. பிறகு ஹிட்லரின் Holocaust Concentration Camps தான் முடிவு! நாம் மனிதர்கள் - அப்படி நடத்துவது கூடாது.
கேள்வி : வரலாற்றில் தங்களுக்குப் பிடித்த தமிழ் மன்னர் யார்?
- இளவரசன், காரைக்குடி
பதில்: கரிகாற் பெருவளத்தான் (கல்லணை கட்டிய மன்னன்)
No comments:
Post a Comment